நகைச்சுவையும், பக்தி சுவையும் வாரி வாரி தந்த வாரியார் !!!

நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

இன்று வாரியார் பிறந்த நாள்….25 August….

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் – பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்
ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; – பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். – அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம்.காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்

‘சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.என்ன வரும்; வராது ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.

மணிவிழா :

1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று ‘மணி’ திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் ‘உம்’ என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு ‘மீனாட்சியம்மை திருமணம்’ என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். ‘சிரிப்பால் விளைந்த தீமை’ என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.

புத்திசாலி கணவன் :

புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், ‘வாயை மூடு!’ என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். ‘நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , ‘சொல்லின் செல்வன்’ என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில ‘சொல்லின் செல்வர்கள்’ இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

வள்ளி வந்தது எப்படி :

முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை ‘வள்ளி’ என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் ‘வள்ளல்’. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி ‘வள்ளி’ ஆனார்!வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு“கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை ‘நீ’ என்று சொல்லுவதற்குப் பதில் ‘நீங்கள்’ என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் ‘கள்’ செய்யும் வேலைதான்.”இதே போல், ‘இல்லாள்’ என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. ‘இல்லாள்’ இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் ‘இல்லான்’ – ‘பாப்பர்’ என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட ‘அய்யா, பிச்சை’ என்று சொல்ல மாட்டான்; ‘அம்மா, பிச்சை’ என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”

கரூருக்கு வருவாரா?

கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், ‘மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?’ என்ற ஏக்கத்தோடு, ‘மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்” என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?
-முனைவர் இரா.மோகன், in Dinamalar.com

Natarajan

” வயது 94…. யோகா 100 ….யூ ட்யூப் யோகா பாட்டி, ஞானம்மாள் !!!

  •   

94 வயது பாட்டியைக் குறித்த நம் பொதுவான சித்திரம் என்ன? உடல் தளர்ந்து, தோல் சுருங்கி, தள்ளாட்டத்துடனோ, கம்பு ஊன்றியோ நடப்பார் என்றுதானே நினைப்போம். ஆனால் கோயம்புத்தூரைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி தன் உடம்பை நாணில் இருந்து புறப்படுகிற அம்புபோல உறுதியுடன் வைத்திருக்கிறார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி முழங்கால்களை மடித்து அந்தரத்தில் நிற்கிறார். தலையும் முதுகும் தரையில் தாங்க, இடுப்பையும் காலையும் மேலே உயர்த்திப் பல நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் சர்வாங்காசனம் செய்வதைப் பார்க்கும்போதே மெய் சிலிர்க்கிறது. ஹாலாசனம், சிரசாசனம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை இப்போதும் தொடர்ந்து செய்துவருகிறார்.

யோகா குடும்பம்

கோவை கணபதி பகுதியில் குடியிருக்கும் நானம்மாள் பாட்டியின் சொந்த ஊர் பொள்ளாச்சி காளியாபுரம். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதால் நடைபழகிய வயதில் இருந்தே நானம்மாள் யோகாவையும் பயின்றார். பிறந்த வீட்டில் பயின்ற கலையை, புகுந்த வீட்டுக்குச் சீதனமாக எடுத்துவந்தார். சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த தன் கணவருக்கும் யோகாவைக் கற்றுத்தர, அவரும் மனைவியுடன் இணைந்து மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

நானம்மாள் பாட்டியின் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் அனைவருமே யோகா ஆசிரியர்கள். அவரவர் வசிக்கும் ஊரில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருகிறார்கள். பாட்டியுடன் சேர்ந்து இவர்களும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று யோகாவில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களும், சாம்பியன்ஷிப் கோப்பைகளும் வாங்கிவந்துள்ளனர். இந்த யோகா பாட்டியிடம் யோகா கற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடுகிறது.

சித்தமும் யோகமும்

இப்போதும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். தள்ளாடும் வயதிலும் இப்படித் தளராமல் இருக்க எப்படி இந்த மூதாட்டியால் முடிகிறது?

