வாரம் ஒரு கவிதை…” அழுத கண்ணீர் ” …

 

அழுத கண்ணீர் …
………………
.
தங்கத் தலைவர் மூவர் வங்கக் கடலோரம் துயில்  கொண்டாரே !
அலை கடலோரம் அமைதியாய் உறங்கும் தங்கள்
தலைவருக்கு விடை கொடுக்க திரண்ட அன்பு மக்கள்
வடித்த கண்ணீர்,  கடலையும் கண்ணீர் கடல் ஆக்கியதோ ?
நெஞ்சை அடக்கும் துக்கத்துடன் தொண்டர் பலர்  வடித்த
 கண்ணீர்,  வர வைத்ததே கண்ணீரை பலர் கண்ணிலும் !
அழுத கண்ணீர் கண்டு  தானும் அழுத மக்களில் நானும் ஒருவன் !
மாண்டவர்  மீண்டு  வருவதில்லையே என்று
மனம் பொங்கி தினம் தினம் கடல் வடிக்கும்
கண்ணீர்தானோ  தரை தொட்டு செல்லும் கடல் அலைகள் ?

வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “

 

பணத்தின்  மறுபக்கம் …
…………………….
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்!
தன்  மதிப்பு இழந்த பணம் வெற்று  காகிதமானதே ஒரே நாளில் !
நன் மதிப்புடன்  வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்
இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும்  சோகம்
பார்த்து  மனம் கலங்கியதுண்டு  நான் ! ஒரே ஒரு
வரியால்  தன் மதிப்பை இழக்கும்  வரை பணத்துக்கும்
தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …!
பணத்தின் மறுபக்கம் என்ன என்று  பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்
அவன் வாழ்வின்  மதிப்பு  அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
Natarajan
7th Dec 2016

வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

 

புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com  dated 28th Nov 2016

படித்து ரசித்தது …” குட்டி பறவைக்கு வந்த தைரியம்!”

 

கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.

தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.

குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.

அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.

ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?

வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.

ம.சுசித்ரா in http://www.tamil.thehindu.com

Natarajan

படித்து நெகிழ்ந்தது …” பாசத்தின் வாசனை “

 

நவம்பர் 8, 2016

இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!

நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.

நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்… ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.

பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.

மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்…” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.

என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல… இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு…” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.

பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ…” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.

ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே… இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.

அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!

(

ஜி.ஆர். சுரேந்தர்நாத்

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

http://www.tamil.thehindu.com

Natarajan

Image of the Day… Amazing Photo of Super Moon on 14th Nov 2016 !!!

 

The lights around the moon are street lights and there is a tree in front of the moon like veins on moon….!!!

Photo Credit  by Senthil Natarajan , Brisbane , Australia

Photograph taken by him on the night of Super Moon Day …14 Nov 2016

Source…Facebook post of Senthil Natarajan

Natarajan

 

15094496_10154788090699630_1663026486696801254_n

வாரம் ஒரு கவிதை …”வழி தவறிய பயணங்கள் ” !!!

 

 “வழி தவறிய பயணங்கள்”
………………………………………………………..
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால்  அது
செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை
ஒரு செல்லாத காசு என்று …! பகிர்ந்து உண்ணும் பண்பும்  நலிந்தோரிடம்
அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம்
கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும்
இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும்
தரை தட்ட வைக்கும் அவன்  வாழ்க்கை பயணக் கப்பலை !
வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு …ஒரு
வழி தவறினாலும்  நெறி பிறழாமல் ஒருவன்  தொடரும்
பயணம் சேர்க்கும்  செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
Natarajan
http://www.dinamani.com  dated 14th Nov 2016

படித்து ரசித்தது ….நீங்களும் படித்து ரசிக்க …!

 

டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது….!!!

s2
இந்த ஆண்டு (2016) டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே பயன்பாட்டுக்கு வந்த நூறாவது ஆண்டாகும். இந்தியாவிற்குக் கடல் வழி கண்டறிந்தது, அமெரிக்காவைக் கண்டறிந்தது, சூயல் கால்வாய் வெட்டப்பட்டது போலவே டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே உருவாக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வாகும்!

இந்த ரயில்வே லைன் “ரஷ்யாவின் இரும்பு பெல்ட்’ (IRON BELT OF RUSSIA) என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவை ஆண்ட ஜார்ஜ் மன்னர் இரண்டாம் நிகோலஸ் (TSAR NICHOLAS-II) ரஷ்யாவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்குக் கோடி வரை ஜார் மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரத்யேகமாகப் பயணிக்க “ஜார் டிரெயின் சேவை’ ஒன்றைத் துவக்க விரும்பினார். ஏனெனில் பெரும்பாலான ரஷ்யர்கள் தங்கள் நாட்டின் கிழக்கு எல்லைக்கு வந்ததே இல்லை! கிழக்கில் வசிப்போர் மேற்கு எல்லைக்கு வந்ததே இல்லை!
காரணம்…,அதன் நீண்ட தொலைவுதான்!
அதையும்விட மிக முக்கிய காரணம் ஒன்று இருந்தது! ஜப்பான், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியாவை ஒட்டி இருந்த ரஷ்யப் பகுதியை ஆக்கிரமிக்க விரும்பின! எனவே ரஷ்யா ரயில்வே லைன் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! எனவே ரஷ்யப் புவியியல் கூறுகள் அனைத்தும் சர்வே செய்யப்பட்டன.

பிறகு 9-7-1891 ஆம் ஆண்டு ரயில்வே லைன் அமைக்கும் பணி துவங்கப்பட்டது! மாஸ்கோவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து மேற்கிலிருந்து கிழக்கில் ஒரு கட்டுமானமும், “விளாடிவாஸ்டாக்’கில் இருந்து “கிழக்கிலிருந்து மேற்கு’ நோக்கி ஒரு கட்டுமானமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.

