” இன்று தத்தாத்ரேயா ஜெயந்தி … ”

 

 

 

Temple images

மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.

ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே… உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே… உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்… என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர். அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன். தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன். எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.  பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது. ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன். வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.

உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன். தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்… என்று, அடுக்கிக் கொண்டே போனார். பார்த்தீர்களா… இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள். தத்தாத்ரேயர் ஜெயந்தி, வைகாசி தசமியன்று நடக்கும். கோவை மாவட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. பழநியிலிருந்து, 21 கி.மீ., உடுமலையிலிருந்து, 18 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது.

source::::DINAMALAR…TAMIL DAILY.

Natarajan

 

படித்ததில் பிடித்தது …. என்றும் எப்போதும் என் கந்தன் …

படித்ததில் பிடித்தது……

திருமுருக கிருபானந்த வாரியார்

(1) காலை எழுந்தவுடன்

காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ
[‘மாலை தனில்’- திருப்புகழ்]

(2) வழிபாடு தொடங்கும்போது

உம்பர்கள் ஸ்வாமி நமோ நம
எம்பெருமானே நமோ நம
ஒண்டொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூஜை செய்து
உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே
[‘கொம்பனையார்’- திருப்புகழ்]

(3) வெளியே புறப்படும்போது

சேய அன்பு உந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்தில்சேய!
வன்பு உந்து இகல் நிசாசராந்தக! சேந்த! என்னில்
சேயவன், புந்தி, பனிப்பானு, வெள்ளி, செங்கதிரோன்,
சேயவன், புந்தி தடுமாறவே தரும் சேதமின்றே.
“வள்ளி மணாளனே! அசுரர் குலாந்தகனே! சேந்தனே! என்று துதிப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் வக்ரோதயங்களால் ஆகும் தீமையில்லை.”- [கந்தர் அந்தாதி]

(4) ஒரு செயலைத் தொடங்கும் போது

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல் கொடு பொடித் தூளதா எறி
நினைத்த காரியம் அனுக்கூலமே புரி பெருமாளே
[‘விலைக்கு மேனி’- திருப்புகழ்]

(5) உண்ணும் போது

“அகில புவனாதி யெங்கும்
வெளியுற மெய்ஞ்ஞான இன்ப
அமுதை யொழியாதருந்த அருள்வாயே”
[‘சுருளளக’- திருப்புகழ்]

(6) மாலை கடவுளுக்குத் தீபம் ஏற்றும் போது

“மோகாந்தகாரம் தீர்க்க
வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே”
[‘நாகாங்க’- திருப்புகழ்]

“தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய்”
[‘நாத விந்து’- திருப்புகழ்]

(7) நோய்கள் நீங்க

“தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்
விழிவலி வறட்சூலை காயா சுவாசம் வெகு
சலமிகு விஷப்பாக மாயா விகார பிணி அணுகாதே”
[‘தலைவலி’- திருப்புகழ்]

(8) இடர்கள் நீங்க

“அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து
அலைவாயுகந்த பெருமாளே.”
[‘விறல் மாரன்’- திருப்புகழ்]
தகவல் சித்ரா மூர்த்தி.  in MURUGAN  BHAKTHI
[கிருபானந்த வாரியார் எழுதிய ‘குமரனும் கோசலை குமரனும்’ எனும் புத்தகத்திலிருந்து]

நன்றியுடன் :::: நடராஜன்

முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்….

 

 வள்ளி தெய்வானை சமேத முருகன்

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவர்கள் மும்மூர்த்திகளை வணங்கினாலும் இயற்கை வழிபாடுகளை கைவிடவில்லை. மனித குல மேம்பாட்டிற்கு அத்யாவசயம் என்பதினால் காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வாயு போன்ற ஐந்தையும் புனிதமாகப் போற்றி வணங்கி வந்தார்கள்.

அது போலவே மரங்களும் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சில மரங்களை ஸ்தல விருட்ஷங்கள், அதாவது ஆலயத்து புனித மரங்கள் என அவற்றை மக்கள் தற்போது வணங்கி வந்தாலும், பண்டையகால மனிதர்களும் மரங்களை இயற்கை வழிபாடு என்ற பெயரில் வணங்கி வந்துள்ளார்கள்.

