சுப்ரபாதத்தின் முதல் வரி… தந்தது யார்…?

venkada

அன்னையாய், குழந்தையாய், காதலனாய், தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும், அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில், காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம்  செய்துகொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு ரசானுபவம்!

இதன் அடிப்படையிலான விளைவுதான், திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் வழிபாடுகளும் எனலாம். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும், சைவ சமயத்தில் மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும்கூட சுப்ரபாதம் உண்டு. அவ்வளவு ஏன்? ஜைன மதத்திலும் சுப்ரபாதம் பாடப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே விசேஷமானவை. எனினும், வேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி, விஸ்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.

ராமபிரானின் பால பருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார். தசரதரோ தயங்கினார். பின்னர், குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி ராமனை அனுப்பச் சம்மதித்தார். கூடவே, லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார்.
விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன், வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும், மகான்களின் சரிதைகளையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவு வேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் ராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்ர மகரிஷியுடன்  கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள்.

பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்க வேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு, நெகிழ்ந்தார் விஸ்வாமித்ர மகரிஷி. மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார், ‘கௌசல்யா சுப்ரஜா ராமா…’ என்று! ஆக, முதன்முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.
இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் வேங்கடேச சுப்ரபாதம்.

வேங்கடேச சுப்ரபாதம்

திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.

வேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

2-ம் பகுதி- வேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.

3-ம் பகுதியான பிரபத்தியில், திருமகளின் பெருமை குறித்தும், வேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.

4-வது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

அரங்கமாநகருளானுக்குத் திருப்பள்ளி யெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது.

திருமலையில் வேங்கடேச சுப்ரபாத தரிசனம்

திருமலை வேங்கடவனுக்கு நித்தமும் பல ஸேவைகள் நடை பெறும் என்றாலும், முதலாவதாக இடம்பெறுவது சுப்ரபாத ஸேவைதான். அதிகாலையில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், கோயில் சேவகர்கள், வீணை இசைக் கலைஞர்கள் ஆகியோர் தங்க வாசலை அடைவார்கள். அங்கே துவார பாலகரை வணங்கி, ஸ்வாமியை மனத்தில் தியானித்தவண்ணம் திருக்கதவைத் திறப்பார் அர்ச்சகர். அனைவரும் நுழைந்ததும், கதவு சாத்தப்படும்.

பிறகு, திருச்சந்நிதியில் தீபங்கள் ஏற்றப்பட, வேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க… முதல் நாள் இரவு தொட்டிலில் கிடத்திய ‘போக நிவாஸ மூர்த்தி’யை திருப்பள்ளி எழுந்தருளச் செய்வார்கள். பின்பு, அவரை மூலவருக்கு அருகில், எப்போதும் அவர் இருக்கும் இடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். வேங்கடேச சுப்ரபாதம் முடியும் தருணத்தில் சந்நிதியின் திருக் கதவுகள் மீண்டும் திறக்க, ஸ்வாமிக்கு பாலும் வெண்ணெயும் சமர்ப்பித்து, தீபாராதனை நிகழும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர். இந்த தரிசனத்தையே சுப்ரபாத தரிசனம், விஸ்வரூப தரிசனம் என்பார்கள். அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை, திருமகள் நாயகனைக் காணக் கண்கோடி வேண்டும்.

பகவானின் அர்சசாவதார நிலையில் (உருவ வழிபாடு – தற்போது நாம் திருக்கோயில்களில் வழிபடும் தெய்விகத் திருவுருவங்
கள்) முதன்முதலாக திருமாலுக்கு சுப்ரபாதம் பாடிய பாக்கியமும் பெருமையும் பெற்றவர் யார் தெரியுமா?
‘பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்’ என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப் பட்டது வேங்கடேச சுப்ரபாதம். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், பி.வி.அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத் தரப்பட்டது.

