” என்னால் பேச முடியுமா …எழுதுவது வேறு ..பேசுவது வேறு….”

எத்தனையோ விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் – பத்திரிகைகளில் பணி புரியும்போதும், சொற்பொழிவு துறைக்கு வந்த பிறகும் மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் நடந்திருக்கின்றன… நடந்து வருகின்றன… எல்லாம் நம்மையும் தாண்டிய ஒரு சக்தியின் அருள்தான்!

தெய்வமாகட்டும்; மகான் ஆகட்டும். நமக்கு ஒரு அனுக்ரஹம் இருந்தால்தான், சில நல்லதுகளைப் பண்ண விடும். இல்லாவிட்டால், நாம்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையைப் பண்ணிக் கொண்டிருப்போம் – எதைப் பற்றியும் சிந்திக்காமல்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தியோகம்.

கணக்கு எழுதிக் கொண்டிருப்போம். கம்ப்யூட்டர் தட்டிக் கொண்டிருப்போம். ஆட்களை மேய்த்துக் கொண்டிருப்போம். இல்லை நம்மை யாராவது மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பகவானுக்கே சேவை செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு உத்தியோகம்.

பகவான் பேரையே சொல்லிக் கொண்டு வாழ்வது, பிழைப்பு நடத்துவது எப்பேர்ப்பட்ட உத்தமமான பணி..

விகடனிலும், திரிசக்தியிலும் சில காலம் இது எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து சொற்பொழிவு துறையில்…

திடீரென்று பழைய சம்பவம் ஒன்று என் மனதில் ஏதோ ஒரு ஃப்ளாஷ் பேக் போல் தோன்றும். என் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை மீண்டும் அசை போட்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி நிறைய இருக்கு.

‘எப்படியும் இந்த விஷயத்தை இன்று இரவு பதிவு செய்து விட வேண்டும்’ என்று வெளியில் எங்கோ ஒரு ஷூட்டிங்கிலோ, சபாவிலோ இருக்கும்போது தீர்மானம் செய்வேன். வீட்டுக்கு வந்ததும், ஒரு ஆகாரத்தை உள்ளே தள்ளி விட்டு, முகநூல் மற்றும் ஜிமெயிலை கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு, ஒரு சில தொடர்களுக்கும், உபன்யாசத்துக்கும் தகவல்களை சேகரித்து வைத்து விட்டுப் படுக்கப் போய் விடுவேன்.

இதை சோம்பேறித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். 24 மணி நேரத்தில் என்னால் பலதுகளை பண்ண முடியவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது சில வேளைகளில் பதிவிடுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இன்று மதியம் பெங்களூர் நண்பரும் மகா பெரியவா பக்தருமான திரு கார்த்தி நாகரத்தினம் அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்.

நான் கிட்டத்தட்ட மறந்து விட்டேன். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அப்படியே நினைவுக்கு வந்தது.

எப்படி நினைவுபடுத்தினார் தெரியுமா?

மகா பெரியவா சொன்ன பொன்னான ஒரு செய்தியை எனக்கு இன்பாக்ஸில் மெஸேஜ் பண்ணி விட்டு, ‘அண்ணா… நினைவிருக்கா… 2012 அக்டோபர்ல பெங்களூர் வந்தேள்… அப்ப, இந்த உபன்யாசத் துறைக்கு எப்படி வந்தேள்னு சொன்னேளே… இப்ப நான் உங்களுக்கு அனுச்சிருக்கற இந்த பெரியவா வாக்கியத்தையும் படிச்சுப் பாருங்கோ… பெரியவா கருணை புரியும்’ என்றார்.

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

கார்த்தி எனக்கு அனுப்பிய மகா பெரியவா திருவாக்கை இங்கே அப்படியே போட்டிருக்கிறேன். இதைப் படித்து விட்டு, அதன் பின் தொடருங்கள்…

…………………………

“அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள்.

இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக

வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது! இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள்.

தெய்வ நினைப்பு, பய பக்தி அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது.

பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது.

சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.”

……………..