பிறந்தது முதலே முருகனும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளார். சிவனுடைய மூன்றாம் கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாக வெளி வந்தவரை வாயுவே (வாயு பகவான்) எடுத்துச் சென்று சரவணப் பொய்கை எனும் நதியில் இருந்த ஆறு தாமரை மலர்கள் மீது ஆறுமுகமாக வைத்தார்.

முருகப் பெருமான் தன்னுடைய பிறப்பில் இருந்தே இயற்கையின் ஐந்து புலன்களுடன் சம்மந்தப்பட்டு இருந்துள்ளார். சங்க இலக்கியங்களில் அவரை செடி கொடிகளும் மரங்களும் அடர்ந்த குறிஞ்சி மலையின் அதிபதி என்று கூறி உள்ளார்கள்.

பண்டையக் காலம் முதல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் ஆலயங்களை எழுப்புவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள். தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனைக் கொல்லச் சென்ற போது அவன் ஒரு மாம்பழ மரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நின்று கொள்ள, அதை கண்ட முருகனும் ஒரு அம்பை எய்து அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து விட ஒன்று அவருடைய மயில் வாகனமாகவும், இரண்டாவது அவருடைய சேவல் கொடியாகவும் மாறியது.

ஆகவே சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறும்போது இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக அங்கு மாம்பழ மரத்தைப் போல ஒன்றை வைப்பது வழக்கம்.

காலம் செல்லச் செல்ல பக்தர்கள் முருகனுக்கு ஆலயங்களை அமைக்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருந்த ஸ்தல விருட்ஷங்களையும் வணங்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட ஒரே மரம் தல விருட்ஷமாக இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

உள்ளூர் நிலைக்கேற்ப முருகன் ஆலயங்களில் இருந்த தல விருட்ஷங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் உள்ள மரங்களின் வரலாற்று மகத்துவத்தையும், மருத்துவ குணங்களை ஆராய்வதுமே ஆகும்.

அவற்றைக் குறித்த புராணக் கதைகளையும் ஆராய்ந்தேன். இதில் ஸ்தல புராணங்கள், படித்தப் புத்தகங்களின் சாரம், மற்றும் அந்தந்த ஆலயங்களுக்கு விஜயம் செய்த போது அங்கு கேட்டறிந்த செய்திகள் போன்ற அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முருகனுடைய ஆலயம் பல இடங்களிலும் இருந்தாலும், வெவ்வேறு தல விருட்ஷங்களைக் அடங்கிய ஆலயங்களையே ஆராய்ந்தேன்.

தாமரை மலர்கள் மற்றும் மாம்பழ மரங்களைத் தவிர இந்தக் கட்டுரையில் காணப்படும் மரங்கள் வருமாறு: ராணி மலர் அல்லது மருதம் (Terminalia Arjuna), பன்னீர் அல்லது இந்திய கற்பூரவல்லி (Guettarda speciosa), புன்னை (Calophyllum inophyllum ), நெல்லி (Emblica officinalis), மகிழம் (Mimusops elengi), பலா (Artocarpus integrifolia), குரா (Webra corymbosa), பத்ரி ( Stereospermum suaveolens), வன்னி (Prosopis spicigera) மற்றும் கல் அதி (Ficus retusa auct) போன்றவை அவை.

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை தண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் ‘மருதமரம்’. அதை சமஸ்கிருதத்தில் ‘அர்ஜுனா’ என்கிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மருத மரங்கள் அதிகமாக உள்ளதினால் அந்த ஆலயத்தின் பெயரும் அதனால் வந்திருக்கலாம். இந்த மரத்தில் சிறிய சிறிய பூக்களே பூக்கின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷத்தை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்த மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள பட்டைகளை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவத்தில் இருதய நோய்க்கு மருந்தை தயாரிக்கின்றார்கள்.

‘வாகதத்தா’ மற்றும் ‘சக்ரதத்தா’ போன்ற பெரும் மருத்துவ நிபுணர்கள் இருதய சிகிச்சைக்கான வேறு பல மருந்துகளுடன் இந்த மரத்தில் இருந்து செய்த மருந்தையும் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதில் செய்யப்படும் மருந்துகள் ஆஸ்துமா நோய்க்கு நல்ல மருந்தாகும். இதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடைந்து போன எலும்புகள் இணையும்போது அவை வலுப்படும். வயிற்று நோயான பேதியை நிறுத்த மருதப் பொடியை உண்ணலாம்.