இவரிடம் இருந்து வேங்கடேச சுப்ரபாதம் பாடும் முறையைக் கற்றுக்கொண்ட அனந்தசயனம் ஐயங்கார், தனது வாழ்நாள் முழுவதும் திருமலை சந்நிதானத்தில் சுப்ரபாத ஸேவையில், அந்தத் தெய்விகப் பாடலைப் பாடி சேவை செய்திருக்கிறார். முதன்முதலில் இசைத்தட்டு வடிவில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வெளியிட்டவரும் அனந்தசயனம் ஐயங்கார்தான். இவருக்குப் பிறகே, திருப்பதி திருமலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில்  சுப்ரபாதம் ஒலிக்கத் துவங்கியது.!

Source…..www.vikatan.com

Natarajan

 

ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

அன்றே சொன்னார் அண்ணல்…!

 

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவர் அடையாளப்படுத்திய ஏழு பாவங்களை விலக்கி வாழ சற்றே வரலாற்றை திருப்புவோம். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30-இல் புது தில்லியில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.
அப்போது பத்திரிகைகளுக்கு ஒருவர் விடுத்த செய்தி. “பாபு நமக்கு விட்டுச் சென்றுள்ள பணியை இனிது நிறைவேற்ற நாம் பகீரத முயற்சி செய்ய வேண்டும். பாபு வாழ்ந்ததும், இறந்ததும் நம் அனைவருக்காகவுமே. ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவருக்குமாக.
பகைமை, பேராசை, வன்முறை, பொய்மை என்னும் தீய வழியிலிருந்து நம்மைத் திருப்பும் பொருட்டும் பாபு தன் வாழ்நாளில் ஓயாது உழைத்தார். அதற்காகவே மரணத்தையும் தழுவினார்.
நாம் பாவங்களுக்காகப் பிராயசித்தம் செய்து, பாபுவின் புனிதக் குறிக்கோளுக்காகத் தொண்டாற்ற வேண்டுமானால், வகுப்புவாதம் எந்த வடிவில் தோன்றியிருந்தாலும் அது ஒழிய வேண்டும்.
அத்துடன் கள்ள வணிகம், லஞ்ச ஊழல், நியாயமற்ற சலுகைகள், பொறாமை, பகைமை உணர்வு, பொய்மை, வன்முறை ஆகியவற்றின் இருள் தோற்றங்கள் அனைத்தும் அகல வேண்டும். உறுதியான மனத்துடனும், தயங்காத கையுடனும் அவற்றை எதிர்க்க வேண்டும்.
பாபு அன்பே உருவானவர். மென்மையே அவர் பண்பு. ஆயினும் தீயவற்றுடன் போராடுவதில் அவர் தயங்கவில்லை. தன்னிடம் இருந்த தீமையை வென்றதால்தான், புறத்தே தலைதூக்கிய தீமையுடன் பாபுவால் போராட முடிந்தது. நம் முன்னுள்ள மகத்தான பணிக்கு நம்மை அருகதையாக்கும் வகையில் இறைவன் நம்மை தூய்மைப்படுத்துவாராக’.
இப்படிச் சொன்னவர் பண்டித ஜவாஹர்லால் நேருவோ சர்தார் வல்லபபாய் படேலோ இல்லை. பல ஆயிரம் கல் தொலைவில் உள்ள இங்கிலாந்து நாட்டில் பிறந்து, தனது அறிவின் மேன்மையால், தனது ஆன்ம கடைத்தேற்றத்திற்கு சரியான “குரு’ பாரத நாட்டின் அண்ணல் காந்தியடிகள்தாம் என்பதை உணர்ந்த “மிஸ் ஸ்லோடு’ என்கிற மிஸ் மீரா விடுத்த செய்திதான் மேற்சொன்னவை.
பிரிட்டிஷ் கடற்படையின் கிழக்கிந்திய தலைமைத் தளபதியின் மகளான இவர் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து எழுதிய காந்திஜி பற்றிய நூலால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளை தனது மானசீக குருவாக வரித்துக் கொண்டவர்.