ஜார் அரசர் இரண்டாம் நிகோலஸ் அமெரிக்க, மற்றும் இத்தாலி பொறியியல் வல்லுனர்களின் உதவியைக் கோரினார். எண்ணிலடங்கா சிறைக்கைதிகள், மற்றும் உள்ளூர் மக்கள் இம்மாபெரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான “பைகால்’ ஏரியைத் தாண்டி இருப்புப் பாதை அமைப்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது! ஏனெனில் இது 636 கிலோ மீட்டர் நீளமும் கி.மீ 744மீ ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைத்தல் என்பது மிகவும் கடினமாகும். எனவே அதிகாரிகள் மற்றொரு யோசனையை செயல்படுத்தினர். ஃபெர்ரீஸ் (FERRIES) எனப்படும் பனியில் செல்லும் படகில் ரயில் பெட்டிகளுடன் மக்களையும் ஏற்றிக் கொண்டு ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதுதான் அது! கடினமான பனிக்கட்டிகளைக் கூட உடைத்துச் செல்லும் இத்தகைய படகுகள் கடும்பனிக்காலத்தில் (PERMA FROST) காலத்தில் உறைந்து போயின.

எனவே வடகிழக்குச் சைனாவின் மன்சூரியாவில் இருந்து விளாடிவாஸ்டாக்கை அடையும் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்தனர். மன்சூரியாவில் உள்ள “ஹார்பின்’ என்ற நகரத்தின் வழியாக இந்த ரயில் சேவை தொடரப்பட்டது. இந்த ரயில் சேவையின் கட்டுமானம் 1901ஆம் ஆண்டு நிறைவுற்றது.

1904ஆம் ஆண்டு ரஷ்ய ஜப்பானியப் போர் துவங்கும் வரை அனைத்தும் சுமுகமாய் இருந்தன. போர் தொடங்கிய அடுத்த நிமிடமே மன்சூரிய இருப்புப் பாதையின் தடம் ஜப்பானியர்களால் சேதப்படுத்தப்படும் என்பதை ரஷ்ய அரசு தெரிந்து கொண்டது.

எனவே பைகால் ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உலகக் கட்டுமான வரலாற்றிலேயே சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக அதிக மக்களை பலியாகக் கொண்டது இந்தப் பணியாகத்தான் இருக்கும்! இந்தக் கட்டுமானத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பதும் எத்தனை பேர் பலியாயினர் என்பதும் பதிவு செய்யப்படவில்லை! காரணம்…,அத்தனை பேரும் சிறைக்கைதிகள்…,மற்றும் நாடு கடத்தப்பட்டோர் என்பதுதான்!

அட்டைப் பூச்சிகள், கொசுக்கள், வனவிலங்குகள், கடும் குளிர் ஆகிய அனைத்தையும் எதிர் கொண்டு அவர்கள் 33 குகை வழிகளையும் (TUNNELS) 200 பாலங்களையும் அமைத்தனர். இந்த வழித்தடப் பணிகள் 1905ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. இன்றும் கூட மனிதக் கட்டுமானத்தில் பைகால் ஏரியைச் சுற்றுயுள்ள இந்த வழித்தடம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும்! (MOST COMPLICATED DUE TO INHOSPITABLE TERRAIN) ரஷ்யப் பொறியியல் வல்லுனர்களுக்கு அடுத்த சவால் “ஆமுர்’ நதி (AMUR RIVER) வடிவில் வந்தது. அந்நதியின் மேல் பாலம் அமைக்கும் பணி 1908ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உயரம் 79அடிகள் ஆகும்! மொத்தம் நீளம் 4709 அடிகள். எத்தனையோ இடர்பாடுகளையும், உயிர் பலிகளையும் தாண்டி 1916ஆம் ஆண்டு இப்பணி முழுமையடைந்தது!

1916ஆம் ஆண்டு ஆக்டோபர் 5ஆம் நாள் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் இந்த வழித்தடத்தை முறைப்படி திறந்து வைத்தார். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?

ரஷ்யா கம்யூனிஸ்டுகள் வசம் வந்த பிறகு இதே வழித்தடத்திலேயே, இதே சைபீரியன் ரயிலிலேயே அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டார்!

டிரான்ஸ் சைபீரியன் ரயில் இறுதியாக நிற்கும் இடம் “விளாடிவாஸ்டாக்’ ஆகும்! ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகமும் இதுவே!
இந்த ரயில்கள் 485 பாலங்களையும், 33 குகைப்பாதைகளையும் கடந்து செல்கின்றன! ஆசியாவையும் ஐரோப்பாவையும் தரை வழியாக இணைக்கும் ஒரே கருவி டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே ஆகும்.
மாஸ்கோவில் தொடங்கி விளாடிவாஸ்டாக் வரை உள்ள மொத்த தூரம் 9288 கிலோ மீட்டர்கள் ஆகும்! மொத்தப் பயண நாட்கள் 7 ஆகும்!
இந்த ரயில் கடந்து செல்லும் ஆமுர் நதிப் பாலம் உலகிலேயே இரண்டாவது நீளமான பாலம் ஆகும்! முதலாம் இடத்தைப் பெறுவது மிசிசிபி நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
இதன் வழியில் உலகின் மிக நீளமான குகைப் பாதை ஒன்று உள்ளது. இதன் நீளம் 2.3கி.மீ ஆகும் மற்ற 32 குகைப்பாதைகளைவிட இதுவே மிக நீளமானதாகும்.

 

Source………www.dinamani.com

Natarajan