மகாத்மாவும் மதுரையும்! … செப்., 22- அரைமுடி ஆடைக்கு மகாத்மா மாறிய நாள்…

தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் ‘ஏதென்ஸ் நகரம்’ என மதுரைக்கு பெயர் உண்டு.

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.


ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார். மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர் சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் ‘251 ஆ’ என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்த துவங்கி ‘மகாத்மா’வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.

 

சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து ‘ஆலய பிரவேச இயக்கத்தை’ துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது

ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல் மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது.

SOURCE::::Dinamalar.com

Natarajan

” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

” பிள்ளையாரின் பிள்ளை…” !!!

மஹா பெரியவாளின் கமல பாதங்களில் நான் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன். எனக்கு எல்லாமே அவர் தான்’ என்று சொல்லும் கடம் வித்வான் விநாயக ராம் இல்ல பூஜை அறையில் திரும்பும் இடமெல்லாம் மஹாபெரியவா படங்கள்தான்.

பூஜை அறையின் அலமாரியில் ஒரு பிள்ளை யாரைக்காட்டி, பிள்ளையார்தான் எனக்கு தாயும், தந்தையும். நானும், என் சகோதரியுமாக இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தோம். எனக்கு ராமசேஷன் என்றும் என் சகோதரிக்கு சீதா லட்சுமி என்றும் பெயர் வைத்தார்கள். எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி உடம்புக்கு வரும்; அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வரும். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. ஒரு குழந்தையை வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுக்கும் படி ஆலோசனை சொன்னார் ஒரு ஜோசியர். என் பெற்றோர்கள் வேறு யாருக்காவது ஸ்வீகாரம் கொடுப்பதை விட, இறைவனுக்கே ஸ்வீகாரம் கொடுக்க முடிவு செய்தார்கள். அதன் பேரில் சாஸ்திரப்படி, பிள்ளையார் கோயிலில் வித்து, பிள்ளையாருக்கே என்னை ஸ்வீகாரம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் தான் வினாயக ராமன். ஆக, எனக்கு தாயும், தகப்பனாரும் பிள்ளையார்தான். நான் பிள்ளையாரின் பிள்ளை.

பதினாலு, பதினஞ்சு வயசில் இருந்தே பெரிய வித்வான்களுடைய கச்சேரிகளுக்கு கடம் வாசிப்பேன். அப்படி ஒரு தடவை திருச்சியில் தியாகராஜ பாகவதர் கச்சேரி. அப்போது எனக்கு உடம்பு சரியில்லை. அப்பாவுக்கு திருச்சிவரை என்னை தனியாக அனுப்பத் தயக்கம். ‘பையனை என் கூடவே காரில் அழைத்துக் கொண்டுபோய், கச்சேரியை முடித்துவிட்டு, பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என்று பாகவதர் சொன்னதன் பேரில், என்னை அனுப்பி வைத்தார். இரவு காரில் புறப்பட்டோம். அதிகாலை ஐந்து மணி இருக்கும். காரின் பின் சக்கரத்தில் ஏதோ வித்தியாசமான சப்தம் வருவதை கவனித்து, காரை நிறுத்தச் சொன்னார் பாகவதர். இறங்கிப் பார்த்தால், பின் பக்க சக்கரங்களில் ஒன்றின் எல்லா நட்களும் லூசாகிக் கழன்று விழுந்துவிட்டன. இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருந்தாலும், ஒரு சக்கரம் கழன்று, கார் விபத்துக்குள்ளாகி இருக்கும். அப்போதுதான் கவனித்தோம், காரை நிறுத்திய இடத்துக்கு பக்கத்தில் சிறிய பிள்ளையார் கோயில். எங்கள் உயிரைக் காத்த பிள்ளையாரை நன்றியோடு வணங்கிவிட்டு, அடுத்து வந்த ஒரு பஸ்ஸில் ஏறி திருச்சி சென்றடைந்தோம்.”

பூஜை அறையின் நடுவில் ஓர் ஊஞ்சல். அதிலும் பெரிதாக இரண்டு மஹா பெரியவா படங்கள். அதனை ஒட்டினாற் போல ஒரு பூஜா மண்டபம். அதில் ஒரு கடம். அதன் முன்பாக வெண்கலத்தில் செய்த ஒரு கடம். பக்கத்தில் சின்னஞ் சிறு மஹா பெரியவா உருவம். இதன் பெருமையைச் சொல்லட்டுமா? மானா மதுரையில்தான் நல்ல முறையில் கடம் செய்வார்கள். அப்படி மானாமதுரையில் புது கடம் ஒன்றை வாங்கிய சில தினங்களில் காஞ்சீபுரம் சென்றபோது, அந்த கடத்தையும் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். என்னை ஆசிர்வதித்த பெரியவா, அந்த கடத்தை வாங்கி இரண்டு தட்டு தட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷம். மஹா பெரியவா தொட்டு ஆசிர்வதித்த அந்த கடத்தை கச்சேரிக்கு வாசிக்கக் கூடாது என முடிவு செய்தேன். என் பூஜை அறையில் அதற்கென ஒரு மண்டபம் செய்து, அதிலே வைத்து, பூஜித்து வருகிறேன்.

ஒருமுறை, அமெரிக்காவுக்குக் கச்சேரிக்குச் சென்றபோது, ஒரு தடவை என்னுடைய கடம் உடைந்து போய்விட, நான் மனம் நொந்துபோனேன். ஆனால் மஹா பெரியவாளின் ஆத்மார்த்தமான பக்தரும், என் சகோதரருமான பிரதோஷம் வெங்கட்ராம ஐயர் சொன்னபடி, அங்கேயே பெரியவாளை ஆத்மார்த்தமாக பிரார்த்தித்துக் கொண்டு, அவரது படத்தை வைத்து வலம் வந்து வணங்கினேன். என்னோடு சேர்ந்து அமெரிக்காவில் கச்சேரி செய்வதற்காக லண்டனிலிருந்து அமெரிக்கா வந்த தபலா கலைஞர் ஜாகிர் உசேன், அப்படியே லண்டன் பாரதிய வித்யாபவனில் விசாரித்து, லண்டன் ரசிகர் ஒருவரிடமிருந்து ஒரு கடத்தை வாங்கி எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். எனக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. முந்தைய முறை லண்டனில் கச்சேரி செய்த போது, நான் அந்த ரசிகருக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுதான் அந்த கடம்.”

படங்கள்: கௌதம் ராம்

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

” எண்ணமே மனச்சுமை…”

ரமணரைத் தரிசிக்கப் பலரும் காத்திருந்தனர். அவர்களுள் வெளிநாட்டவரும் சிலர். ரமணர் மெல்ல நடந்து வந்தார். எல்லோரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பி வணங்கினர்.

பசுமாடு ஒன்று அவரை நெருங்கி நின்றது. அதைத் தன் கரங்களால் வருடிக்கொடுத்தார். அது தன் கண்களை மூடி ஒரு யோகியைப் போல அசைவற்று நின்றது.

அவர் தாய்மையோடு பக்தர்களைப் பார்த்தவாறு மெல்ல வந்து ஒரு திட்டின் மீது அமர்ந்தார். பக்தர்கள் தரையில் அமர்ந்தனர்.

ஒவ்வொருவரும் தன்மீது ரமணரின் அருட்பார்வை நின்று போகாதா என்ற ஏக்கத்தோடு இருந்தனர்.

சற்றுத் தொலைவில் ஒரு வெளிநாட்டுக்காரர் தரையில் அமர முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் ஒரு திட்டின் மீது அமர்ந்துவிட்டார். சுற்றியிருந்த சிலர் அவரைப் பார்வையாலேயே பழித்தனர்.

அதை உணர்ந்த ஒரு ஆசிரமத் தொண்டர், சாமிகளுக்குச் சமமாக உட்காரக் கூடாது எனக் கண்டித்து வெளியில் அனுப்பிவிட்டார். இது பலருக்கும் சரி என்றே பட்டது. இதைத் தொலைவில் இருந்த ரமணர் கவனித்துவிட்டார்.

அந்தப் பணியாளரை அருகில் வரும்படி கையசைத்தார். அங்கு என்ன நடந்தது எனக் கேட்டறிந்தார்.