சபர்மதி ஆசிரமத்தில் சேர விரும்பிய அவருக்கு அண்ணல் ஓராண்டு ஆசிரம வாழ்க்கைக்கு தயார் செய்து கொண்ட பின்னர் அவர் வர விரும்பினால் வரலாம் என்று அனுமதி வழங்கினார்.
ஓராண்டு காலம் தன்னை ஒரு பாரத ஆசிரமவாசியாக மாற்றிக் கொள்ள இங்கிலாந்தில் தானாகவே பயிற்சி மேற்கொண்டார். நடை, உடை, உணவு மற்றும் பாரதத்தின் ஆன்மிக பனுவல்கள் இவற்றில் தேர்ச்சியுற்றார். பின்னர் கப்பலேறி இந்தியா வந்தார்.
சபர்மதி ஆசிரமத்தில் தன் வாழ்வை அர்ப்பணித்தார். 23 ஆண்டுகள் அண்ணலின் அன்பைப் பெற்று அவரது மகளாக “மீரா’வாக வாழ்ந்தார். அவர்தான் அண்ணல் சொல்லிய ஏழு பாவங்களை விலக்கும் விதமாக ஒரு இரங்கற் செய்தியை பத்திரிகைகளுக்கு அளித்தார்.
அந்த ஏழு பாவங்கள் 1. ஒழுக்கம் இல்லாத கல்வி 2. கொள்கையில்லாத அரசியல் 3. உழைப்பு இல்லாத ஊதியம் 4. நேர்மை இல்லாத வணிகம் 5. மனசாட்சி இல்லாத இன்பம் 6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் 7. தியாகம் இல்லாத வழிபாடு.
1. ஒழுக்கம் இல்லாத கல்வி: இன்றைய நாளில் மாணவர்களின் ஒழுகலாறுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஊடகங்கள் வாயிலாக கவனித்தால் மனம் அழுகிறது. கல்விக் கருவிகளான எழுதுகோல், ஏடுகள், நூல்கள் தூக்க வேண்டிய கரங்கள் கம்புகளையும், கத்திகளையும் ஏந்துகின்ற காட்சிகள் கண்களில் உவர்நீரை பெருக்குகின்றன.
ஒழுக்கம், நல்ல பழக்கம் பேண ஆசிரியர் அறிவுறுத்தினால் மாணவரின் அரிவாள் வெட்டுக்கு பலியாகிறார். மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவர்தம் வகுப்பறைகளிலேயே மது அருந்தி மகிழ்வதும் வழக்கமாகி வருகிறது. இந்த கொடிய சீர்கேட்டினைத்தான் காந்தி அன்றே ஒரு பாவமாக கருதினார்.
2. கொள்கை இல்லாத அரசியல்: ஆளுக்கொரு கட்சி, அவரவர்க்கு ஒரு கொள்கை, ஒரு கொடி. ஆனால் தேர்தல் களத்தில் நிறம் மாறும் பச்சோந்தி போலவும், மானத்தை விற்கும் மனிதர் போலவும், தனது லட்சியங்களுக்கு முரண்பட்ட கட்சிகளோடு உடன்பாடு கொண்டு அரசு கட்டிலில் அமரத் துடிக்கும் சில கட்சிகளைத்தான், கொள்கையில்லா அரசியல் என்று சொன்னார் தேசப் பிதா.
3. உழைப்பு இல்லாத ஊதியம்: போராட்டக் களமாகட்டும், கொள்கை விளக்கக் கூட்டமாகட்டும், கொடி பிடிக்கும் நேரமாகட்டும், எப்போதாவது நமது தொழிற்சங்கத் தலைவர்கள் யாரேனும் தொழிலாளர்களைப் பார்த்து உழைப்பின் உன்னதத்தை உணருங்கள். உற்பத்தியை பெருக்குங்கள், உழைக்காமல் ஊதியம் பெற எண்ணாதீர்கள். உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்யாதீர்கள்.
வேலைநிறுத்தம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. உழைப்போம், ஊதியம் பெறுவோம். பிரச்னை எதுவாயினும் சரி உற்பத்தி கெடாமல் உயர்வு பெற சிந்திப்போம் என்று சொன்னதுண்டா? நாம் கேட்டதுண்டா? உழைப்பு நல்கா ஊழியம் பெறுதலை அண்ணல் ஒரு பாவமாகவே எண்ணினார்.
4. நேர்மை இல்லாத வணிகம்: வணிகச் சந்தையில் மக்கள் பெருமளவில் விரும்பி வாங்கும் ஒரு பொருளை அதன் வடிவமைப்பிலே போலியாக மற்றொரு பொருளை புழக்கத்தில் விடும் நேர்மையற்ற வணிக முறை இந் நாளில் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.
