
மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மார்கழி மாதம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடைமுறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும் உண்டு.
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி) வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓúஸôன் என்பது அடர்த்தியான ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது. ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று அறிவியலார் கூறுகின்றனர்.
மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர். சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி வைத்தார்கள். நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து, அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால், தம்பதியர் ஒற்றுமை கூடும்.
மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர். மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி.
ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள். அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள். அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.
இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள். இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த மார்கழியில் சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்! மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும். திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ, சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே “ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.
அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளிய “வைகுண்ட ஏகாதசி’ இம்மாதம் 21.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது. கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை என்பதால் வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் வைகுண்ட ஏகாதசி அன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் என்பர்.
மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்குகிறது. “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று 27 ஆம் பாடலில் சொன்னவாறு இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் நெய்வழிய சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து “கூடாரைவல்லி’ என்று விசேஷமாகக் கொண்டாடுவர்.
ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன் அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான். அன்றைய தினத்தை “கீதா ஜயந்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. மார்கழிப் பெüர்ணமியன்று “தத்தாத்ரேயர் ஜயந்தி’ தினம். மேலும் தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதமும் மார்கழியே.
மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு “குருவார பூஜை’ எனப் பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும். இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும், நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணை செய்யும். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும், வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும் முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.