வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “

 

நிழலாடும்  நினைவு…
——————-
கடல் அலை போல்  நினைவலைகள்…
ஓயாத  கடல் அலை போல்
நினைவலையும்  ஒரு தொடர்கதையே !
மெல்லிசையாய் ஒலிக்கும் வாழ்வின்
இனிய நினைவலைகள் இடைவிடாமல்
தொடரும் ஒரு நிழலாய் நம் வாழ்வின் நிஜத்தில் !
இளமை  கால நினைவின் நாட்டியம் நல்ல
கட்டியம் கூறும் எதிர் வரும் கால நிஜங்களுக்கு !
மனதில் நிழலாடும் நினைவே எதிர் வரும் காலத்துக்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
இனிய பழைய நினைவின் ஓட்டம் இருக்க  வேண்டும்
என்றும் நம்  மனதில் ஒரு நிழலாக ! நினைவுகள் நிழலாடும்
வரைதான் நம் வாழ்வின் ஆட்டமும் ஓட்டமும் !
மனதின் நிழலே நம் வாழ்வின் நிஜம் !
நிஜம் இல்லாமல் நிழல் இல்லை !
நிழல் இல்லாத நிஜமும் இல்லை !
Natarajan
My Tamil kavithai in http://www.dinamani.com dated 10th July 2017

வாரம் ஒரு கவிதை …” மறு ஜென்மம்”

 

மறு ஜென்மம்
————–
நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி …தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் …மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !
Natarajan  in http://www.dinamani.com dated 26th june 2017

வாரம் ஒரு கவிதை …” கல்லறைப் பூவின் கண்ணீர் துளி “

 

சில்லறை இல்லையென்றால் இல்லை
உனக்கு  மரியாதை !  உண்மையும்
நேர்மையும் போடுமா உனக்கு சோறு ?

“பிழைக்கத் தெரியாத மனிதன் நீ ”
இந்த ஒரு பட்டம் மட்டுமே அந்த
மனிதனுக்கு  கிட்டிய சொத்து நேற்றுவரை !

இன்று கல்லறையில் அவன் அடங்கும் வரை
அவன் அருமை அவனுக்கே தெரியாது !

அவன் உறங்கும்  கல்லறை மேல்
எத்தனை எத்தனை மலர் வளையம் இன்று   !
அவன் இறப்பிலும் அவரவர்  ஆதாயம்

தேடி அவனுக்கு சூட்டும் பட்டம்  எத்தனை
எத்தனை இன்று !

“பிழைக்கத்” தெரியாத அந்த ஒரு மனிதன்
பெயர்  சொல்லி  தங்கள் “பிழைப்பை”
நடத்த துடிக்கும் ஒரு பெரிய கூட்டத்தின்

நாடகத்தின் நடுவில்  கல்லறைப் பூக்கள்
மட்டும் வடிக்குது கண்ணீர், மறைந்த
அந்த மனிதனை நினைத்து !

நடராஜன்   in http://www.dinamani.com dated 19th june 2017

வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “

 

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே  அது கவிக்கோ !
கதையிலும்  கவிதை விதை விதைத்து  கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ?  இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை  மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து  உன் வீட்டு  வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017

வாரம் ஒரு கவிதை …” மேகம் போடும் தாளம் “

 

மேகம்  போடும்  தாளம்
__———————
நீல வானம் இசைக்கும் மழை இசைக் கச்சேரிக்கு
வான் மேகம்  தவறாமல் போட்டிடும்  சரியான தாளம் !
கரு மேகத்  தாளம் இல்லாமல் மழை  இசைக் கச்சேரி ஏது ?
மனிதன் போட்ட தப்பு தாளத்தால் இன்று நீல
வானம் இசைக்க மறந்ததே தன் இன்னிசை மழையை !
மழையின்றி மனிதன் தவித்து ஒரு வாய் குடிநீருக்கு
போடுகிறான்  தாளம் இன்று ! மேள தாள வாத்தியம்
சகிதம் காத்திருக்கிறான் அவன்   வான் மழை இசைக்கு !
வான் மழை இசைக்கு சரியான தாளம் போடும்
மேகமே இன்று போடுதே தாளம் அதன் முகத்தை
தொலைத்து விட்டு !
தொலைத்த முகத்தை தேடி எடுத்து வான் மேகம்
போட வேண்டும் மீண்டும் ஒரு தாளம் வான் மழை
இசைக்கு கட்டியம் கூறி !  இசைக்க மறந்த  வானமும்
மேகம் போடும் தாளத்தில் தன்னை மறந்து இசைக்க
வேண்டும் ஒரு இனிய மழை  கீதம் இந்த மண் குளிர!
Natarajan … in http://www.dinamani.com datec 5th June 2017

