” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

” சத்தும் சுவையும் நிறைந்த எள்..” ஒரு பொக்கிஷம் …!!!

 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் புதையல் இருக்கும் இடத்தின் கதவைத் திறக்க அலிபாபா சொல்லும் வசனம் ‘திறந்திடு சீசேம்’ (Open Sesame). சீசேம் என்பது எள்ளுக்கான ஆங்கிலப் பெயர்.

உண்மையிலேயே எள்ளில் பொதிந்திருக்கும் ஊட்டச்சத்துகள் கணக்கற்றவை. அதை ஒரு பொக்கிஷ விதை என்றே சொல்லலாம்.

எள்ளில் மூன்று வகை உண்டு. கறுப்பு எள், எண்ணெய்ச்சத்து நிறைந்தது. சிவப்பு எள், இரும்புச் சத்து மிகுந்தது. தங்க அல்லது தந்த நிறம் கொண்ட எள், சமையலுக்கு உகந்தது.

அளவில் சிறிதாக இருந்தாலும், இந்த விதைகள் ஊட்டச்சத்து நிரம்பியவை. இதில் புரதச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, அத்துடன் தாமிரம், இரும்பு, துத்தநாகம், மாலிப்டினம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துகளும் நிரம்பியுள்ளன.

ரத்த நாளங்கள், எலும்பு மூட்டு இணைப்புகள், எலும்பு போன்றவற்றை வலுப்படுத்தவும், அவை இழுவைத்தன்மையுடன் இருக்கவும் தாமிரம் உதவும். எலும்பு மூட்டு இணைப்புகள், எலும்புகளுக்குத் துத்தநாகமும் நல்லது. “எள்ளில் மெதியோனைன் (methionine), டிரைடோபன் (tryptophan) என்ற இரண்டு அமினோ அமிலங்கள் உள்ளன. மற்றச் சைவப் புரத உணவு வகைகள் எதிலும் இந்த இரண்டும் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் உணவு நிபுணரான ரெபேக்கா உட்ஸ்.

எள்ளில் எண்ணெய்ச் சத்து அதிகம். அதிக விளைச்சலையும் தரக்கூடியது. அரசர்களுக்கு மசாஜ் செய்வதற்கான எண்ணெயாக நல்லெண்ணெய் பயன்பட்டிருக்கிறது. அது மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.

ஆரோக்கிய ரீதியில் பார்த்தால், கல்லீரலுக்கும், சிறுநீரகத்துக்கும் எள் நல்லது. பொதுவான உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலை மேம்படுத்தும். சில ஆராய்ச்சிகளின்படி, குறிப்பிட்ட சில நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சையை எள் மேம்படுத்துகிறது. இது குறைந்த கிளைசிமிக் உணவும்கூட.

சுவை ரீதியில் பார்த்தால் வறுக்கப்பட்ட எள்ளை சாலட், சாஸ் போன்றவற்றில் தூவினால் அவற்றின் இனிப்புச் சுவை கூடும். இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உருளைக்கிழங்கு கறியிலும் இட்லியிலும் இதைப் பயன்படுத்தலாம். கொங்கணி மக்கள், எள்ளை வைத்துச் சுவையான சட்னியைச் செய்வது ரொம்ப பிரபலம்.

ஒரேயொரு பிரச்சினை, அதிக அளவு எண்ணெய்ச் சத்து இருப்பதால், எள்ளைச் சரியாக மூடி வைக்கவில்லை என்றால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். அதனால் காற்று புகாத கலனில் இதை அடைத்து வைக்க வேண்டும். குளிர்ச்சியான, ஒளி புகாத இடத்தில் சேமித்து வைத்தால், மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். சுமார் 6 மாதங்களுக்கு இதைச் சேமிக்க வேண்டுமென நினைத்தால், குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.

தி இந்து (ஆங்கிலம்)

சுருக்கமான மொழிபெயர்ப்பு: வள்ளி

Source::::The Hindu….  Tamil
Natarajan

“அய்யர் பொட்டலக் கடை…”

 

உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை.

கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது.

“இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு” என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.

“என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்களே. என் அப்பா பேரும் இதுதான், தாத்தா பேரும் இதுதான். 60 வருஷமா அய்யர் பொட்டலக் கடை என்கிற பேர்ல கடை நடத்திக்கிட்டுவர்றோம்.”

சுவையும் தரமும் தனித்தன்மையும் மிகுந்த இவர் கடையின் இனிப்பு, கார வகைகளுக்கு கலெக்டர், நீதிபதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், கலைஞர்கள் எல்லாம் வாடிக்கையாளராக இருப்பது இது வெறும் கடை மட்டுமல்ல, கிராமியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதையே உணர்த்துகிறது.

