
நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan