” உன்னால் முடியும்” : உணவு தேடலில் உருவான தொழில் வாய்ப்பு ….

படித்து முடித்ததும் வேலை தேடி சென்னை வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவராக சென்னை வந்தவர் வினோத். சொந்த ஊர் திருப் பத்தூர் அருகில் உள்ள கிராமம். படித்தது எம்டெக் பயோ டெக்னாலஜி. வீட்டு உணவு சாப்பிட்டே பழகியவருக்கு, தங்குமிடத்துக்கு அருகில் உள்ள ஓட்டல் உணவு சரி யில்லாததால் பல அவஸ்தைகள். அதன் பிறகு யோசித்ததுதான் வீட்டில் சமைக்கும் உணவுகளை தேவைப்படுபவர்களுக்கு ஒருங்கிணைக்கும் இணையதளம்.

ஒரு வருட திட்டமிடலுக்குப் பிறகு, உணவு சமைத்து தரும் வீடுகளையும், தேவைப்படும் வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைத்து வெற்றி பெற்றுள்ளார். வளரும் தொழில்முனைவோரான இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் பகிர்ந்து கொள்கிறார்.

வேலை தேடி வந்த புதிதில் மேடவாக்கத்தில் தங்கினேன். வீட்டு சாப்பாட்டுக்கு பழகிய எனக்கு அங்கிருந்த ஓட்டல் உணவை சாப்பிட முடியவில்லை. அந்த பகுதியில் சிறிய ஓட்டல்கள்தான் இருந்தன. தரமான பெரிய ஓட்டல்களும் கிடையாது. பெரிய ஓட்டல்கள் இருந்தாலும் சாப்பிடும் வசதி இல்லை.

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பல பேச்சிலர்களும் இந்த ஓட்டல்களில்தான் சாப்பிடுவார்கள். சப்பாத்தி சரியில்லை என்று புகார் செய்தால் நாளைக்கு சரி பண்ணிடுறோம் தம்பி என்று அனுப்பி விடுவார்கள், அடுத்த நாளும் அதே போல் இருக்கும். திரும்ப புகார் செய் தால் இஷ்டம் இருந்தால் சாப்பிடுங்கள் என்று முகத்தில் அடித்ததுபோல பதில் வரும். இவர்களை விட்டால் வேறு வழியும் இல்லை. சொந்தமாக சமைத்து சாப்பிடலாம் என்று முயற்சி செய்தால், எல்லோருக்கும் நேரம் ஒத்துழைக்க வில்லை.

தங்கியிருந்த பிளாட்டின் ஐந்து வீடுகளில் நாங்கள் மட்டும்தான் பேச்சிலர்கள். நான்கு குடும்பங்கள் ஆளுக்கு ஒரு நாள் எங்களுக்காக எக்ஸ்ட்ராவாக சமைத்து கொடுத்தால் நிம்மதியாக இருக்கலாம் என அவ்வப்போது நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். ஆனால் இந்த யோசனை சரியான தீர்வாக இருக்கும் என்று எனக்குப் பட்டது.

வீட்டு சாப்பாடு வழங்குகிறோம் என பல உணவகங்கள் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுக்கின்றன. ஆனால் இவர் களும் கிட்டத்தட்ட ஒட்டல் போலவே ஒரு இடத்தில் சமைத்து ஆர்டர்களுக்கு ஏற்ப டெலிவரி செய்கின்றனர்.

ஆனால் எனது திட்டம் வீடுகளில் சமைப்பதையே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது. அதாவது ஒரு வீட்டில் தினசரி ஐந்து சாப்பாடு சமைத்து தர முடியும் என்றால் அதை வாங்கி வாடிக் கையாளர்களுக்குக் கொடுப்பது. பல குடும்பங்கள் இப்படி இணைந்தால் பேச்சிலர்களில் உணவு சிக்கல் தீரும் என்பது எனது எண்ணம். இதற்காக வேலையிலிருந்து விலகி ஒரு வருடம் ஆய்வு, ஆரம்ப வேலைகளில் இறங் கினேன்.

இணையதள உருவாக்கம், மார்க் கெட்டிங், ஒருங்கிணைப்பது போன்ற வேலைகளோடு நிறுவனத்தை பதிவு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ப்ரம்எஹோம் இணையதளத்தை அறிமுகப்படுத்தினேன்.

எங்களது இணையதளத்தில் உணவுகளை ஆர்டர் கொடுப்பதற்கு என்று தனியாக உணவு பட்டியலோ, விலையோ கிடையாது. குடும்பத் தலைவிகள் தாங்களால் என்ன சமைக்க முடியும், அதற்கான விலை என்ன என்பதை முன்கூட்டியே பதிவு செய்து விடுவார்கள். வாடிக்கையாளர்கள் அவரது மெனுவை பார்த்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் கேரள குடும்பம் இணைந்தால் கேரள உணவும், பெங்காலி குடும்பம் இணைந்தால் பெங்காலி உணவும் அவர்களது பாரம்பரிய முறைப்படியே கிடைக்கும்.

குடும்பத் தலைவிகள் தாங்கள் சிறப்பு உணவுகள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.

உணவு சமைத்து தர விரும்புவோரின் சமையல் திறன், வீடுகளின் கிச்சன், அவர்களது வாழ்க்கைதரம், சமைக்கப் பயன்படுத்தும் தண்ணீர் ஏரியா என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மேற்கொள்கிறோம். இவர்களுக்கு கிடைக் கும் ஆர்டர்களிலிருந்து கிடைக்கும் கமிஷன் தான் எங்களது வருமானம்.

ஆரம்பத்தில் பேச்சிலர்களை குறி வைத்தே இதை தொடங்கினேன். ஆனால் தற்போது வயதானவர்கள்தான் அதிக வாடிக்கையாளர்களாக இருக்கின் றனர். தற்போது நேரடியாக எட்டு பேர் வேலைபார்க்கிறார்கள்.

சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் சுயமாக சம்பாதிக்க வைத்துள்ளேன். உணவு சார்ந்த தொழில் என்பதால் மிகுந்த கவனமும் பொறுப்பும் இருப்பதை உணர்கிறேன்.

தவிர நானே தொழில்முனைவோராக இருந்து, குடும்பத்தலைவிகள் பலரும் சுயமாக சம்பாதிக்க பாலமாக இருக்கி றேன் என்கிறபோது பொறுப்பு பல மடங்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார். இவருக்கு ஏற்பட்டது உணவு பசி மட்டுமல்ல… அதுக்கு மேலே என்கிறது அனுபவம்.

maheswaran.p@thehindutamil.co.in

Source …….நீரை மகேந்திரன்  in http://www.tamil.thehindu.com

Natarajan

One thought on “” உன்னால் முடியும்” : உணவு தேடலில் உருவான தொழில் வாய்ப்பு ….

  1. M.Rajendhiran's avatar M.Rajendhiran March 14, 2016 / 9:11 am

    very good service.

Leave a comment