“எங்க கடையில பட்சணம் வாங்கிச் சாப்பிடுற குழந்தைக்கு எந்த விதமான வயிற்றுக் கோளாறும் வரக் கூடாது. கலப்படம் கிடையாது, தரம்தான் எங்க கடையின் ‘தாரக மந்திரம்’. ஆனாலும், அந்தக் காலத்து பட்சணத்தின் தினுசே வேற சார். இப்போ இருக்க விலைவாசியில தரத்தைக் காப்பாத்த படாதபாடு படவேண்டியிருக்கு” எனும் பொட்டலக் கடை அய்யருக்கு தற்போது 80 வயதாகிறது. தாடியும் மீசையுமாக ஒரு யோகிபோலக் காட்சிதருகிறார்.

“அந்தக் காலத்தில் பட்சணம் செஞ்சபோது ஒரு மூட்டை கடலைப் பருப்பு (அதாவது 64 படி) விலை ரூபாய் 56, ஒரு டின் கடலை எண்ணெய் (16 கிலோ) ரூபாய் 18, ஒரு வீசை பட்டாணி 13 அணா, ஒரு வீசை மந்தாரை இலை பத்தணா, ஒரு வீசை சக்கரை (1,400 கிராம்) 13 அணா” பழைய விலைவாசியை நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே போகிறார்.

பட்சணக் கடையின் உட்புறமுள்ள வீட்டுக்குள் அழைத்துக் காண்பித்தார். நீண்ட முற்றத்தின் ஒரு பகுதியைத் தடுத்து, அதிலே நட்டுவைத்திருக்கும் ருத்திராட்ச மரங்களைக் காண்பித்தார். 150 அடி வரை வளரக்கூடிய இம்மரங்களைத் தரிசிப்பது 100 கோயில்களை தரிசிப்பதற்கு இணையாகும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்.

வீடெங்கும் பட்சணத் தயாரிப்பின் நறுமணத்தோடு பக்தி மணமும் கமழ்கிறது. கூடம் ஏறக்குறைய ஒரு தியான மண்டபம்போல் இருக்கிறது. நூற்றுக் கணக்கான சாமி படங்கள், சிலைகள். எல்லாவற்றுக்கும் மாலைகள்.

பேச்சின் நடுவே டபரா டம்ளர்களில் காப்பி வந்தது. பிரமாதமான காப்பி. “எங்களுக்குப் பேராசை கிடையாது, ஸ்வாமி இவ்வளவு குடுத்திருக்கார் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக, திருப்தியாக இருக்கோம், இது போதும்”

-தூணில் சாய்ந்துகொண்டு மூக்குத்தி மினுங்க மாமி சொன்னார்.

அந்தத் திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் அந்தத் தம்பதியர் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

தஞ்சாவூர் கவிராயர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

“மழையே உன்னை ஆராதிக்கிறோம்”….சிந்திப்போம் ஒரு நொடி …

சென்னைவாசிகளுக்கு ஒரு சின்ன மழை கொடுத்த சந்தோஷத்தை வேறு எது ஒன்றாலும் நேற்றைக்குக் கொடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. வெப்பத்தில் புழுங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அவ்வளவு இதமான ஆறுதலைத் தந்திருக்கிறது மழை.

சென்னை நகரம் வெப்பத்தில் தகிக்க வெயிலும் வெப்பநிலையும் உச்சபட்ச அளவை நோக்கி நகர்வது மட்டும் காரணம் இல்லை. வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆதாரங்களையும் வேகவேகமாக அழித்துக்கொண்டிருக்கிறோம் அல்லது அந்த அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடக்கிறோம் என்பதும் முக்கியமான காரணம். சென்னையில் மட்டும் அல்ல; நாடு முழுவதும் இதுதான் நிலை.

ஐம்பதாண்டுகளுக்கு முன்கூட எவ்வளவு பசுமையான, ரம்மியமான நகரமாக இருந்தது சென்னை! அதற்கு ஆதாரமாக சாலைகளின் இருபுறங்களிலும் கவிந்து நிழல் தந்த அந்த மரங்கள் எங்கே? ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியின் பெயராலும் பல்வேறு திட்டங்களின் பெயராலும் ஆயிரக் கணக்கான மரங்களை வெட்டித்தள்ளுகிறோமே, பதிலுக்கு எத்தனை மரக்கன்றுகளை நடுகிறோம்? சரி, ஒரு சின்ன மழை இவ்வளவு சந்தோஷத்தை அள்ளிக்கொண்டு வருகிறதே, அதற்காகவாவது உரிய கவனத்தை அளிக்கிறோமா, அதையாவது நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா?