இளம் பெண்களின் முகங்களில் தோன்றும் சிறு பருக்களுக்கு இந்த மரப்பட்டையின் பசையைத் தடவலாம். தேள் கடிக்கு இந்த மரத்தின் பட்டையை எரித்து அதன் சாம்பலை தடவினால் உடனே குணமாகும். இயற்கையில் நுண்ணுயிரிகளால் விளைவும் தீமைகளை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் சக்தி கொண்டது இந்த மரம்.

திருச்செந்தூரில் உள்ள முருகனின் ஆலயத்தில் பூஜை செய்த வீபுதியை பன்னீர் இலை மீது வைத்தே பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் பன்னீர் மரம் அங்கு முருகப் பெருமானுக்கு உகந்த மரம் ஆகும். இந்த மரத்தின் வெள்ளை நிறப் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. சில ஆலயங்களில் பன்னீர் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது.

இரவில் பூத்துக் குலுக்கும் இந்தப் பூவின் வாசனை நல்ல நறுமணத்தைக் கொண்டு உள்ளது. இந்த மரத்தின் பூக்களை அர்ச்சனை செய்யவும், மாலையாகக் கோர்த்து தெய்வங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் பட்டைகள் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளது. இந்த மரப்பட்டையை வயிற்று நோயான பேதியை நிறுத்தும் மருந்துகள் செய்யவும், வீடுகளில் மேஜை நாற்காலிகளை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் தோல் பகுதிகளில் உப்பிக் கொள்ளும் இடங்களில் இந்த மரத்தின் இலைகளை வைத்துக் கட்ட உப்புசம் குறையுமாம்.

புன்னை மலர்கள் சாதாரணமாக சிவபெருமானின் காலை வேளை பூஜையில் போடப்படும் மலராகும். புன்னை மரம் கடலூரில் மைலம் எனும் இடத்தில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ஸ்தல விருஷம் ஆகும். இது வாழ்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் மரமாம்.

புராணங்களில் ‘புன்னக வனம்’ என்று கூறி இந்த மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன. பண்டைய காலத்தில் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்ததாம். பூக்க வேண்டிய காலத்தில் இந்த மரத்தில் பூக்கள் தோன்றவில்லை என்றால் ஊர் பெண்கள் அந்த மரத்தை சுற்றி நின்றவாறு நடனம் ஆடிக்கொண்டே அதை எட்டி எட்டி உதைப்பார்களாம்.

அப்படி செய்வதின் மூலம் பூக்காத மரங்களும் பூக்கத் துவங்கும் என்பது ஆச்சர்யமான உண்மையாக இருந்துள்ளது (Agrawala, Ancient Indian Folk Cults, 1970, Varanasi). புன்னை மலரின் சாற்றைப் பூசுவத்தின் மூலம் மேக நோயும் (venerial disease), உடலில் தோன்றும் கொப்புளங்களும் குணமாகுமாம்.

புன்னை மர இலைகளை பொடி செய்து உபயோகித்தால் தலை சுற்றலும், தலை வலியும் குணமாகும். நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியும் (நடுக்கம்) இதன் மூலம் குணமாகிறது. இந்த மரத்தின் அடிமரப் பட்டையின் சாற்றை உட்கொண்டால் உடலுக்குள் மற்றும் வெளியில் வெளியேறும் ரத்தம் கெட்டிப்பட்டு நின்று விடும்.

இந்த மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை ஊசி மூலம் தசையில் செலுத்திக் கொண்டால் தொழு நோயினால் ஏற்படும் வலியை குறைக்க முடியும் என்பது ஆச்சர்யமான செய்தியாக உள்ளது (Dustur, J. F., Medicinal Plants of India and Pakistan, 1962, Bombay).

