சென்னை டா! …. இது நம்ம சென்னை டா!!!!

chennai day

கி.பி. 1639 ல் இதே ஆகஸ்டு 22 ஆம் நாள் தான் பிரான்சிஸ் டே  மதராஸபட்டினத்தை விஜயநகர மன்னரின் ஆளுகையின் கீழிருந்த வந்தவாசி பகுதியின் பிரதிநிதி  தாமர்ல வேங்கடபதியிடம் இருந்து சொற்பத்  தொகைக்கு விலைக்கு வாங்கினார். சென்னைப்பட்டினம் விலைக்கு வாங்கப் பட்ட அந்த நாளை  ஒட்டி  அடிப்படையில் சென்னைவாசியான பத்திரிகையாளர் வின்சென்ட் டிசோசா மற்றும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா இருவரது முயற்சியால் ‘சென்னை ஹெரிடேஜ் பவுண்டேஷன்’ மூலமாக 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 ஆம் நாள் ’சென்னை டே’ வாக அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு வருடமும் ’சென்னை டே’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் சென்னை மக்கள் ‘சென்னை டே’ வைத் தங்களுக்குப் பிடித்தமான விதவிதமான வகைகளில் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். சென்னைக்குள் கொண்டாட சென்னையைக் கொண்டாட விஷயங்களா இல்லை?! ஒன்றா இரண்டா நினைத்து நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்!

50 களின் பழைய ஓரணா நாணயங்கள் முதல் 60 களின் கிராமஃபோன் ரிகார்டுகள், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் சென்னை கார்ப்பரேஷன் ரிப்பன் மாளிகை, இன்றும் பழமை விரும்பிகளின் புராதன சேகரிப்பில் பெருமிதம் காட்டும் கிரஹாம்பெல் காலத்திய கையால் சுழற்றப்படும் டயல் டெலிபோன்கள், காசிமேட்டின் கட்டுமரங்கள்,மோட்டார் போட்டுகள், சென்னை வாழ் மக்களின் சந்தோசம், துக்கம், வருத்தம், கொண்டாட்டம் அனைத்துக்கும் தோன்றாத்துணை நிற்கும் ஈடு இணையற்ற மெரினா பீச், சற்று முரட்டுத்தனமாக தோற்றமிருப்பினும் பெரும்பாலும் நட்பு முகம் காட்டும்  சென்னை ஆட்டோக்காரர்கள், ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் சென்னைத் தெருக்களை நிரப்பி அவசர அவசரமாக சைக்கிளிலிருந்தவாறு  செய்தித்தாள்களை விசிறியடித்துச் செல்லும் பேப்பர் பையன்கள், சரவண பவன் சாம்பர் இட்லி, நெய் ரோஸ்ட்,  கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர் பாகு அடடா  சொல்லித் தீராது இன்னுமிருக்கிறது!

மக்கள் கூடும் இடமெங்கும் குளுமையாய்  கடை விரிக்கும்  இளநீர் வியாபாரிகள், சுடச் சுட ஃபில்டர் காப்பி, இனிக்க இனிக்க கரும்பு ஜூஸ், நினைவுகளை கிளறிச் செல்லும் அண்ணா மேம்பாலம், ஜெமினி மேம்பாலம், சதா காதோடு உரசியவறு கதை பேசிக் கடக்கும் எலக்ட்ரிக் டிரெயின் சகட ஓசைகள், அத்தனைக்கும் அப்பால் என்றென்றைக்கும் சென்னைக்கு அதன் உயிர்ப்பான வண்ணம் அளிக்கத் தயங்காத குடிசை மாற்று வாரிய பகுதிகளின் குஷியான குழந்தைப் பட்டாளங்கள்.