நம்மை உய்விப்பதற்காக இந்த மழைதான் எத்தனை நீண்ட பயணத்தை ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்கிறது? பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து புறப்படும் காற்று வடக்கு நோக்கி 8,000 கி.மீ. பயணித்து ஆசியாவை உரிய காலத்தில் அடைகிறது. அப்படி வரும் வழியில் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து வருகிறது. பருவ மழை சரியாகப் பொழிய பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் காற்று ஒரு காரணம் என்றால், இந்தியாவில் அடிக்கும் வெயில் அடுத்த காரணம். வெப்பக்காற்று மண்டிய இந்தியக் கடலோரம் வழியாக நீராவி மிகுந்த குளிர்காற்று இந்தியா முழுக்கப் பரவுகிறது. சாதாரண ஆண்டுகளில் பருவக்காற்று நான்கு மாதப் பயணத்துக்குப் பிறகு கேரளக் கடற்கரையை ஜூன் மாதத்தில் அடைகிறது. இந்தப் பருவமழைதான் நாட்டின் நூற்றுக் கணக்கான பெரிய நீர்த்தேக்கங்களையும் பல்லாயிரக் கணக்கான ஏரிகளையும் லட்சக் கணக்கான குளங்களையும் நிரப்புகிறது. இந்தத் தண்ணீர்தான் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மின்சார உற்பத்திக்கும் ஆதாரமாகிறது. இவ்வளவு முக்கியத்துவம் மிக்க மழையை நகரவாசிகள் எப்படி அணுகுகிறோம்?

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்கு வெளியூர் நீர்நிலைகளையே நம்பியிருக்கின்றன. நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் கீழே போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் இந்த நிலையில்கூட நீராதாரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், எப்போது கவலைப்படப்போகிறோம்?

பொதுநலனை விடுவோம்… சுயநலம் சார்ந்தாவது இதை யோசிக்க வேண்டுமா, வேண்டாமா? சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஏனைய விஷயங்களில் காட்டும் அக்கறை ஏன் மழைநீர் சேகரிப்பில் எதிரொலிக்கவில்லை? வழிகாட்ட வேண்டிய, வலியுறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இது நம் ஒவ்வொருவரின் கடமை. மரம் வளர்ப்போம், மழைத்துளிகளை மண்ணுக்குள் சேகரிப்போம்!

Keywords: மழை, சென்னை, பசிபிக் பெருங்கடல், சாலைகள்
Topics: சுற்றுச்சூழல்| தமிழகம்| சென்னை|

Source:::: The Hindu… Tamil

Natarajan

” உள்ளத்தில் நல்ல உள்ளம் …காந்திமதி அம்மாவின் சேவை …”

 

  • அன்னப் படையல் நடக்கிறது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
    அன்னப் படையல் நடக்கிறது. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
  • காந்திமதி
    காந்திமதி

‘‘நாளைக்கு என்ன வரும் என்று தெரியாது. ஆனால், யார் மூலமா வது வரவேண்டியது எப்படியாவது வந்துவிடும். அந்த நம்பிக்கையில் தான் அன்றாடப் பொழுது விடிகிறது’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் காந்திமதி.

யார் இவர்? மதுரை கீழமாசி வீதியில் உள்ள டெலிபோன் எக்ஸ் சேஞ்ச் வாசலில் தினமும் மதியம் 12 மணிக்கு தவறாமல் காந்திமதியைப் பார்க்கலாம். அவரது வருகையை எதிர்பார்த்து 50-க்கும் மேற்பட்டோர் அங்கு காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது பசியைப் போக்கும் புண்ணிய காரியத்தைச் செய்து வருபவர்தான் காந்திமதி.

சேவை செய்ய வந்தவர்

மதுரையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேவை செய்வதற்காக 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார் காந்திமதி. இப்போது அந்த சங்கத்தையே அவர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தனது சேவை குறித்து ‘தி இந்து’விடம் மனம் திறந்து பேசுகிறார் காந்திமதி..

இந்த சங்கத்தை அன்பானந்தம் ஐயாதான் 12 வருஷமா நடத்திட்டு இருந்தார். நான் சேவை செய்யுறதுக்காக இந்த சங்கத்துக்கு வந்தேன். இயலாதவங்களுக்கு சேவை பண்றது பிடிச்சிருந்ததால, சம்பளம் வாங்காமலே வேலை பார்த்துட்டு இருந்தேன்.

ரெண்டு வருஷம் முன்னாடி அன்பானந்தம் ஐயா உடம்புக்கு முடியாமப் போய் இறந்துட்டாரு. அந்த நேரத்துல சங்கத்தை எடுத்து நடத்த யாரும் முன்வரல. ஏதோ ஒரு தைரியத்துல நானே எடுத்து நடத்த முடிவு பண்ணேன்.

