
பொங்கல் என்றாலே உழவுக்கு வந்தனை செய்யும் விதமாக ஆதவனை வணங்குவது, தித்திக்கும் கரும்பைச் சுவைத்து மகிழ்வது இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு சிறப்பான சம்பிரதாயம் ஒன்று இருந்து வருகிறது. அதுதான் பொங்கல் அன்று பிறக்கும் தனிச் சிறப்பு மிக்க பிள்ளையார்.
தைப் பொங்கலிடத் தயாராகும் போது முதலில் வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி விளக்கு வைத்து, அதன் முன்பு ஒரு பெரிய வாழையிலையை விரித்து, அதில் அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகளை வைத்து, ஒரு டம்பளரில் பொங்கலிடப் போகும் அரிசியையும் வைத்து வணங்குவார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விளக்குடன் சேர்த்து மற்ற கடவுளரைக் காட்டிலும், முதன்மைக் கடவுளான பிள்ளையாரையும் அங்கு வைத்திருப்பார்கள். அதுவும் அந்த பிள்ளையார், ஒவ்வொரு இல்லத்தினரும் அவர்கள் கைகளினால், உருவாக்கிய சிறப்புப் பிள்ளையார்கள்.
இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உலகின் முழுமுதற் கடவுளான கணபதிக்கும் சேர்த்து வந்தனை செய்வதாக அர்த்தம். சூரிய பகவான் முன்பு பொங்கலிட்டு, முதலில் பிள்ளையாருக்கும் சேர்த்து படைக்கப்படுகிறது என்பது பொருள்.
பொதுவாக மூன்று வகைப் பிள்ளையார்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒன்று, சாணத்தால் ஆன பிள்ளையார். இரண்டாவது, மஞ்சளால் ஆன பிள்ளையார். மூன்றாவது, சந்தனத்தால் ஆன பிள்ளையார். இந்த மூன்று திவ்யத்துவம் பொருந்திய பொருட்களைப் பயன்படுத்தியே, பிள்ளையார் உருவாக்கப்படுகிறார்.
சாணப் பிள்ளையார்
சாணம் ஒரு கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே. தூய்மைப்படுத்துவதே இதன் சிறப்பு. பொங்கல் அன்று, அனைவரும் மனதில் அசுத்த எண்ணங்களைத் துறந்து, தூய உள்ளத்தோடு ஒன்று சேர்த்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக சாணத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.
மஞ்சள் பிள்ளையார்
மஞ்சள் இல்லாத ஒரு மங்கள நிகழ்வு என்பதே கிடையாது. பல்வேறு மருத்துவ குணங்கள் முதல் பலவிதமான மங்காத புகழ்களைத் தன்னுள்ளே கொண்டது மஞ்சள். இந்த மங்கள நாளில், அனைவரும் சகல ஆரோக்கியத்தையும் பெற்று, புகழோடு வாழ்வதற்காகவே, மஞ்சளால் ஆன பிள்ளையார் செய்து வணங்கப்படுகிறது.
சந்தனப் பிள்ளையார்
எந்த நிலையிலும் மாறாத தன்மையுடன், நல்ல மணம் பரப்பும் குணமுடையது சந்தனம். அதுபோல, மனிதன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தன்னிலை மாறாது, நன்னெறிகளை செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே சந்தனத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு மூன்று வகைப் பிள்ளையார்களை உருவாக்கி, அதற்குக் குங்குமப் பொட்டு வைத்து, பிள்ளையாருக்கே உரித்தான அருகம்புல்லை அணிவித்து வணங்க வேண்டும், இதன் மூலம் சகல செல்வங்களும் வந்துசேரும் என்பதே ஐதீகம். இயற்கையை போற்றும் இந்த நன்னாளில், சிறப்புமிக்க இந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு கடவுளைப் படைத்து வணங்கி, அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்கள் வைத்த இந்த சம்பிரதாயத்தை நாமும் போற்றிப் பின்பற்றுவோம்.
source…..கா. ராஜசேகர் in http://www.tamil.thehindu.com
Natarajan