இயற்கை பேரிடர் காலங்களில், இன்னபிற நெருக்கடியான நேரங்களில் இன்றியமையாத பொருள்களை அதிக விலைக்கு விற்கும் வணிகர்களைக் காண்கிறோம். இப்படி நேர்மையற்ற வணிக முறையைத்தான் பாவம் என எச்சரிக்கிறார்.
5. மனசாட்சி இல்லாத இன்பம்: இன்றைய நாளில் பாலுணர்வு வக்கிரங்கள் நாடெங்கிலும் நடக்கிறது. பச்சிளம் குழந்தைகள் கூட முதிய ஆடவர்களின் காமப் பசிக்கு இரையாவதை கேட்கும்போது மனிதக் கட்டத்தில்தான் நாம் வசிக்கிறோமா என்ற ஐயமே மேலிடுகிறது.
பழங்காலம் தொட்டு கடைப்பிடிக்கின்ற மரபுகள் மீறப்படுகின்றன. வேலியே பயிரை மேய்வதைப் போல கொடும் பாவிகள் வாழும் இந்த சமூக அவலத்தைத்தான் பாபுஜி மனசாட்சி இல்லாத இன்பம் எனக்கூறி தன் வேதனையை கொட்டுகிறார்.
6. மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்: தாவரங்கட்கும் உயிர் உண்டு என்றார் இந்திய விஞ்ஞானி. எவ்வுயிரும் பேதமுறா என்கிறார் வள்ளல் பெருமான். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கிறார் ஈசன். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் பல்லாயிரக்கணக்கில் எலி, முயல், தவளை, குரங்கு என பல வகை உயிரியினங்களை, விஞ்ஞான அறிவின் மேன்மைக்காக சித்திரவதை செய்து, கொல்லவும் தயங்குவதில்லை.
பல்கோடி மக்களை கொல்லவும் விஞ்ஞான வளர்ச்சியாக ரசாயன கொலைக் கருவிகளை கண்டுபிடிக்கத் தவறுவதில்லை. மானுடம் பால் இவர்கட்கு சற்றேனவேயாயினும் அபிமானம் இருக்குமானால் பல்லூயிர் அழிக்க படைக்கலன் எதற்கு? எனவேதான் அடிகள் இதனை வெறுக்கிறார்.
7. தியாகம் இல்லாத பிரார்த்தனை: ஆண்டுதோறும், திங்கள்தோறும், வாரந்தோறும், நாள்தோறும் இறைவனை தரிசிக்க, பிரார்த்தனை செய்து முடிக்க யாத்திரைச் செல்லும் மக்கள் கூட்டம். இல்லந்தோறும் வழிபாடு, வீதிதோறும் இறைவன் திருவுலா, ஊர்தோறும் உற்ஸவ பெருவிழா. எனினும் பிறர்வாழ தன்னையே அர்ப்பணிக்கும் அற்புத மனிதர் தொகை பெருகிறதா? இல்லையே!
பொது நன்மை கருதி எதையும் இழக்கத் துணியும் தியாக மனப்பான்மை வளருகிறதா? இவை பெருகாத நிலையில் நமது பிரார்த்தனைக்கு பொருள் உண்டா? தியாகமற்ற வெற்று சடங்குகளுக்கு இறைவன் காது கொடுப்பாரா? இதனை கருத்தில் கொண்டுதான் காந்தியடிகள் தியாகம் இல்லாத பிரார்த்தனை ஒரு பாவம் என்றார்.
பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்கூட அண்ணலை நன்றாக புரிந்து கொண்டு அவரின் சொற்களை கவனமாக செவிமடுத்தனர் என்பதற்கு “மிஸ் ஸ்லோடு’ விடுத்த பத்திரிகை செய்தி ஓர் உதாரணம்.
இணையற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் “இப்படி எலும்பும், சதையும், குருதியும் கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை பின்வரும் சந்ததியினர் நம்ப மறுப்பர்’ என்று கூறியது மிகவும் சரி. பாரதத்தில் வாழும் நாம் அவரது போதனைகளை இதுநாள் வரை கற்றோம் இல்லை.
தன் இளமையைத் துறந்து, தன் அன்பிற்குரிய பெற்றோரை பிரிந்து, தன் நாட்டை மறந்து பாரதத்தை புண்ணிய பூமியாக கருதி, அண்ணலின் நிழலாக வாழ்ந்த அந்த இங்கிலாந்து காரிகையின் மொழிகளை காந்தி பிறந்த இந்த நன்னாளில் ஏற்று வாழ்வோமாக!
வாழ்க நீ எம்மான்!

