படித்து ரசித்தது …” எத்தனை அழகான முத்துக்கள் … “

எத்தனை அழகான முத்துக்கள்! ஒவ்வொரு முத்தையும், பெட்டகத்தில் பதித்து, பட்டை தீட்டி, ஒன்றோடு ஒன்று உரசி உடையாமல், இடையிடையே மென்மையான தடுப்புக் கொடுத்து, மேலே ஒரு தடித்த தோலால் பேக்கிங் செய்து, இத்தனை வேலைப்பாடுடன் கூடிய முத்துப் பார்சலை, குரூரமாக இயந்திரத்தில் இட்டு அரைத்து, கரைத்து, வடிகட்டிக் குடிக்காவிட்டால் என்ன… நான் இனிமேல் குடிக்கப் போவதில்லை, மாதுளம் பழம் ஜூசை.

— பாக்கியம் ராமசாமி. in DINAMALAR … Varamalar Sunday

Natarajan

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

படித்ததில் ரசித்தது …” சும்மா ..தமிழிலேயே பேசுங்க …”

விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த பேச்சாளர், ‘தமிழ்ப் பண்ணை’ என்ற பதிப்பக உரிமையாளர், காமராஜரின் அருந்தொண்டர், சிவாஜி கணேசன் ரசிகர்மன்ற மாநிலத் தலைவர் என்றெல்லாம் இருந்து, பிரபலம் பெற்றவர் மறைந்த சின்ன அண்ணாமலை. அவர் எழுதுகிறார்:
வங்காள கவர்னராக ராஜாஜி, 1947ல் பதவி ஏற்ற போது, நாங்கள் மே.வங்க தலைநகரான கல்கத்தாவுக்கு சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு, ஒரு வரவேற்பு. வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்த சபையில், என்னைப் பேசும்படி தலைமை வகித்த பி.சி.கோஷ் (அப்போதைய வங்காள முதலமைச்சர்) அழைத்தார். நான் திடுக்கிட்டு,
ராஜாஜியை பரிதாபமாகப் பார்த் தேன்.
‘சும்மா தமிழிலேயே பேசுங்க; டி.கே.சி., ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்…’ என்று, கூறினார் ராஜாஜி.
‘சரி’ என்று, மைக் அருகில் வந்தேன். திடீரென்று ராஜாஜியே எழுந்து, ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் பலத்த கரகோஷம்; நான் ராஜாஜியின் அன்பினால் திக்குமுக்காடி, பேச ஆரம்பித்தேன்…
‘ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சி.பி. சக்கரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மத பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து, உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.
‘ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம், இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. விபின் சந்திரபால் சென்னைக்கு வந்து, ஆறு சொற்பொழிவுகள் ஆற்றியதன் மூலம், தமிழகத்தில் தேசபக்தியை உண்டாக்கினார்; சித்தரஞ்சன் தாஸ் நாடு முழுவதும் விடுதலைக் கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி முதலியவர் களால், தமிழகத்துக்கு எவ்வளவோ பயன் கிட்டியிருக்கிறது. இவர்கள் எல்லாம், வங்காளத்தில் பிறந்தவர்கள். அப்பேர் பட்ட வங்கத்திற்கு, நாம் என்ன கைம்மாறு செய்யலாம்; செய்ய முடியும் என்று, ஏங்கிக் கொண்டிருந்தோம்.
‘ஆனால், அதற்கெல்லாம் வட்டியும், முதலுமாக, எங்கள் ராஜாஜியை உங்களுக்கு கவர்னராக கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய, இந்த வங்காளம், 100 ஆண்டு காலம் தவம் செய்திருக்க வேண்டும்…’ என்று நான் கூறிய போது, ‘ராஜாஜிக்கு ஜே!’ என்ற கோஷம், விண்ணை பிளந்தது.
நானும் மரியாதையாக, அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன்; விழா முடிந்தது. திரும்பும்போது, ராஜாஜியிடம், ‘என்னை எதற்காகப் பேசும்படி பணித்தீர்கள்.
டி.கே.சி., பேசினால் போதாதா?’ என்றேன். அதற்கு ராஜாஜி, ‘ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. எனவே, நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான், உங்களைப் பேசச் சொன்னது…’ என்று சொல்லி, சிறிது நேரம் மவுனமாக இருந்து பின், ‘நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?’ என்ற கேள்வியையும் போட்டு, பதிலையும் சொன்னார்.
‘உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது, யாரோ என்று வங்காளிகள் அசிரத்தையாக, இருந்துவிட்டால், உங்கள் தமிழை கவனித்துக் கேட்க முடியாது. நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்துவிட்டால், எல்லாரும் கவனமாகத் கேட்பர். அதற்காகத்தான்…’ என்று கூறினார். ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.