வாரம் ஒரு கவிதை ….” கல் வீச்சு “

 

கல் வீச்சு
———-
கல் எறிய கற்றுக் கொடுக்கவில்லை உன் கல்வி
கற்றது மறந்து கல் எடுத்து நீ வீசி உடைப்பது
ஒரு பேருந்தின் கண்ணாடியை மட்டும் அல்ல
உன்னைப் பெற்றவரின் இதயத்தையும்தான் !
பேசி தீர்த்துக்கொள்ளும்  பிரச்சனையை கல்
வீசி தீர்க்க முடியுமா சொல்லு …தம்பி ?
நீ கற்ற கல்வி உனக்கு காட்டாத  வழியை
ஒரு கல் காட்டி விடுமா உனக்கு ?
சற்றே யோசி நீ தம்பி … உன் வாழ்வின்
வெற்றிக்கு உன் கல்வி மட்டுமே அடித்தளம் !
அது மறந்து ஒரு கல் நீ கையில் எடுத்தால்
அந்த ஒரு கல் உருமாறும் ஒரு தடைக்கல்லாக
உன் வெற்றிப் பயணத்தை சீர் குலைக்க !
கல் வீச்சில் வீரன் என்னும் பெயர் உனக்கு
வேண்டாம் … கல்வியில் அசகாய சூரன்
என்னும் பட்டம் மட்டுமே வேண்டும் உனக்கு !
My Tamil kavithai  in http://www.dinamani.com dated 29th May 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…. ” குழந்தையின் குரல் “

 

குழந்தையின் குரல்
——————–
மழலையின் குரல் ஒரு அன்னைக்கு
அழைப்பு மணி என்றால் அந்த
அன்னையின் பதில் குரல் தந்திடும்
ஒரு புத்துணர்ச்சி அந்த குழந்தைக்கு !
இது ஒரு பாசப்பிணைப்பு !
குரல் ஒலி வழியில்  குழந்தையும்
தாயும் இணையும் இந்த பாச  சங்கமம்
ஐந்தறிவு ஜீவனுக்கும் சொந்தமே !
இறைவன் படைப்பில் இது ஒரு
அதிசயம் …ஆச்சர்யம் !
தொடு திரை கணினி அலை பேசி
நம் கையில் குழந்தை போல இன்று !
“தாய்” நம் குரலை இனம் கண்டு
தன் கதவு திறந்து இந்த உலகையே
நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்குதே
இந்த அலைபேசி “குழந்தை” !
இந்த  கணினி அலைபேசி நமக்கு
குழந்தையா ….இல்லை  நாம்
அதற்கு குழந்தையா !  இது இன்று
புரியாத  புதிர் !
தன் குழந்தையின் குரல் மறந்தாலும்
தங்கள்  அலை பேசியின் அழைப்பு
மணியின் ஒலியை சற்றும் மறக்காத
தாய் தந்தை பலர் நம்மிடையே  உண்டு இன்று !
இது விந்தையிலும் விந்தை !
K. Natarajan  in http://www.dinamani.com dated 21st May 2017

வாரம் ஒரு கவிதை ….’ சுமையும் சுகங்களும் “

 

சுமைகளும் சுகங்களும்
———————–
கருவில் சுமக்கும் குழந்தை தாய்க்கு சுமையல்ல
தோளில் பிள்ளை …ஒரு தந்தைக்கு சுமை இல்லை !
சுமையும் சுகமாக தோன்றும்  நேரம் அது !
நிழலின் சுகம் வெய்யிலை சுமந்தவனுக்கு புரியும் !
நீரின் சுகம் பாலைவனத்தில் நடப்பவனுக்கு தெரியும் !
ஒளியின் சுகம் இருளில் புரியும் ! பொருளின்
அருமை அது இல்லாதவனுக்கு தெரியும் !
ஒரு சுமையை சுமந்தவனுக்கு மட்டுமே  புரியும்
சுகத்தின் அருமை!
சுமை சுமக்காமல்  சுகம் இல்லை … சுகம்
அளிக்காத சுமையும்  இல்லை !
சுமை சுமப்பவனுக்கு  சுகம் நிச்சயம் !
சுமை தவிர்த்து சுகம் மட்டும் நாடும்
ஒருவனுக்கு அந்த சுகமே சுமையாய் மாறும் !
Natarajan
in http://www.dinamani.com dated 15th may 2017