தரையில் அமர்ந்தால் மரியாதை, மேலே உட்கார்ந்தால் மரியாதை கிடையாது என்று யார் கற்றுக் கொடுத்தது என்று பணியாளிடம் கேட்டார். மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கைக் காட்டி, அதை நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு அந்த வெளிநாட்டு மனிதரை அழைத்துவரச் சொன்னார்.

வெளியேற்றப்பட்ட அயல்நாட்டுப் பயணி மிகுந்த ஆவலோடு ரமணரை நெருங்கி வந்தார். ரமணர் தன் கண்களாலேயே அந்த மனிதரின் ஆன்மாவை வருடிக் கொடுத்தார்.

இவைதான் மரியாதை என்று பட்டியலிட்டு அதை எல்லாரிடமும் எதிர்பார்க்கிற எண்ணமே மனச்சுமை என்ற பாடத்தை ரமணர் இதன் மூலம் எளிமையாகப் புரியவைத்தார்.

Source::::  நாவுக்கரசன் கிருஷ்ணன் in The Hindu …Tamil
Natarajan

செப்டம்பர் 16: எம்.எஸ். பிறந்த நாள்: ….

  • எம். எஸ். சுப்புலட்சுமி
    எம். எஸ். சுப்புலட்சுமி
  • 1992-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் அன்புக் கணவர் சதாசிவத்துடன் எம்.எஸ்.
    1992-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சி ஒன்றில் அன்புக் கணவர் சதாசிவத்துடன் எம்.எஸ்.
  • 'நான் வெறும் பிரதமர் தான், ஆனால் நீங்கள் அரசி, பாடல்களின் அரசி' என்றார் ஜவாஹர்லால் நேரு. 1953-ம் ஆண்டு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளிக் கேடயம் வழங்கி அவ்வாறு கூறிய அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் எம்.எஸ்.
    ‘நான் வெறும் பிரதமர் தான், ஆனால் நீங்கள் அரசி, பாடல்களின் அரசி’ என்றார் ஜவாஹர்லால் நேரு. 1953-ம் ஆண்டு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளிக் கேடயம் வழங்கி அவ்வாறு கூறிய அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுடன் எம்.எஸ்.
  • குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பத்மவிபூஷண் விருது வழங்க, அதனைப் பெறுகிறார் எம்.எஸ்.
    குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பத்மவிபூஷண் விருது வழங்க, அதனைப் பெறுகிறார் எம்.எஸ்.

கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காக்கும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பிறந்த நாளும் இன்றுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் கச்சேரியும், முடிவுக் கச்சேரியும் நடந்தது சங்கீத வித்வத் சபை என்ற மியூசிக் அகாடமியில்தான். இந்த மியூசிக் அகாடமியின் தற்போதைய தலைவராக இருப்பவர் ‘தி இந்து’ குழுமத்தின் இணைத் தலைவர் என்.முரளி என்பது கூடுதல் தகவல். பிரபல கர்னாடக சங்கீத பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். அம்மா என்று அன்புடன் கர்னாடக சங்கீத வித்வான்களால் மட்டுமல்ல, இசை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர்.

இவரது காலத்தில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும், இவரது புகழ் ஐக்கிய நாடுகள் சபை வரை பரவியதற்கு அவரது உழைப்புதான் காரணம் என்று அவரது கணவர் சதாசிவம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உணவுக்காவது, விரதம் இருந்தால் விடுமுறை விடுவது இவரது வழக்கம். ஆனால், பாடல் பயிற்சியை அனுதினமும் செய்வதால் அதற்கு மட்டும் விடுமுறையே கிடையாது. எம்.எஸ். பாட நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

ஆத்மநாதன்

(சதாசிவம் – எம்.எஸ். சுப்புலட்சுமி தம்பதியரின் ஐம்பது ஆண்டு கால உதவியாளர்)

எம்.எஸ் அம்மாவின் இனிய இசையை விட அவர் மிக இனிமையானவர் என்பது அவரது புகழ் வெளிச்சத்தில் மறைந்துதான் போய்விட்டது. எப்பொழுதுமே எளிமையானவர். பலரிடம் கீர்த்தனைகளைக் கற்றிருந்தாலும் ஒவ்வொரு கீர்த்தனையும் உயர்தரமாக இருந்ததற்கு, அவரின் சாதகமே காரணம். இதற்கான அவரின் உழைப்பு அசாத்தியமானது. அதற்கு உதாரணமாக ‘காலைத் தூக்கி நின்றாடும், குறை ஒன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய பாடல்களைக் கூறலாம். அவர் கச்சேரிகளில் தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே பாடினார். ஆனால், இதனைக் கேட்ட அனைத்து ரசிகர்களுக்கும் அந்த இசை ஆத்ம திருப்தியை அளித்து அவர்களின் நிலை உயரக் காரணமானது என்பதுதான் நிதர்சனம்.