இந்த மரத்தின் விதையில் இருந்து பெறப்படும் பச்சை வண்ண எண்ணை நாற்றம் அடித்தாலும், தசை வலி, மூட்டு வலி, தோல் வியாதி மற்றும் சீழ்ப்புண் (அல்சர்) போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது. (Cowen, D. V., Flowering Trees and Shrubs in India, 1984, Bombay). இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் கட்டி அதாவது சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். (Krishnamurthy, T, Minor Forest Products of India, 1993, Delhi). புன்னை பழங்களில் இருந்து பசை கிடைக்கின்றது.

மகிழ மரம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்த மலர்கள் என்பதினால் வைஷ்ணவர்களும், சைவர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தவிர ஜைன மற்றும் புத்த மதத்தினரும் அதை பயன்படுத்துகிறார்கள். மகிழ மரங்கள் அமராவதி மற்றும் சாஞ்சி ஸ்தூபிகளுக்கு அருகிலும் உள்ளன.

‘நெமினத’ எனும் ஜெயின் தீர்த்தங்கரர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மோட்ஷம் அடைந்தாராம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், மதுரை மாவட்டத்தில் பூம்பாறையில் உள்ள குழந்தைவேல் ஆலயம் போன்றவற்றில் இந்த மரம் ஆலய ஸ்தல விருட்ஷமாகும். இந்த மரத்தின் மலர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்ட பூக்கள் ஆகும். அவை வாடினாலும் மணக்கும்.

இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் நிறையவே உள்ளன. இந்த மரத்தின் அடியில் இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு உணவு அருந்தனாலும், அதன் மீது எச்சில் துப்பினாலும் அந்த மரம் அதிக பூக்களை பூக்குமாம் (M. Amirthalingam,Sacred Trees of Tamil Nadu, Chennai, 1998, p 167). இந்தியப் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை பெறுவது வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அப்படி ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள், ஆலயங்களில் உள்ள இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு தொட்டிலைக் கட்டி விட்டால் ஆண் குழந்தைப் பிறக்குமாம்.

அது போல தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு கயிற்றைக் கட்டுவார்களாம். கோரிக்கை நிறைவேறியதும் ஆலயத்துக்குச் சென்று அங்கு கட்டி இருந்தக் கயிற்றை அவிழ்த்து விடுவார்களாம். முருகனை சியோன் என கருதுவதினால் (son of Korravai & Siva) குழந்தை வரம் கேட்டு அவரை வணங்குவார்களாம்.

குரா எனப்படும் சுரைக்காய் போன்ற மரம் தந்தைக்கும் மகனுக்கும் உகந்த மரமாம் (Siva and Murugan). நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள திருவிடைக்காய் எனும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷமாம் இந்த மரம்.

இந்த மரத்தை ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். காஞ்சீபுரத்தில் ஜைன காசி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்திலும் இதுவே ஸ்தல விருட்ஷம் ஆகும். இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு செய்தியின்படி ‘ தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்யனாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது’ (South Indian Inscriptions Vol. VII, No. 399).

ஸ்தல புராணத்தின்படி நல்ல மணம் கொண்ட இந்த மரத்தின் பூக்களை முருகன் பெரிதும் விரும்புகிறார். இந்த மரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டிவிட்டு, ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம்.

இந்த மரம் திருவிடைக்காளி ஆலயத்தில் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பொந்தில் உள்ள உள்ள நாகத்தை அங்குள்ள பண்டிதர் தினமும் பூஜித்து வருகிறார் . இந்த ஆலயத்தை சுற்றி உள்ளப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் யாருமே இதுவரை பாம்புக் கடிபட்டு இறந்தது இல்லையாம்.

கல் அதி அல்லது குறுகலான இலைகளைக் கொண்ட நாவல் மரமும் திருப்பரம்குன்றத்து சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகனுக்கு உகந்தப் புனிதமான மரமாம். திருப்பரம்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். சிறு மலைக் குன்றின் மீது உள்ள இங்குதான் சூரபத்மனைக் கொன்றப் பின் முருகப் பெருமான் வந்து தேவசேனாவை மணந்து கொண்டார்.

சங்க காலத்தை சேர்ந்த சிறப்பான பத்து காப்பியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் இயற்கையாகவே அழகாக அமைந்து உள்ள இந்த இடத்தின் பெருமையை விவரித்து உள்ளார். இந்த மரப்பட்டையின் சாறு வயிற்றுப் புண் மற்றும் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்துமாம்.