Source……டி.எஸ். தியாகராசன்  in http://www.dinamani.com

Natarajan

ஒரே சூரியன். ஒரே சந்திரன்.. ஒரே சாஸ்திரி! : அக். -2 லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்

tamil_news_large_1617513_318_219

அக்டோபர் 2 என்றவுடன் நம் சிந்தனைச் சிறையில் சட்டென மின்னலாய் வந்து மறையும் பெயர் காந்தி. அவர் பாசறையில் சத்தியம், நேர்மை பாடங்களை பயின்றவர்களில் முதலிடம் பெற்றவர் லால்பகதுார் சாஸ்திரி.

இவர் 1904 அக்டோபர் 2-ல் வாரணாசியில் பிறந்தார். சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருந்த போது, நேரிட்ட தந்தை சாரதா பிரசாத்தின் மரணம் தாயார் இராம் துலாரியை உலுக்கியது.

குடும்பம் வறுமையில் வாடினாலும், என்றும் வாடாத கல்வியறிவை புகட்ட விரும்பிய தாய் துலாரி, சாஸ்திரியை பள்ளியில் சேர்த்து விட்டார். ஆனால் புத்தகம் வாங்கப் பணமில்லை. புத்தகத்தை இரவல் பெற்று படித்தார். சாஸ்திரியின் வறுமையைச் சுருங்கச் சொல்ல

வேண்டுமெனில் 38 வயது வரை, தேநீர் அருந்தாமல் இருந்திருக்கிறார்.

தேசப் பணி தெய்வப் பணி : ஒரு முறை காசியில் காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வெள்ளையர் ஏகாதி பத்தியம், சுதேசி கொள்கைகள் பற்றிய காந்தியின் பேச்சு 11வயது சிறுவன் லால்பகதுாரை காந்தமாய் தேசப் பணிக்கு இழுத்தது.

காசி வித்யா பீடம் கல்லுாரியில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் தத்துவப் பாடத்தை விருப்பப் பாடமாக படித்தார். சாஸ்திரியிடம் சைக்கிள் கூட இல்லை. 16 மைல் நடந்தே சென்று படித்தார். கல்லுாரியில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்ற சாஸ்திரி, 1925-ல் சாஸ்திரி பட்டம் பெற்றார்.