இளைய தலைமுறை இசைஞர்களுக்கு அவர் இசை தெய்வம்; ரசிகர்களுக்கோ அவர் மேடையில் தோன்றிய தெய்வத் திருவுரு என்று சொன்னால் மிகையில்லை. அவரை அறிந்த நாளில் இருந்தே அவர்நல்ல ஆரோக்கியத்தில் இருந்தார் என்றுசொல்ல முடியாது. ஆனால், உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக ஒரு கச்சேரியைக் கூட அவர் வாழ்நாளில் ரத்து செய்தது இல்லை என்பது ஆச்சரியகரமானது. தன்னை விட இளைய இசைஞர்களின் இசையை மதிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை.

கெளரி ராம்நாரயணன்

(மூத்த பத்திரிகையாளர் (ஓய்வு) – தி இந்து)

பிரபல வாக்கேயக்காரர்கள் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடல்கள் இயற்றி இருக்க, அதனையே பலரும் பல முறை மேடைகளில் பாட அவை பிரபலமாகிக் கொண்டே வந்தது. தமிழ் இசைக்காக எம்.எஸ். செய்த சேவை தமிழ் இசை என்ற இயக்கமாகவே மாறிவிட்டது.

சுத்தானந்த பாரதியின் பாடல்கள் இவரது கணவர் சதாசிவத்துக்கு மிகவும் பிடித்திருந்த தால், கச்சேரியின் முதல் பாடலாக இருக்க ஹிந்தோள ராகத்தில் அமைந்த ‘அருள் புரிவாய் கருணைக் கடலே’ உகந்தது என்று கூறி இந்த தமிழ் பாடலை எடுத்துக் கொடுத்தார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல் தேனினும் இனிய அவரது குரலில், வெளிவந்து, மிகவும் பிரபலமடைந்தது. வாக்கேயக்காரரான பாபநாசம் சிவன் நேரடியாகவே தனது பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு கற்றுக்கொடுத்தாராம். இதனைக் குறிப்பிட்டு கூறிய எம்.எஸ், இது பெரும் கொடுப்பினை என்று ஒரு பேட்டியில் சொல்லி வியந்திருக்கிறார்.

கல்கியின் மகள் ஆனந்தியும், சதாசிவம் மகள் ராதாவும் இணைந்து அரங்கேற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, எம்.எஸ்.தான் வாய்ப்பாட்டு. அந்நாளில் `யாரோ இவர் யாரோ’ மற்றும் `ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ ஆகிய பாடல்கள் அவரது குரலின் இனிமையையும், கம்பீரத்தையும் பெற்று வலம்வந்தன. தமிழ் பாடல்கள் தன் தகுதியைப் பெறத் தொடங்கின. யதிகுல காம்போதியில், மத்யம சுருதியில் அவர் பாடிய `காலைத் தூக்கி’ என்றுதொடங்கும் பாடல் இன்றும் பிரபலம்தான். உச்ச ஸ்தாயியில் அவர் பாடிய `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற சுப்பிரமணிய பாரதியின் பாடலில் அவரது முழு சக்தியும் குடிகொண்டிருந்தது.

கல்கி சதாசிவம், சுப்பிரமணிய பாரதியின் பாடல்களுக்கு ரசிகர். ஒரு முறை கார்ப்ப ரேஷன் ரேடியோவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி பதிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது, பிரிட்டிஷ் அரசு, பாரதியாரின் பாடல்களுக்குத் தடைவிதித்திருந்தது. அதனால் அப்பாடலைப் பாட ரேடியோ அனுமதிக்க வில்லை. அதனால் சதாசிவம், பாதியிலேயே அக்கச்சேரியை நிறுத்தி, எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி சொல்வதில் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆச்சரியகரமான ஆர்வம் கொண்டிருந்தார். இவர் பல மொழிகளில் பாடியிருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களைப் பிரபலப்படுத்தியது சரித்திரமாகிவிட்டது.