பலா, வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற மூன்றுப் பழங்களிலும் பலா முக்கியப் பங்கை வகிக்கின்றது. சேலம் மாவட்டத்தின் கொல்லிமலை ஆறுமுகப் பெருமான் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் பலா மரமாகும்.

பலா மரத்தின் இலைகள் வாழை இலையைப் போன்ற புனிதமான இலை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் கலசம் வைக்கும் பெண்கள் வாழை இலைகளை வைப்பது போல பலா இலைகளைக் கூட உபயோகின்றார்கள். பண்டைக் காலத்தை சேர்ந்த சில புத்த மத சிலைகளில் கூட பலா மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்த மரத்தின் அடியில் கடவுட்கள், அகமாக்கள், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அமர்ந்து இருந்ததான செய்தியைக் குறிப்பிட்டு அதன் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டி உள்ளார்கள் (M. Amirthalingam). இந்த மரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றினாலும் அது தெய்வங்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்த பலனைத் தருமாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டை முருகன் ஆலயத்தில் உள்ள முத்துக் குமரன் ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் பத்ரி மரமாகும். இதன் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. இந்த மரத்தின் பூக்கள் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்தவை.

அது மட்டும் அல்ல இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டுதான் பதினோராவது தீர்தங்கரான வசுபூஜ்யா என்பவர் ஞானம் அடைந்தாராம். அவர்களைத் தவிர ஒரு யக்ஷாவும் இந்த மரத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது (Bhattacharya, Jaina Iconography, Delhi, 1974). திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த மரமே ஸ்தல விருட்ஷமாகும்.

இத மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருந்துதான் பார்வதி தேவி தனது பாபங்களை விலக்கிக் கொண்டாராம். (Sthala Purana of Padaleeswarar temple). பண்டைய இந்திய மருத்துவ மேதைகளான ‘சரகா’, ‘சுஸ்ருதா’ மற்றும் ‘வராஹமித்ரா’ என்பவர்கள் இந்த மரத்தில் பல்வேறு பகுதிகளை பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தின் பட்டைகள் இருமல், வயிற்று வலி மற்றும் ரத்தசோகை போன்ற வியாதிகளை குணப்படுத்துமாம். இதன் பூக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும். இந்த மரத்தின் வேர் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டு சிவன் ஆலயங்கள் பலவற்றில் வன்னி மரமே ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதே வன்னி மரம் திருச்சி மாவட்டத்தின் குமாரவயலூர் ஆலயத்தில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் புனிதத்தைப் பற்றி ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன.

அக்னி பகவான் இந்த மரத்தில் வாசம் செய்ததான கதை உள்ளது. ஆகவே யாகங்களில் எழுப்பப்படும் ஹோமங்களில் இது விசேஷமானதாக கருதப்படுகிறது. தீ மூட்டி வளர்க்கப்படும் ஹோமங்களில் வன்னிமரப் பட்டை, ஆல மர மற்றும் அரச மரக் குச்சிகளை பண்டிதர்கள் பயன்படுத்துகிறார்கள் (Macdonell & Keith, Vedic Index, Delhi, 1982). வன்னி மரம் சனி பகவானுக்கும் புனிதமானது என்று செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் பலவும் உண்டு. வன்னி மரப் பட்டைகள், இலைகள், பழம் மற்றும் அதன் மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த மர இலைகளின் சாற்றை அருந்தினால் மூட்டு வலி, தசை வலி மற்றும் பித்த வியாதிகள் குணமாகும். கர்பிணிகள் இந்த மரத்தின் மலர்களை சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படாது. இந்த மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலையின் சாறுகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் பாம்புக் கடி விஷம் முறியும் (Shanmugam N. K. Mooligai Kalai Kalanjiyam, Madras, 1989).

மிகவும் வலிமையான இந்த மரத்தின் கட்டைகளைக் கொண்டு விவசாய நிலங்களில் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மரத்திலான கருவிகளை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு வன்னிமரம் குலதெய்வத்தைப் போன்ற பாதுகாப்பைத் தரும் மரம். ஆகவே வன்னியர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதிக் காரியங்களில்-தகனத்திற்கு- வன்னி மரக் கட்டைகளையே பயன்படுத்துவார்கள்.

தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலை ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குதான் அவர் பிரணவ மந்திரத்தை சிவனுக்கு போதித்தாராம். ஆகவே அந்த ஆலயத்தில் உள்ள ஸ்வாமிநாத ஸ்வாமியை தகப்பன் ஸ்வாமி என்றே அழைக்கின்றார்கள். சிவனை மாணவராகவும், முருகனை குருவாகவும் சித்தரித்து உள்ளார்கள்.

சிவனுக்கும், விஷ்ணு ஆலயங்களிலும் புனிதமாக கருதப்படும் நெல்லி மரமே ஸ்வாமி மலையிலும் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் பழத்தில் லஷ்மி தேவி குடி இருப்பதாகக் கருதப்படுவதினால் அது வளமான வாழ்வையும், செல்வத்தையும் கொடுக்கும் மரம் என்கிறார்கள். கனகதாரா ஸ்தோத்திரத்தை தோத்திரம் செய்து தனக்கு நெல்லிக் கனியைத் தந்த ஏழைப் பெண்ணை ஆதி சங்கரர் பெரும் செல்வந்தர் ஆக்கினார் என்பது கதை.

நெல்லிக்காயை அமலாக்கி பழம் என்று குறிப்பிட்டு அதைப் பற்றிய செய்திகள் ஜைமீனிய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், குமார புராணா மற்றும் சங்கரத புராணா போன்ற பல மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாஞ்சியில் உள்ள ஸ்தூபாவிலும் நெல்லி மரத்தின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதிக சத்து உள்ள பழம் மட்டும் அல்ல, நெல்லி உயிர் அணுக்களை அதிகரிக்கும் குணம் கொண்டது.

ஆண் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த ஆலய மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிற்றைக் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் அதை கயற்றி விடுவார்கள். இந்த மரத்துக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் பசைகளை தடவி, குங்குமம் இட்டு , மாலைகளைக் கட்டி கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தின்படி இந்த மரம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நடப்பட வேண்டும். புராணக் கதை ஒன்றில் இந்த பிரபஞ்சமே பிரளயத்தில் முழுகியபோது அதைக் கண்டு பிரும்மா பயந்து போய் வாயை பிளந்து கொண்டு நின்றபோது அவர் வாயில் இருந்து கீழே சிந்திய உமிழ் நீரே நெல்லி மரமாக மாறியதாக (Padma Purana, Uttarakanda, 47. 7-11) கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்த புராணமோ பிரும்மா செய்த ஒரு தவத்தின் முடிவில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து இந்த மரம் வந்தது என்று கூறி உள்ளது (II, 4. 12. 13).

இந்த புராணக் கதைகளைத் தாண்டி இந்த மரம் மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உண்மை. இதன் இலைகள், கனி, பூக்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை சில மருந்துகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரு நெல்லிக் கனியின் சத்து மூன்று ஆப்பிள் பழங்களின் சத்துக்களுக்கு இணையானது.

இதில் வைட்டமின் C அதிகம். இந்தக் கனியை தேனுடன் கலந்து சாப்பிட்ட ஆஸ்துமா, TB எனும் நுரையீரல் நோய் , மார்புச் சளி, கல்லீரல் கோளாறு, சக்கரை வியாதி போன்றவை குணமாகும். பல் ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்கும். இந்த மரக் கனியை உண்டால் களைப்பு ஏற்படாது, மன அழுத்தம் குறையும். கண் பார்வைகளுக்கு நல்லது.

ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த கனியின் பதப்பட்ட சாறு ஜீரணக் கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்தி மூக்கு அடைப்பையும் விலக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து உள்ளார்கள். இந்த மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி பல்வலி, நரம்பு தளர்ச்சி எனப்படும் நடுக்கம், தொண்டை புண், போன்றவற்றை குணப்படுத்த மருந்துகளை தயாரிக்கின்றார்கள்.

கருப்பையை பலப்படுத்தும் மருந்தையும் இந்த மரத்தின் சில கலவைகளில் செய்கிறார்கள். தேள்கடியை குணமாக்க நெல்லி மரப்பட்டை மற்றும் வெங்காய சாறு இரண்டும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல இடங்களிலும் முருகனின் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று அந்தந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களை வணங்குகிறார்கள். அங்குள்ள மரத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல மரங்களும் அங்குள்ள தெய்வங்களுக்கு இணையானதே என்று நினைக்கின்றார்கள்.

அந்த மரங்களை வழிபடுவதின் மூலம் தமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்று நம்புவதினால் அவர்கள் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது போலவே அங்குள்ள ஸ்தல விருட்ஷங்களுக்கும் மாலைகள் போட்டு, பூஜைகள் செய்து அவற்றையும் வழிபடுகிறார்கள். ஆலயங்களில் உள்ள கருவறைக்கு சென்று தெய்வத்தின் பக்கத்தில் பக்தர்கள் நிற்க முடியாது. ஆனால் அவர்களால் ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களின் அருகில் அவர்களால் செல்ல முடியும்.

ஆகவே அவர்களது ஸ்தல விருட்ஷங்களின் மீதான நம்பிக்கை அபாரமானது. அந்த ஸ்தல விருட்ஷங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த மரங்களில் இருந்து செய்யப்படும் மருந்துகள் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைத் தவிர இயற்கை சூழ்நிலையை பாதுகாக்கவும் மரங்கள் இன்றி அமையாதவை.

ஆகவே சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது மக்களின் கடமை. ஸ்தல விருட்ஷங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் அந்த மரங்களைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டு, அவற்றை புனிதமாக போற்றி வணங்குவது மட்டும் அல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாப்பதையும் தமது கடமையாக நினைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர்களின் சார்ந்துள்ள மதங்கள் அனுமதிக்கும் எதையுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகின்றது . ஸ்தல விருட்ஷங்கள் அதற்கு ஒரு உதாரணம். முருக வழிபாடும் ஒரு விதத்தில் இதற்கு உதவுகின்றது.

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

அக்னி நக்ஷத்திரம் …சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம் … ?

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை…

 