கொள்கைத் திறம் : 1927-ல் நாட்டின் ஒவ்வொரு நகரிலுள்ள மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று நேரு கேட்டுக் கொண்டதும், சாஸ்திரி மாறுவேடத்தில், காவல் துறையின் கண்களை ஏமாற்றி மிர்சாபூர் மணிக்கூண்டில் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். இதை ஒரு கட்டடத்தின் மாடத்தில் இருந்து கண்ணுற்ற லலிதா தேவி என்ற பெண்மணி சாஸ்திரி மீது காதல் வயப்பட்டார், பின் லலிதா தேவி, லலிதா சாஸ்திரியானார்.

மணமேடையில் புரோகிதர், 7 கட்டளைகளை லலிதாவுக்கு கூற, சாஸ்திரி தன் மனைவியாகப் போகும் லலிதாதேவி இன்று முதல் கதராடைதான் அணிய வேண்டும் என்று எட்டாவது கட்டளையிட்டார். முதலிரவில் லலிதாதேவி கதராடை அணியாததால் அந்த அறையை விட்டு வெளியேறினார். சாஸ்திரியின் சகோதரி, ஒரு கதர் புடவையை லலிதாவுக்கு வழங்கிய பின்பே, அந்த அறைக்குள் நுழைந்தார். எதற்கும் சலனப்படாத கொள்கைப் பிடிப்பு சாஸ்திரிக்கு மட்டுமே சாத்தியம்.விடுதலைப் போராட்டத்தில் சாஸ்திரி 10 முறை கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் வரை சிறைவாசம் செய்தவர். மகளுக்கு நோய் கடுமையாகியது மகள் இனி பிழைக்க மாட்டாள் என்ற செய்தி சாஸ்திரி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கம்பிகளைத் தட்டி தெரிவிக்கப்பட்டது. செய்தி அறிந்த சாஸ்திரி மகளைப் பார்க்க பரோல் கேட்கவில்லை, ஏனெனில் பரோலுக்கு ஆங்கில அரசின் பல நிபந்தனைகளை ஏற்று கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

சாஸ்திரியின் உறுதி வெள்ளையரின் கறுப்பு இதயத்திலும் ஒளி வெளிச்சத்தை பாய்ச்சியது. சிறை அதிகாரிகள் நிபந்தனையற்ற பரோல் வழங்கினர்.

விறுவிறுவென வீடு சென்றார் அங்கே தன் செல்வ மகளைக் கண்டார் உயிரற்ற சடலமாய். மகளின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார், பரோலை இடையே ரத்து செய்துவிட்டு தானாகவே சிறைக்கு சென்றுவிட்டார்.

பதவிகளுக்கு சிறப்பு : 1952-ல் நேருவின் மத்திய அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு நாள் வாரணாசியிலிருந்து மொகல்சராய் ரயில் நிலையத்தில் ரயிலைப் பிடிக்க காரில் கிளம்பினார், ரயில்வே அமைச்சர் சாஸ்திரியின் வருகை விஷயத்தை அறிந்த ரயில்வே கார்டு அவர் வரும் வரை ரயிலை தாமதப்படுத்தினார்.

சாஸ்திரி வந்த பின் ரயில் நகர்ந்தது. ரயில் தாமதத்தை உணர்ந்த சாஸ்திரி தன் வருகைக்காக தாமதப்படுத்திய ரயில்வே கார்டை பணிநீக்கம் செய்தார். அரியலுார் ரயில் விபத்தில் 150 பயணிகள் இறந்த போது பதவியை ராஜினாமா செய்தார். “அரியலுார் பாலத்தை கட்டியவர்கள்

வெள்ளையர்கள், பாலம் அரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் ரயிலை ஓட்டிச் சென்றவர் யாரோ ஒரு டிரைவர். இதற்கு நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பலரும் கேட்டனர்.

என்றாலும் விபத்துக்கு சட்டப் பூர்வ பொறுப்பாளி நானே என முடிவு செய்து ராஜினாமா செய்தார்.