சபரி கிரிஷ்

(பாடகர், திருப்பதி இசைக் கல்லூரி விரிவுரையாளர்)

கீர்த்தனைகள்தான் எம்.எஸ். பாடுவார் என்றே எண்ணியிருந்த காலம். அப்போது வானொலியில் மீரா பஜன் ஒன்றை ஒலிபரப்பினார்கள். அவர் இசையில் பன்முகத் திறமை கொண்டவர் என்பதை அறிய வியப்பாய் இருந்தது. அது 1988-ம் ஆண்டு, எனக்கு 10 வயது. அப்போது புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பள்ளியில், ஆதிசங்கரர் இயற்றியவற்றை மட்டுமே கொண்ட கச்சேரி நிகழ்ந்தது. கச்சேரி முடிந்து அவர் எழுந்து நடந்து வந்ததைப் பார்த்தபோது, தேனினும் இனிய குரலில் பாடிய தேவதை நடந்து வந்ததுபோல் பிரம்மிப்பாக இருந்தது.

சென்னை சுந்தரத்தில் சாய் பாபா முன்னிலையில் பஜன் பாட, நாங்கள் கூடி இருந்தோம். அப்போது எம்.எஸ். அம்மா, சதாசிவம் மாமாவுடன் வந்திருந்தார். நாங்கள் பாடிய பஜனைப் பாடல்களை, வாங்கிப் பாடினார் எம்.எஸ். உலகளாவிய புகழ் கொண்ட கர்னாடக இசைப் பாடகி இவ்வளவு எளிமையாகக்கூட இருப்பாரா என்று ஆச்சரியமாக இருந்தது.

திருப்பதியில் எம்.எஸ். கச்சேரி அன்றைய தினம் மாலையில் இருந்தது. அதற்கு முன்னர் பெருமாள் தரிசனம் செய்ய முடிவுசெய்தனர் அத்தம்பதியர். அப்போது கூட்ட வரிசையை நிறுத்தி, வி.ஐ.பி தரிசனத்துக்கு வழிவிடும் வரை சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதிக்கு அருகே காத்திருக்க வேண்டிவந்தது. ஒரு கோணிப்பையை விரித்திருந்தார்கள் நிர்வாகத்தினர், அதில் முகமலர்ச்சியோடு அமர்ந்து காத்திருந்தார்கள் அத்தம்பதியினர். அவரது பகட்டில்லாத எளிய பக்திக்கு இதுவும் ஒரு சான்று. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி. கச்சேரியில் ‘ஹரி தும ஹரோ’ பாடல் இடம் பெற்றதைவிட ஆச்சரியம், மேடையேற பல படிகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் 89 வயது சதாசிவம் மாமாவும், 74 வயது எம்.எஸ். அம்மாவும் கைகோத்துக்கொண்டு, கிடுகிடு என்று படிகளில் ஓடி ஏறினார்கள். சங்கீதம் அவர்களுக்குத் தந்த சக்தி இது.

திருநீர்மலையில், மலை மீதுதான் தன்னை விட 15 வயது மூத்த சதாசிவத்தை எம்.எஸ். மணந்துகொண்டார். பின்னர், சதாசிவத்துக்கு 90-வது பிறந்தநாள் அன்று திருப்பதியில் நிர்வாகத்தினர் கொடுத்த மாலையினை இருவரும் மாற்றிக்கொண்டார்கள். அப்போது எம்.எஸ். முகத்தில் பளீரிட்ட வெட்கத்துக்கு அளவே இல்லை. திருப்பதி தயிர் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் சர்க்கரை கலந்து சாப்பிடுவார். பீமாஸ் ஹோட்டலில் தங்கியிருந்த எம்.எஸ். அங்கு ஆந்திரா ஸ்பெஷல் பெசரெட் தோசையும், இஞ்சி வெல்லச் சட்னியும் கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சித்தூர் புளி போட்ட ரசத்தை விரும்பிச் சாப்பிடுவார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் இறுதி நாட்களில் அவரை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டவர் ஆத்மாதான். அவரது கச்சேரிகளில் அவரும் பாடலும் வேறு வேறு என்று இல்லாமல் ஒன்றி இருந்ததுதான் அபூர்வமான மாயாஜாலத்தை உருவாக்கியது என்று சொல்ல வேண்டும்.