—’சொன்னால் நம்ப மாட்டீர்கள்…’ நூலிலிருந்து.

Source:::: DINAMALAR …Tamil Daily… In VAARA MALAR
Natarajan

படித்து ரசித்தது …புது கவிதை சில …

இயற்கையின்பங்கு

நீ போட்டு முடித்துவிட்டுபோன
கோலத்தை
மரத்திலிருந்த பூக்களை உதிர்த்து
தன்பங்குக்கு அழகாக்குகிறது
இயற்கை
-சிவபாரதி, திருவாரூர்.

தூரமில்லை

தகவல் தொடர்பில் சுருங்கிவிட்ட உலகில்
அருகருகே உள்ளவர்களோடு
செல்போசியில் பேசுகையில்
தூரமாய் போய்விடுகின்றன.
பக்கத்து பக்கத்து வீடுகள்
-விகடபாரதி, வடபாதிமங்கலம்

முரண்

தீவிர பாதுகாப்பு,
குண்டு வெடித்தபின்
சமாதான கூட்டம் முடிந்தது அடிதடியுடன்
கொட்டும் மழையில்
மந்திரி திறந்து வைத்தார்
தண்ணீர்ப் பந்தல்
-ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி

தேடல்

தினம், தினம் கடலைத்தேடி
நீந்தி அலைகிறது
கண்ணாடி தொட்டியில் மீன்.
-சோலை அய்யப்பன், சோழசிராமணி.

வெண்ணிலா

மின்கட்டணம்
கட்ட வேண்டாத
உலக பொதுவிளக்கு
இதற்கு மாதம் ஒருநாள்
விடுப்பு.

-ந.வெற்றிவேல், சாாத்தான்குளம்  

Source::::Kalki … Tamil weekly

Natarajan

Meet Mr. Masthan ….A Living Proof of Communal Harmony …

 

A native of Tirunelveli, Masthan set up his shop near the Yoga Narasimhar temple on Velachery Main Road in 1980. Photo: M. Srinath
The Hindu    A native of Tirunelveli, Masthan set up his shop near the Yoga Narasimhar temple on Velachery Main Road in 1980. Photo: M. Srinath

S. Masthan, who has set up shops across the city, is well-versed in the Hindu calendar and festivities

Sixty-year-old S. Masthan is living proof of communal harmony. He also offers the hope that with hard work and perseverance, one can bust the barriers to success in business.

Mr. Masthan is the proprietor of Raja Seeval Store, the most-sought after shop in Velachery for Hindu religious items, for more than three decades.

Masthan, a native of Tirunelveli, recounts the story behind setting up his shop near the Yoga Narasimhar temple on Velachery Main Road, in 1980.

“The locality had a large Brahmin population in those days and they had to travel a long way to Mambalam or Triplicane, to purchase the materials needed for poojas and other rituals, at a time when transportation facilities were poor, if not non existent,” says Mr. Masthan.

That’s when he decided to set up a shop that supplies pooja materials, and it remains there to this date.

Well-versed in the Hindu calendar and festivities, Masthan, who never misses ‘namaaz’ on Fridays, need only be informed of the nature of festivities or religious rites. From the well-stocked shelves of his narrow shop, he gets all the materials ready for his clients.

He notes with pride that most of the Hindu priests in the locality send devotees to his shop to purchase required items.

A number of shops selling religious articles have come up in the area since, but devotees continue to patronise Mr. Masthan’s shop.

Today, he sells the Tamil almanac, the ‘pambu panchangam’, and has also set up branches in various places in the city — Perungalathur, Medavakkam, Urapakkam, Nanganallur, and Keelkattalai.

He has also convinced his five children, including three daughters, to take up the trade.

Mr. Masthan, who cycled several kilometres in his younger days to source the materials demanded by his clients, has a flourishing trade today, but retains the simplicity with which he started out.

He never forgets to greet a regular customer, and treats every new customer equally well.

source::::Srikanth .R. in THE HINDU

Natarajan

” செந்தில் மேவிய சேவகன் …”

செந்தில் மேவிய சேவகன்

 

சேவகன் என்பதற்கு வீரன், பராக்ரமசாலி, தொண்டு புரிபவன் போன்ற பொருள்கள் உண்டு. யாருமே அண்ட முடியாத சூரபத்மனிடம் வீரபாகுவைத் தூதனுப்பிய வீரனாகிய செந்தில் ஆண்டவனை அருணகிரியார், ‘செந்தில் மேவிய சேவகன்’ என்று அழைக்கிறார். திருவாசகம், சிவபெருமானை, ‘குதிரைச் சேவகன்’ என்று அழைக்கிறது. சிலப்பதிகாரம் ராமபிரானை, ‘தொல்லிலங்கைக் கட்டழித்த சேவகன்’ என்று குறிப்பிடுகிறது. அநுபூதியில் ‘மயிலேறிய சேவகனே’, ‘திதிபுத்திரர் வீறடு சேவகனே’ என்றும் திருப்புகழில் ‘நீபச் சேவகனே’, ‘மயூரச் சேவகனே’, ‘திருச்செந்தூர் வரு சேவகனே’ என்றும் அருணகிரியார் பாடுகிறார். ‘சேவகன் வகுப்பு’ என்ற பெயரிலேயே தனி வகுப்பையும் பாடியுள்ளார்.