1962-ல் சாஸ்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது அவசரமாக கோல்கட்டாவிலிருந்து டெல்லி திரும்ப விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரம். அப்பொழுது கோல்கட்டா காவல் கண்காணிப்பாளர், விமான நிலையம் செல்ல உள்துறை அமைச்சர் சாஸ்திரியிடம், தங்களின் கார் முன்னால் அபாய ஒலி எழுப்பும் காவல்துறை வாகனத்தை அனுப்புவதாகவும் இதனால் சாலையில் நெருக்கடி குறைந்து நீங்கள் விரைவில் விமான நிலையத்தை அடையலாம் என்று யோசனை தெரிவித்தார்.

அந்த யோசனையை மறுத்த சாஸ்திரி “உரத்த ஒலி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனத்தை மக்கள் பார்க்கும் போது யாரோ மிகப் பெரிய மனிதர் செல்வதாக நினைத்துக் கொள்வர். என்னைக் கண்டவுடன் இவ்வளவு சிறிய மனிதனுக்காகவா? என ஏமாற்றமடைந்து விடுவர்” என்றார். பதவியின் படாடோபத்தை துச்சமாக நினைத்த பரிசுத்தமானவர் சாஸ்திரி.

1964-ல் நேரு இறந்த பின்பு, சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார் காமராஜர். கதர் குல்லாயுடன் சாதாரண மனிதனாக இருந்த சாஸ்திரிக்கு, பிரதமர் பதவி என்பது தங்க கிரீடமாய்த் தோன்றவில்லை.ஒரு நாள் பிரதமர் சாஸ்திரி வீட்டுக்கு தரமான அரிசியை வாங்கி வந்தார் சாஸ்திரியால் வளர்க்கப்பட்ட ராம்ஸ்வரூப், “ஒரு சாதாரண மனிதனால் இது போன்ற அரிசியை விலை கொடுத்து வாங்க இயலாது, நம் குடும்ப வரவு செலவுக்கு இந்த அரிசி ஒத்து வராது, இந்த அரிசியைக் கொடுத்துவிட்டு நம்மைப் போல் சாதாரண மக்கள் சாப்பிடும் அரிசியை வாங்கி வா” என்றார்.

ஜெய் ஜவான்! ஜெய் கிஸான் : 1965-ல் இந்தியா–பாகிஸ்தான் போரின் போது கோபத்தால் கொந்தளித்த சாஸ்திரி ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று முழங்கினார். நாட்டு மக்கள் அவரின் பின்னால் அணிவகுக்க இந்தியா போரில் வென்றது. முடிவில் ரஷ்யாவின் தாஷ்கண்டில்

இந்தியா–பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கைக்குப் பின் 11.1.1966-ல் மறைந்தார்.

மரணத்துக்குப் பின், சாஸ்திரி பயன்படுத்திய சிறிய பியட் கார், மாதத் தவணை செலுத்த இயலாத காரணத்தால், கடன் வாங்கப்பட்ட நிறுவனத்திடமே, சாஸ்திரியின் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.காமராஜர் திட்டத்தால் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாஸ்திரி தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “நானும் எனது குடும்பமும் மிகச் சிறிய வீட்டிற்கு இடம் பெயர்கிறோம், காய்கனிகள் மற்றும் பாலின் அளவைக் குறைத்துக் கொண்டோம். நாங்களே துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டார்.

“சாஸ்திரியின் வாழ்க்கை – கடந்த கால அதிசயம்!

சாஸ்திரியின் நேர்மை -இன்றைய மக்களின்

எதிர்பார்ப்பு!

சாஸ்திரியின் எளிமை, உண்மை – எதிர்கால

ஜனநாயகத்திற்கான திறந்த புத்தகம்!

Source:::::

முனைவர். சி. செல்லப்பாண்டியன்

உதவிப் பேராசிரியர்

அருப்புக்கோட்டை, 78108 41550   in http://www.dinamalar.com

Natarajan