துக்கடாக்கள்

* தனது 88 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் இசை சாதனையைச் செய்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி என்றால் மிகையாகாது.

* எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சங்கீத கலாநிதி, பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டதில், அவ்விருதுகள் பெருமையடைந்தன என்றே சொல்லலாம். மீரா பஜன் என்றாலே எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவுகள்தான் ரசிகர்களின் நெஞ்சில் நின்றாடும். மீரா வேறு, எம்.எஸ். சுப்புலட்சுமி வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது குரல், மீராவின் பக்தி பாவத்துடன் இணைந்திருக்கும்.

* ஒரு கோயில் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பறை அறிவித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. கச்சேரியும் நல்ல களைகட்டிவிட்டது.

இக்கச்சேரியைக் கேட்க அரியலூரில் இருந்து ஒரு தம்பதியினர் 30 மைல், தூரம் நடந்தே வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கச்சேரி முடிந்துவிட்டது. அவர்கள் நடந்து வந்ததால் தூசியும் தும்பும் அப்பிய ஆடையுடன் பதறி அடித்துக்கொண்டு கச்சேரி நடக்கும் இடத்துக்குள் நுழைந்தனர். கச்சேரி முடிந்துவிட்டது என்பதைத் தாங்க முடியாத ஏமாற்றத்துடன் எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் முறையிட்டனர். அவர்களுக்காக இரவு 12 மணியைக் கடந்த பின்னும் ஒரு பாடலைப் பாடித் திருப்தி அளித்தார் எம்.எஸ். ரசிகர்களின்உணர்வுகளை இசையைப் போலவே மதிப்பவர் எம்.எஸ். என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

மலரட்டும் மனப்பூக்கள் !!!

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, ‘ஏழுமலையானே… எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா…’ என்று ஏக்கம் கொள்வர்.
ஆனால், ஏழுமலையான் மேல் உண்மையான பக்தி இருந்தால், அந்த ஏக்கம் தேவையில்லை; அவனே தேடி வந்து அருள்வான் என்பதை விளக்கும் கதை இது.

செப்., 20 – புரட்டாசி முதல் சனி !


பீமன் எனும் மண்பாண்டத் தொழிலாளி ஒருவர், புரட்டாசி சனி என்றில்லாமல், எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளை நினைத்து, விரதம் இருந்து வந்தார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால், நாள் முழுக்க வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால், அவரால், திருப்பதிக்கு போக முடியவில்லை. அதனால், வெங்கடா ஜலபதியின் சிலையை மண்ணிலேயே வடித்து, தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார். தினமும், மண்பாண்டங்கள் செய்து முடித்ததும், கையில் ஒட்டியிருக்கும் மண்ணை வழித்து, சிறு சிறு பூப்போல செய்து, அதை அந்த சிலைக்கு தூவுவார்.
இந்த சமயத்தில், மன்னன் தொண்டைமான், ஏழுமலையானுக்கு தங்கப்பூக்களை காணிக்கையாக வழங்கி, தினமும், அந்தப் பூக்களால் தான் பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டான். அதே போன்று, அர்ச்சகர்களும் தங்கப் பூக்களால் அர்ச்சனையை செய்தனர். ஆனால், மறுநாள் வேங்கடவனின் பாதத்தில் கிடந்ததோ மண்ணால் செய்யப்பட்ட பூக்கள். இது தினமும் தொடர்ந்ததால், இந்த விஷயத்தை அர்ச்சகர்கள், மன்னரிடம் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மனதில் குழப்பம் அடைந்தான்.
மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், ‘மன்னா… மனம் குழம்பாதே… என் பக்தன் பீமன் என்பவன் மண் பூக்களால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கும் பூக்களை நான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தான் அப்பூக்கள் அங்கே தென்படுகின்றன…’ என்றார்.
தன் எளிமையான பக்தியின் மூலம் கடவுளின் அருளைப் பெற்ற பீமனைத் தேடிச் சென்ற மன்னன், அவரிடம் நடந்ததைக் கூறினார். அவரோ, ‘அரசே… காலை முதல் மாலை வரை இந்த வண்டிச்சக்கரம் சுழன்றால் தான், என் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்; இதில், எனக்கு கோவிலுக்குப் போக நேரமேது! அதனால், மண்ணில் செய்த இந்த மண் பூக்களால், வேங்கடவனுக்கு அர்ச்சனை செய்வேன். சனிக்கிழமை விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பேன். ஆனால், இதற்காக, என் பூக்கள் பெருமாளின் காலடியில் வந்து விழுகிறது என்றால், அவனது கருணையை என்னவென்பேன்…’ என்று நெகிழ்ந்தார்.
பீமனின் வார்த்தையைக் கேட்ட மன்னன், அன்றிலிருந்து, திருப்பதி கோவிலில், சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ததுடன், புரட்டாசி பிரம்மோற்சவமும் நடத்த ஆணையிட்டான். அன்று முதல், இன்று வரை திருப்பதி திருமலையில் இந்த விழாக்கள் முக்கியமானவையாக உள்ளன.
திருப்பதி செல்பவர்கள், கை நிறைய காசு கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. உள்ளம் நிறைய பக்தியை சுமந்து சென்றால் போதும்; வேங்கடவனின் அருளைப் பெறலாம்.