இந்த வீரத்தன்மை நம் முருகனுக்கு ‘பரம்பரைச் சொத்து’ என்கிறார் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளை அவர்கள். அருணகிரியாரின் பாடல்களிலேயே இதற்கான விளக்கம் கிடைக்கிறது. அவன் தந்தை யார்?
“உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர் கன கிரியை வளைத்தோர் புதல்வா!” [சேவகன் வகுப்பு]
அவனது தாயார் பெருமை என்ன?
“கூற்று மரித்திடவே உதை பார்வதி”
“கூற்றினை மோதிய பத சத்தினி காலாந்தகி” [திருப்புகழ்]
[அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில், சிவனது இடப்புறம் பார்வதி இருப்பதால் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவர் எங்கள் பார்வதி என்பார்கள் சாக்தர்கள்.]
முருகனது மாமன் எப்படிப்பட்டவர்?
“ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா!” [சேவகன் வகுப்பு]
சேவகன் வகுப்பு பாடலில்
“வளைகடல் கதற, நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச் சேவகனே!”
என்று கூறுகிறார். ஏன் முருகனை ‘முழுச் சேவகன்’ என்கிறார்?
வளை கடல் – கன்ம மலம்
நிசிசரர் – ஆணவ மலம்
மலை (கிரௌஞ்சம்)- மாயா மலம்
இம் மும்மலங்களையும் ஒருசேர அழித்த செந்திலாண்டவனை ‘முழுச் சேவகன்’ என்றழைப்பதில் மிகையேதுமில்லையே!

“கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய்! ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!
-கந்தர் அலங்காரம்.
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்குமே! செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.”
-தனிப்பாடல்.

சேவகன் வகுப்பு
இருபிறை எயிறு- இரண்டு பிறைத் திங்கள் போன்ற பற்களினின்றும்
நிலவு எழ: மிக்க ஒளி உண்டாக
உடலம்: உடம்பானது
இருள்படு சொருபம் உடை கோ- இருண்ட நிறத் தோற்றம் உடைய யமன்
[சிவ லோகத்தின் சட்ட புத்தகமான, விதிவிலக்குகளைக் கற்பிக்கும் வேதநெறியை மீறி நடந்தவர்களைத் தண்டிக்கும் உத்தமமான பெரிய நீதிபதியாதலின் யமன் உடம்பை உடம்பென்னாது சொருபம் என்கிறார்.]
விடவே- கட்டளையிட்டு அனுப்ப
இறுகிய கயிறுபட- முறுக்கேறிய பாசத்தில் [சுவாசத்தில் கட்டியிழுக்கும் சூக்ஷ்ம கயிறு] உயிர்கள் அகப்பட
வினை முடுகி- உள்ள தம் தொழிலில் விரைந்து
எமபடர்- வந்த யம தூதர்கள்
பிடரி பிடித்தே- பிடரியில் கை வைத்து பிடித்தபடியே
கொடு போய்- கொண்டு சென்று
அருமறை முறையின் முறை முறை கருதி- அருமையான வேதம் உரைத்த விதியின்படி, முறையே தவறு படாமல் உன்னைச் சிந்தித்து
அதர் இடை- யமனிடம் கொண்டு போய் நிறுத்துவதற்குமுன் இடைவழியிலேயே
ஒறுத்தால் வகையால்- பல வகையாகத் தண்டித்தால்
அறிவொடு மதுர மொழியது குழறி- அறிவும் இனிய சொல்லும் தடுமாறி
அலமறு பொழுதில் அழைத்தால் வருவாய்- கலங்குகின்ற அக்காலத்தில் முருகா என்று அழைப்பேனாதலால் அவ்வமயம் உடனே வந்து அருள் புரிவாயாக.
ஒருபது சிரமும் இருபது கரமும் விழ- (இராவணனது) பத்துத் தலைகளும் இருபது கரங்களும் அற்று விழும்படி
ஒருபகழி தொடுத்தோன் மருகா- ஒப்பற்ற பிரம்மாஸ்திரத்தை செலுத்திய (ராம பிரானாக அவதரித்த) திருமாலின் மருகனே!
உரமது பெரிய திரிபுரம் எரிய- வன்மை மிக்க முப்புரங்களும் எரிந்து சாம்பலாக
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா- உயர்ந்த பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபிரானுடைய புதல்வனே!
மருவளர் அடவி வனிதையர் பரவ- இயற்கை மணம் பெருகும் வனத்திலுள்ள அழகான வேட்டுவ மகளிர் வழிபட (அவர்தம் வழிபாட்டை ஏற்று)
மரகத இதணில் இருப்பாள் கணவா- வள்ளியார்க்கு வேடர்கள் அமைத்த பசுமையான பரண் மேல் தினை காத்த கண்ணும் கருத்துமாய் இடத்தைவிட்டு அகலாது இருக்கும் வள்ளியின் நாயகனே!
(குறவர் இளவஞ்சி மருவும் அழகா)
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே!- உலகை வளைத்திருக்கின்ற கடலானது கதறி முறையிடவும், அசுரர் மடியவும், மலையுடன் போரிட்ட முழு வீரனே!