அக்னி நட்சத்திரம். இந்தப் பெயரைச் சொன்னாலே, வியர்த்து விறுவிறுத்து, பெருமூச்சு விடத் தொடங்கிவிடுவார்கள் பலர்.
சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்? நட்சத்திரம் என்று சொல்வது ஏன்?
சூரியனும் ஓர் நட்சத்திரம்தான். அதீத பிரகாசத்தினாலும் பூமிக்கு அருகிலேயே இருப்பதாலும் பகலில் தெரிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட காலகட்டத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் வருவதால் வெம்மை அதிகரிக்கிறது. அதோடு, அக்னிநட்சத்திர காலகட்டத்தில் சூரியனும், சந்திரனும் பூமிக்க அருகே வருவதாகச் சொல்கின்றனர்.
புராணம் என்ன சொல்கிறது?
முன்பொரு காலத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி சுவேதகி எனும் யாகம் செய்தனர் முனிவர்கள். அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டான். மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலமாகும் என்றனர் எல்லோரும். அதன்படி அவன் அதனை அழிக்க முற்பட்டபோது, அங்கிருந்த உயிர்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது. எனவே அக்னி திருமாலின் உதவியை நாடினான். மகாவிஷ்ணு, அர்ஜுனனை அனுப்பினார். அவன் அம்புகளால் கூரை அமைத்து மழையைத் தடுத்து, அக்னிபகவான் காட்டினை உண்ண உதவினான். இருபத்தொரு நாட்கள் இந்த காண்டவ வன தகனம் நடந்தது.
சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும் சேர்ந்து உலகையே தகித்தது அந்த நாட்களில், இது அக்னி நட்சத்திர காலகட்டமாகச் சொல்லப்படுகிறது.
சூரியனின் மனைவி உஷாதேவி, தன் கணவனின் உடல் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தன் நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து அங்கே இருக்கச் செய்துவிட்டு தான் மறைந்து வாழ்ந்தாள். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு காலகட்டத்தில் உண்மை உணர்ந்தான். உஷாவை மீண்டும் அழைத்தான். அவள் மறுக்க, சூரியனின் வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார், அவள் தந்தையான விஸ்வகர்மா, அதன்படி பகலவனின் தேஜஸைத் தேய்த்து மழுக்கி அவனது வெப்பத்தைத் தணித்தார்.
உஷா மகிழ்வோடு கணவன் வீடு வந்தாள். தான் இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான், சூரியன். சம்மதித்தார் விஸ்வகர்மா. சூரியன் தன் முழுமையான தேஜஸுடன் இருக்கும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் என்கிறது மற்றொரு புராணம்.
ஈசனின் அனல் விழிக் கனலில் இருந்து அவதரித்தவன் ஆறுமுகன். தீப்பிழம்பு சரவணப் பொய்கையில் விந்து சிசுவான போது அவனை எடுத்து வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். குழந்தையின் உடல் தகிப்பைத் தணிக்க, தங்கள் உடலோடு சேர்த்து அணைத்க் கொண்டனராம் அப்பெண்கள். அவர்களிடம் இருந்த குளிர்ச்சி குழந்தைக்கு போக, பாலகனின் உடல் வெப்பம் அந்தப் பாவையர்க்குச் சென்றதாம். தன் மீது அன்பு கொண்ட அவர்களது உடல் வெப்பத்தை, பிரகாசமான ஒளியாக மாற்றி அவர்களை நட்சத்திரங்களாக வானத்தில் சுடர்விடச் செய்தான் சுப்ரமண்யன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தினை வெப்பமான நட்சத்திரம் என்பார்கள்.
அக்னி நட்சத்திரத் தொடக்கநாள் முதல் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். சூரியனுக்கு உரிய கோலத்தை பூஜை அறையில் அரிசி மாவினால் போடுங்கள். சூரியனை நோக்கி மனதார வேண்டுங்கள். முதல் நாளிலும் கடைசி நாளிலும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமான் துதிகளைச் சொல்லுங்கள் வெம்மை தீர்க்கும் அம்மன்களான, மாரிய்மன் மீனாட்சியம்மன் ஆகியோரை வழிபடுவதும் நல்லது. பரணிக்குரிய துர்க்கையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும் கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் கும்பிடுவதும் சிறந்தது. சிவபெருமான், நரசிம்மர், மகாவிஷ்ணு, சீதளா தேவி போன்ற தெய்வங்களை வணங்குவது மிகவும் நன்மை தரும்.
நோய்கள் எளிதாக பரவும் காலகட்டம் இது. எனவே மஞ்சள் கரைத்த நீரை வேப்பிலையால் தொட்டு வீடு முழுவதும் தெளிக்கலாம். இவை அனைத்தையும் விட, வெயிலால் வாடுவோர் குளிரும் வண்ணம் பானகம், நீர்மோர், தண்ணீர், தயிர்சாதம், விசிறி, காலணிகள் என உங்களால் இயன்றதை தானமாக அளியுங்கள். கால்நடைகளுக்கு நீரும், கீரையும் கொடுங்கள்.
உங்கள் மனமும் உடலும் குளிர இறைவன் அருள் மழை பொழிவான்.

– ஜெயலட்சுமி ராமசுவாமி   in KUMUDAM BHAKTHI  …TAMIL

Natarajan

” அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …”

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.
ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

 

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bakthi Tamil

natarajan

படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “

ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி உருவசிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டார.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு ‘எனக்கு புடவை கொடு… புடவை கொடு!’ என்று கூவினாள், ரகளை செய்தாள்.

அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது

‘பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்.

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒரு புடவையை கொண்டு வர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.

‘என்னடா… புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா’ என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மகா பெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந் சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

source:::: http://www.periva.proboards.com

natarajan

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan

 

 

” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ”

 

 



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.  

source:::: http://www.periva.proboards.com

natarajan

]பிள்ளையார் , முருகன் இருவருமே தமிழ் தெய்வங்கள்தான் …!!!

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறாரர். அவரைப் “பிள்ளையார்’ என்றே அன்போது கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறும் “பிள்ளையார்’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை “நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனÙமுஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு – ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே – அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் – அந்த அண்ணா – தம்பிகளைப் பிரிக்கவேபடாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் – பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன் கொண்டு வரப் போகிறேன்! (அது) “பாஸ்’ ஆகணுமே! அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

source:::: KALKI…Tamil Weekly
natarajan