வாரம் ஒரு கவிதை …” ஒற்றை சிறகோடு “…

 

ஒற்றை சிறகோடு …
——————-
சிறகடித்து விண்ணில் பறந்து  திரிந்த எனக்கு
பிறந்தாய் நீ ஒற்றை சிறகோடு குழந்தாய் !
சிறகு ஒன்று இல்லையென்பதால் மட்டும்
நீ ஒரு சிறைக்  கைதி அல்ல கண்ணே !
ஒற்றை சிறகு பறவை  நீ என நான்
உன்னை சிறை வைக்க மாட்டேன் தரையிலே !
நீயும் மறந்து விடு “நான் ஒரு ஒற்றை சிறகு
பறவை என்று..”
உன் பிஞ்சுக் கால் இரண்டும்  தரையில் தட்டி தட்டி
மண்ணில் நீ நடை பயிற்சி முடித்து   அந்த
விண்ணில்  நீ  பறக்க நினைக்கும் நேரம்  நான் இருப்பேன்
உனக்கு ஒரு மற்றொரு சிறகாக !
என்னைப் போலவே உன்னையும் விண்ணில்
பறக்க வைப்பேன்…. தாய்ப் பறவை நான் !
ஒற்றை சிறகோடு  விண்ணில் நீ பாயும்
நேரம் என் கண்ணில் தெரியுது இப்போதே !
மனம் இருந்தால் மார்க்கம் என்னும் வாக்கு
மனிதருக்கு மாத்திரம் அல்ல !
இந்த மண்ணில் பிறக்கும் எனக்கும் உனக்கும்
மற்றும் எல்லா உயிருக்கும் அந்த சொல்லே
மந்திரம் !
உன் இழப்பு பற்றி நினைக்காதே ..உன்
இலக்கு என்ன என்று மட்டும் நீ யோசி !
K.Natarajan … in http://www.dinamani.com dated 8th May 2017

வாரம் ஒரு கவிதை …” கோடை மழை “

 

கோடை மழை
————–
சாரல் மழை ….தூறல் மழை …அடை மழை !
அடை மொழி உனக்கு எதுவானாலும் மழை
நீ எனக்கு ஒரு நன்கொடைதான்  எப்போதும்!
கோடை வெயிலில் வாடும் இந்த மண்ணுக்கு
ஒரு கொடை  மழையாய் நீ வரவேண்டும் மண்ணும்
என் மனசும் குளிர ! வருவாயா நீ கோடை மழையே ?
குடை துறந்து  உன் கொடையில் நான் என்னை
மறந்து துள்ளி விளையாட சீக்கிரமே வந்து விடு மழையே !
அடை மழையாய் நீ என்  மண்ணை புரட்டி போட்ட சமயம்
என்ன மழை ..என்ன மழை …விடாமல் பேய்   மழை என  நான்
உன்னை வசை பாடியது உண்மை !
இன்று சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில்  ஒரு சொட்டு மழை
நீருக்கு காத்திருக்கும் பல உயிரில் நானும் ஒருவன் !
நான் பாடிய வசைமொழி மறந்து மன்னிக்க வேண்டும் என்னை
மழைத்  தோழி நீ   ! இசைக்க வேண்டும் ஒரு இனிய கீதம் நீ எனக்காக !
இடி மழை மின்னலுடன் நீ ஆட வேண்டும் ஒரு அழகு
நாட்டியம் என் மண்ணில் …கோடையில் உன் இசை நாட்டியம்
கட்டியம் கூற வேண்டும் ஒரு கோடை இசை விழாவுக்கே !
தட்டாமல் நீ வரவேண்டும் கோடை மழையே ! கை தட்டி உன்னை
அரவணைக்க காத்திருக்கிறோம் நானும் என் மண்ணும் !
Natarajan  in www. dinamani.com  dated 24th april 2017