தினமும் இங்கே பஜனை நடக்கும். வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் பெயர் சொல்லும் சங்கம் என்பதால், பசி என்று வந்தவர்களுக்கு தினமும் அன்னப் படையலும் நடக்கிறது. சங்கத்தில் போதிய இடம் இல்லாததால் இங்கு சாப்பாடு சமைத்து கீழமாசிவீதி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வாசலுக்கு கொண்டு போயிடுவோம். அங்கு பிளாட்பாரத்துல வைச்சு தினமும் அன்னப்படையல் நடக்கும். இங்க சாப்பிட வர்றவங்கள்ல பெரும்பாலானவங்க ஏழைகள், பிச்சைக்காரர்கள்தான். மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சிலரும் சாப்பிட்டுப் போவாங்க.

ஆன்மிக அன்பர்களின் உதவியில்..

எங்களது சேவை பற்றிக் கேள்விப்பட்டு, ஆன்மிக அன்பர்கள் அவங்களாவே வந்து நிதியுதவி செய்வாங்க. அவங்க கொடுக்கிற காசுலதான் தினமும் அன்னப் படையல் நடக்குது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளும் ஊழியர்களும் ரொம்ப ஆதரவா இருக்காங்க.

நாளைக்கு என எதையும் நாங்க சேர்த்து வைக்கிறதில்லை. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு இருந்துடுவோம். நமக்கு என்ன தேவையோ அது யார் மூலமாவது சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துடும்.

பிறந்த நாள், திருமண நாள் இதுக்கெல்லாம் சிலபேர் வந்து அன்னதானம் செய்வாங்க. அப்படி இல்லாத நாட்களில் எங்களிடம் இருக்கும் காய்கனிகளை ஒன்றாகப் போட்டு சாம்பார் சாதம் ஆக்கிக் கொடுத்துவிடுவோம்.

சராசரியாக தினமும் 70 பேருக்கு ஒருவேளை அன்னப்படையல் வைக்கிறோம். இதுக்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. இதுபோக, இந்தக் கட்டிடத்துக்கு மாத வாடகை ரூ.3500 கொடுக்கணும். எல்லாமே அன்பர்கள் உதவியில்தான் நடக்குது.

‘இறைவன்தான் படியளக்கிறார்’

இந்த சேவையை நான் செய்யுறதா நினைக்கல. இறைவன்தான் எல்லோருக்கும் படியளக்கிறார். அந்த சேவையில நானும் ஒரு ஊழியரா வேலை பார்க்கிறேன். காலா காலத்துக்கும் இந்த சேவை நிக்காம நடக்கணும்னு நீங்களும் பெருமாளை வேண்டிக்குங்க. வேண்டுதல் கோரிக்கையோடு விடை கொடுத்தார் காந்திமதி.

source:::: THE HINDU….TAMIL

Natarajan

 

வாழ்த்த்துவோம் வாங்க சஞ்சய் குமாரை !!!

சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்:

பெற்றோருடன் சஞ்சய்குமார்

பெற்றோருடன் சஞ்சய்குமார்

எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஏழைகளின் உயிர் காக்கும் மருத்துவ சேவைக்காக ஓடோடி வந்து உதவுகின்றனர். சஞ்சய்குமாரின் சேவை சற்றே வித்தியாசமானது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். எப்படி? விவரிக்கிறார் வேணுகோபால்..

11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை

சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக் கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

8 விருதுகள் பெற்ற சஞ்சய்

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

210 பேருக்கு உதவி

யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன்.

டீச்சர் தரும் டியூஷன் ஃபீஸ்

இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்!

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார். வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

“ஓரிக்கையில் இருக்கும் பெரியவா பாதுகை …”

ஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம்! பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்?”

“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா? இதை பெரியவாட்ட குடுக்கறதுக்கு….”

“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் ?…”

“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”

” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்?..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

“பர்மிஷனா!…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே! அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே!..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”

“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா?…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே! ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ?…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்!

வேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது! “சித்த இருங்கோ பட்! அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை. சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான்! அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது! அவருக்கும் மெதுவாகவே பேச வராது!

இதோ! சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது! இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.

“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.

“இதானா விஷயம்! குடுங்கோ…மாமா அந்த பாதுகைகளை!” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார். கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை! உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.

அவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி! இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம்! உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் !!

இரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.

ராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க!

மஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அபிஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.

Jaya Jaya Sankara Hara Hara Sankara.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::www.periva.proboards.com

natarajan

படித்து ரசித்தது … “ஒரு போலி அசலான கதை” !!!

 

 

பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.

மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.

ஒரு போலி உருவாகிறது

மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.

அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.

அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

source:::: THE HINDU…TAMIL
Natarajan