இன்னும்…இன்னும் இன்னுமிருக்கிறதே சொல்ல… சென்னைச் சாலைகளின் மீன்பாடி வண்டிகள், இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் இங்கே பிழைப்பிற்காக வந்தாலும் தமது மரபை விடாது தினுசு தினுசாக தலைப்பாகை கட்டிய பல இனத்து இளையவர்கள், முதியவர்கள், எப்போதும் ஜனங்களின் சல சலப்பில் திருவிழா மூடில் கல கலக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு, வெளிநாட்டினரும் வந்து கைகளால் பிசைந்து அள்ளி உண்வருந்த விரும்பும் திருவல்லிகேணி காசி விநாயகா மெஸ், பூ கட்டும் வித்தை கற்க விரும்பும் மயிலை கபாலி கோயில், இன்றைக்கு இடிக்கப்பட்டு விட்டாலும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக எப்போதும் மக்களின் மனதில் மறவாது இடம் பிடிக்கும் கடற்கரை சீரணி அரங்கம். எல்.ஐ.சி கட்டிடம், சாந்தோம் சர்ச்… கடவுளே!

லிஸ்ட் இன்னும் முடிந்தபாடில்லை சென்னை என்றதும் பழமையும் புதுமையாக நம் மனம் நிறைக்கும் ஞாபகங்கள் தான் எத்தனை எத்தனை?! சென்னை வாழ் மக்களுக்கும் சரி இங்கே வந்து செல்லும் அயல் மாநிலத்து  அல்லது அயல் நாட்டு விருந்தினர்களுக்கும் சரி சென்னை எப்போதும்  தன் கலாச்சார அடையாளங்களை இழக்க விரும்பாத அதே சமயம் புதுமைகளையும் பெருமிதத்தோடு  அரவணைத்துக் கொள்ளும் நவ நாகரீக யுவதியாகவே காட்சியளிக்கிறது. இந்த நகரத்துக்குள் ஒரு முறையேனும்  வந்து போன ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளன்போடு கூடிய தோழமையை, இதுவும் எனது சொந்த வீடென எண்ணிக் கொள்ளும் நெருக்கத்தை இந்த நகரம் தன் இரு கரங்களிலும் அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது என்பதற்கு நீடித்த சாட்சியங்களாக நிற்பவை தான் மேலே சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும். அதனால் மட்டுமே கடும் போக்குவரத்து நெரிசல், சுழற்றி அடித்த சுனாமி, மீட்டெடுக்க முடியாத மழைக்கால கோர இழப்புகள் போன்ற சென்னையின் சில விரும்பத் தகாத அம்சங்களையும் கூட மக்கள் சகித்துக் கொள்ளப் பழகி விட்டனர். அந்தக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படுமானால் சென்னை எப்போதும் சிங்காரச் சென்னை தான். கபாலி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் “இது சென்னை டா! நம்ம சென்னை டா” .

சென்னையின் பல்வேறு வண்ணம் காண  கீழே உள்ள வீடியோ இணைப்புகளை கிளிக்குங்கள்…

https://youtu.be/GuPcXuwXhbU

சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தில் வரும் பாட்டி சொல்வது போல குளிக்க, துவைக்க, சாப்பிட, சுத்தம் செய்ய என  எல்லா வேலைகளுக்கும் இந்தியர்களான  நாம் நமது கைகளையே பயன்படுத்துகிறோம், இது வெளிநாட்டினருக்கு எப்போதும் ஆச்சர்யம் தரும் விசயம். கீழே உள்ள வீடியோ இணைப்பில் சென்னை டே வை முன்னிட்டு திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ்ஸில்  வெளிநாட்டுக் குடும்பம் ஒன்று நமது இந்தியச் சாப்பாட்டை கைகளால்  பிசைந்து ரசித்து ருசித்து உண்பதைப் பாருங்கள்.

மயிலை கபாலி கோயிலில் பூ கட்ட கற்றுக் கொள்ளும் வெளிநாட்டுப் பெண்.

 

Source….By கார்த்திகா வாசுதேவன்  in  www.dinamani.com

Natarajan

Leave a comment