Source ::::: Dinamalar.com

Natarajan

Image of the Day… ” Spinning wet Ball … “

1.) Rajat Bhargava.

Photo By.. Rajat Bhargava

“It was a nice breezy shiny Sunday afternoon. We were playing in our community garden. Someone flicked the ball towards the community gardener who was watering plants and the ball got wet. After that it became a monster. The faster the ball was thrown, the more it flew like a rocket leaving trails of water behind; but the magic began when my elder brother started bowling.

His bowling made the ball spin and create a whirlpool of water sprayed in mid air. The moment he delivered the first ball, the closing fielder got a lovely shower because of the spinning wet ball. I looked at the spinning ball and thought to myself that it was a moment worth capturing. I grabbed my camera and asked my brother to spin the ball as fast he could when he bowled. After a few missed shots, I finally snapped that magical moment, where the ball was in sharp focus.”

Source::::

Rajat Bhargava. in Viral nova Trending site

Natarajan

” குன்றென நிமிர்ந்து நில்! “….இன்று பாரதியார் நினைவு நாள்…

‘சிதையா நெஞ்சு கொள்’ எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.

பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.

“நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

தாயின் இறப்பு : பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887ல் பாரதியின் தாய் லட்சுமி அம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண் எய்திய தாய்” பாட்டி பாகீரதி, தாய்வழிப்பாட்டனார் ராமசாமி ஐயரின் அன்பு பாரதியைச் செழுமைப்படுத்தின. பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசை இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார். ஓடிவிளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொன்ன பாரதி, ஓடியாடவில்லை.

இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ”பள்ளிப் படிப்பினிலே- மதிபற்றிட வில்லை” என்ற வரி கவனத்திற்குரியது.

தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக் கல்வியை ஏற்க முடியவில்லை. எட்டயபுரத்தில் இருந்து கல்வி பயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது. தந்தையின் வறுமை அவரை அரித்தது. மனம் நிம்மதி இழந்து தவித்தது.பொருளில்லாக் கல்வியாய் பாரதிக்கு அக்கல்வி தெரிந்தது.

”செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;

தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;

நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை

நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!”

உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவி

‘பெரிதினும் பெரிது கேள்’ என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதி பள்ளிப்படிப்பிற்கு உதவிகேட்டு மன்னருக்குக் கடிதம் எழுதிய நிலையைக் காலம் ஏற்படுத்தியது.

தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்ப முடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக அனுப்பி வைத்தான். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.தோல்வியின் தோளில் ஏறி நின்றுகொண்டு வெற்றியின் வரலாற்றினை எழுதியவர். என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டார். அதனால் தான் திருநெல்வேலி ம.தி.தா., பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.