கார்த்தி அனுப்பிய செய்தியைப் படித்து விட்டீர்களா?

2012 அக்டோபரில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதர் சுவாமிநாதன் என்னை பெங்களூருக்கு அழைத்தார்கள். அப்போதுதான் இந்தத் துறையில் நான் நுழைந்திருந்தேன்.

அப்போது நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதரிடம், ‘நான் இந்த உபன்யாசத் துறைக்கு வராவிட்டால், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதப் போயிருப்பேன்’ என்று சொன்னேன்.

ஆம்! 2012 ஏப்ரல் வாக்கில் பணியில் இருந்து வெளியே வந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எழுத்தைத் தவிர, எதுவும் தெரியாது! மீண்டும் பத்திரிகைக்குத்தான் போக வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால், சரிவரவில்லை.

அப்போதுதான் என் பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர், ‘பத்திரிகைகள்ல வேலை செஞ்சது போதும் சுவாமீ… டிவி சீரியல்களுக்கு வசனம் எழுத வாங்க… மாசம் நல்லாவே சம்பாதிக்கலாம்’ என்று புள்ளிவிவரத்துடன் பேசினார்.

அவர் சொன்ன தொகையும், விவரித்த விதமும் என்னைக் கவர்ந்தது.

ஒரே ஒரு தர்மசங்கடம் – கடந்த பத்து வருடங்களாக பல கோயில்களுக்கும் மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் போய் தரிசித்து ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

திடீரென சீரியல்களுக்கு வசனம் எழுதப் போனால்… என்னை பலவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தயங்கினேன்.

ஆனாலும், ஜீவனம்தான் அவ்வப்போது கண்களை மறைத்தது.

அப்போது மகா பெரியவாளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ‘பெரியவா… இத்தனை வருடமா ஆன்மிகத்துல இருந்துட்டேன். நிறைய எழுதிட்டேன். இனி தொடரப் போகிற எனது பணி ஆன்மிகத்துக்கா, டிவி. சீரியல்களுக்கா? நீங்களே முடிவு பண்ணுங்கோ’ என்று வேண்டினேன்.

பெரியவா கண் திறந்தார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே மகா பெரியவாளின் பரிபூரண அருளோடு என் வாழ்க்கைப் பாதை மாறியது.

எழுத்தில் இருந்து பேச்சுக்குப் பாதை திரும்பியது.

என்னால் பேச முடியுமா?

எழுதுவது வேறு. பேசுவது வேறு.

எழுத்து என்றால், திரும்பத் திரும்ப எடிட் செய்து ஒரு கட்டுரையை வெளியிடலாம். ஆனால், பேச்சு அப்படி இல்லை. பேசினால் அது ‘லைவ்’.

பெரியவாதான் இதை சாதித்துக் கொடுத்தார்.

கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தெய்வம் சத்தியமாக இருந்து என்னைக் காப்பாற்றிய விதம் என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

பேசவே தெரியாத ஒருவனை பேசவும் வைக்கிறார்.

கார்த்தி இன்று மதியம் இதைத்தான் சொன்னார்: ‘அண்ணா… சொற்பொழிவுத் துறைக்கு வந்து நேற்றோடு மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. இந்த பெரியவா போஸ்ட்டிங்கைப் பார்த்ததும், மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூரில் நீங்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. எல்லாம் பெரியவா கருணை’

மகா பெரியவா சத்தியம்!

என்னைத் தடம் புரள விடவில்லை.

தன் பணிக்கே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று எத்தனையோ சேனல்கள், மேடைகள், வெளிநாடுகள் என்றெல்லாம் சென்றாலும், எல்லா புகழும் மகா பெரியவாளுக்கே!

வெகு சாதாரண மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுதான் எனக்குப் பெரும் பலம் – ‘சாமீ… எங்களுக்குப் புரியும்படியா எளிமையா சொல்றீங்க… நாங்களும் இப்ப காஞ்சிபுரம் போக ஆரம்பிச்சிருக்கோம்.’

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Source ….A Mail from my Friend Shri. Swaminathan  to me this Morning…

Natarajan

Leave a comment