சித்ரா மூர்த்தி
சென்னை.

source::::Murugan Bhakthi

Natarajan

 

 

” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “…

நினைவலைகள் …

இன்று 31 மே…என் தந்தை மறைந்த நாள் …7 வருடம் முன்பு. அதிகம் பேச மாட்டார் …ஆனால் முகத்தில் தெரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மனதில் பட்டதை பட் என்று சொல்லும் பழக்கம் … கடமை தவறா அரசு அதிகாரி. நேர்மை வழி வளர்ந்து அந்த வழியில் தன் பிள்ளைகளையும் நடக்க செய்தவர் …

புது வருட வாழ்த்து, திருமண வாழ்த்து முதல் இரங்கல் செய்தி வரை , எல்லோருக்கும் ஒரு அஞ்சல் அட்டை செல்லும் அவரிடம் இருந்து !!!

அஞ்சல் அட்டை அவரின் தனி அடையாளம் ஆனதால் , அவருக்கு தேவைப்படவில்லை ஒரு மின்அஞ்சல் முகவரி அடையாளம் !!!

நாளை 1 ஜூன் என் பேரனின் முதல் பிறந்த நாள் … நான் ஒரு கவிதை வடிவில் என் அப்பாவைக் கேட்கிறேன் …அவ்ர்

நல் வாழ்த்துக்களை என் பேரனுக்கு. இது வெறும் கவிதை அல்ல … என் நினைவலைகளில் இருந்து பிறந்த உணர்ச்சி

வரிகள்….

நடராஜன்

மே 31 2014

ஆயிரம் பிறை கண்டாய் … வந்த வேலை முடிந்து விட்டது என நீ நினைத்தாயோ ?

சொந்தமும் பந்தமும் மறந்து நீ மறைந்து விட்டாய் பிறை ஆயிரம் கண்ட மறு வருடம் !

பறந்து விட்டது வருடம் 7 இன்றுடன் நீ விண்ணில் பறந்து …

மறக்க முடியுமா அப்பா உன்னை ? என் அப்பா உன்னை ஒரு நல்ல

தாத்தாவாகவும் பார்த்த உன் பிள்ளை நான்! என்னை தாத்தாவாக பார்க்க நீ இல்லையே இன்று இங்கு ..

இயற்க்கையின் விதி அது … அது போகட்டும் … எனக்கு இந்த மண்ணில்

முகவரி தந்த தந்தை உன்னிடம் இருக்கிறதே என் முகவரி …இது வரை உங்க

ஒரு வரி அஞ்சல் அட்டையும் வரவில்லையே எனக்கு … ஏன் அப்பா ?

அஞ்சல் அட்டைதானே உங்க அடையாளம் …

வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு அப்பா…நீங்க

தர வேண்டும் நீங்க உங்க நல் வாழ்த்துக்க்கள் ஒரு ஆயிரம் …என் பேரனுக்கு அதுவே சிறந்த

பரிசாகும் , அவன் முதல் பிறந்த நாள் அன்று { 1 ஜூன் 2014 }

உங்கள் அன்பு பிள்ளை

நடராஜன்

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

வாலியின் கவிதைகளில் ஒன்று…

 

vaali

சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே –
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது –
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் – இந்த
நிட்காமிய ஞானம் – என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் –
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!’——கவிஞர் வாலி

 

source:::::DINAMANI .COM

Natarajan

படித்து ரசித்தது … “ஒரு போலி அசலான கதை” !!!

 

 

பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.

மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.

ஒரு போலி உருவாகிறது

மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.

அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.

அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

source:::: THE HINDU…TAMIL
Natarajan