தந்தையின் மரணம் : 1898 ஜூலை 20 ல் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள். தந்தை மரணமடைகிறார். பள்ளிப்படிப்புத் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாட்டி பாகீரதி குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்தார். படிப்பிற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்து போராடிய பாரதியின் பாட்டியின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.

தோல்வியிற் கலங்கேல் : பாரதி சிறுவயதில் நிறைய சவால்களை எதிர்கொண்டவர். பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழு வயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோது தான் எதிர்கொண்டான். ஆனாலும் அவன் மனம் தளரா மாமனிதனாய் திகழ்ந்தான். ”நொந்தது சாகும்” என்று உணர்ந்த உத்தமன் பாரதி.

‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற வரிகள் பாரதி பட்ட அடிகளில் இருந்து பிறந்தது. ரசிக்கும் மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:

”தந்தைபோயினன் பாழ்மிடி சூழ்ந்தது;

தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்;

சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்

திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்

எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?”

இப்படி வருந்தினாலும் மனஉறுதியை கைவிடவில்லை பாரதி.

“தேடிச் சோறு நிதந் தின்று பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்

வாடித் துன்பமிக உழன்று பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?”

என்றும் பாடினார்.

சிறு துன்பங்களுக்கும் விதியை

நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.

 

முனைவர் சவுந்தர மகாதேவன்  in dinamalar.com

தமிழ்த்துறை தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

திருநெல்வேலி

mahabarathi1974@gmail.com

 

Natarajan

 

“இயற்கையை ரசியுங்கள்” – பாரதியார் நினைவு நாள்… செப்.11

 

சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி

கரிய நிறமான காகம் கா… கா… என்று கத்தும்.

மரக்கிளைகளில், வானவெளியில், அதிகாலைப் பொழுதினில்

காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும்.

நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும்.

தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை

காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.

தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி

கீச்சுக் குரலில் பாடித் திரியும்.

சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும்.

பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும்.

தெருவில் இரை தேடித் திரியும் சேவல் ‘சக்திவேல்’ என்று கூவித் திரியும்.

செம்மை ஒளி வீசிப் பகலை வெளிச்சமாக்கிய கதிரவன்

மாலையில் மறைந்துவிடும்.

மயக்கும் மாலை வேளையில் நிலவு தன்

அமுதக் கிரணங்களைப் பொழிய ஆரம்பிக்கும்.

இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும்

உச்சி மாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.

மனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தைக்

கண்டு இன்பம் கொள்வாய்.

நிலவையும், வான் நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால்

உண்டு களிப்பதைவிடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ?

தென்னை மரக்கீற்றில் ‘சலசல’ என்று சத்தமிடும் பூங்காற்றின்

மீது குதிரைச் சவாரி போல ஏறிக்கொண்டு

உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.

பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.

Source:::The Hindu….Tamil
Natarajan

” சேலத்தில் பெரியவா கிரஹம்…” !!!

தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!

சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?

பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான், காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.
உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ”சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.

”சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது” என்று ராஜகோபால் சொல்ல… ”சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்” என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.

”இல்லை!” என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது… சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!

சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார். எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.

”சொந்த வீடு இருக்கிறதா?” என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.

இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.

வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ”ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்” என்றார்.

மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது… ”வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!”

வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்… ”வடக்குப் பார்த்த வீடுதானே?’

அவரது அடுத்த கேள்வி: ”என்ன விலை சொல்றான்?”

ராஜகோபால் சொன்னார்.

”அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!” என்று ஆசி வழங்கினார் மகான்.

மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.

இதோ… ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்…

”மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!”

‘தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. ‘பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்… ”எனக்கே எனக்கா?”

”பெரியவா அனுக்ரஹம்” என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.

வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ”சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி” என்றார் புன்னகை புரிந்தபடி.

உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல… வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.

”உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!”

இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். ‘பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.

மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?

”நான் எல்லா இடத்திலும் இருப்பேன்” என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.

”எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!” என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.

இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில், பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!

மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.

புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.

மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.

சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!

Read more: http://periva.proboards.com/thread/7911/#ixzz3CpLlCFRG

Source:::: http://www.periva.proboards.com

Natarajan