‘‘எனக்குப் படிப்பு எதுவும் இல்லீங்க. ஒண்ணாங் கிளாஸ் போனதோட சரி. அதுகூட எனக்கு ஞாபகம் இல்லை. சின்னப்புள்ளையில எங்க தாத்தா, பாட்டி யோகா பண்ணும்போது நானும் பண்ண ஆரம்பிச்சுடுவேன்னு எங்க அப்பா, அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன். யோகா மட்டுமில்லை. கிராமத்து வைத்தியத்துல எங்க குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்துல முன்னுக்கு இருந்தது” என்று சொல்லும் நானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் நானம்மாள்.

“என் வீட்டுக்காரர் குடும்பம் சித்த வைத்தியத்துல பிரமாதமா இருந்ததால அவர் ரெண்டும் கலந்து சனங்களுக்கு நல்லது செஞ்சார். சித்தமும் யோகமும் ஒண்ணுதான்னு அந்தக் காலத்துல சொல்லுவாங்க. என் சின்னம்மா 103 வயசு வரைக்கும் இருந்தா. நான் யோகா செஞ்சிட்டிருக்கும்போது குழந்தைகளும் செய்ய ஆரம்பிச்சிரும். அப்படித்தான் இப்ப எங்க குடும்பமே யோகாவிலேயே நெறைஞ்சு நிற்குது!’’ என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்ளும் நானம்மாளுக்கு இன்றுவரை மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது. காது நன்றாகக் கேட்கிறது. சிறு பிள்ளை போல் குடுகுடுவென மாடி ஏறுகிறார். இவரது கை, கால் வீச்சு, மூட்டுக்கள் வளைப்பிற்குச் சிறுமிகளாலேயேகூட ஈடுகொடுக்க முடிவதில்லை.

வீடு முழுக்க பதக்கங்களும், கோப்பைகளுமாக நிறைந்து கிடக்கிறது. ஒவ்வொன்றையும் எங்கே எப்போது வாங்கியது என்பதை நினைவில் நிறுத்திச் சொல்கிறார் நானம்மாள்.

வெளிநாட்டிலும் வெற்றி

திருப்பூரில் இன்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் சார்பாக 2012-ல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதில் வெற்றிபெற்றதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

“இந்த வயசுல ஏரோப்ளான் ஏறிப் போக முடியுமான்னு சோதனை போடறதுக்காக வீட்டுக்கே டாக்டருங்க, அதிகாரிங்க எல்லாம் வந்துட்டாங்க. எல்லாம் செக்-அப் பண்ணி பார்த்துட்டு ஏரோப்ளான்லயும் ஏத்தி விட்டுட்டாங்க. ஏரோப்ளான் சொய்ய்…ன்னு பறக்குது. எனக்கு ஒண்ணுமே ஆகலை. எங்கூட வந்த சின்னஞ்சிறுசுக எல்லாம் காதுக்குள்ளே அடைக்குது. காது வலிக்குதுன்னு சொல்லுதுக. சிலது அழுதுடுச்சு. அதுகளை பயப்பட வேண்டாம். அஞ்சு தடவை வாயை நல்லா திறந்து மூச்சுவிட்டு மூடுங்கன்னு சொன்னேன். அதுகளுக்கு வலி போயிடுச்சு!’’ என்று தன் அனுபவத்தைச் சொல்லிச் சிரிக்கிறார் பாட்டி.

மகனின் பெருமிதம்

இவருடன் இணைந்து வீட்டில் யோகா மையத்தை நடத்திவரும் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன், “என் அம்மா 50 முக்கியமான ஆசனங்களை இந்த வயதிலும் செய்கிறார். பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும். யு-டியூபில் யோகா லேடி என்று குறிப்பிட்டால் முதலில் ஒரு அமெரிக்கப் பெண்மணியின் பெயர் வரும். அடுத்ததாக அம்மாவின் பெயர்தான் வருகிறது. அம்மாவின் யு-டியூப் வீடியோவை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது!’’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

படங்கள்: ஜெ. மனோகரன்

சென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை !!!

  • ருக்மணி அருண்டேல்
    ருக்மணி அருண்டேல்
  • டாக்டர் லஷ்மி
    டாக்டர் லஷ்மி
  • டி.பி.ராஜலட்சுமி
    டி.பி.ராஜலட்சுமி
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
    சமைத்துப் பார் மீனாஷி அம்மாள்
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி
    எம்.எஸ்.சுப்புலட்சுமி

சென்னை தினம் கொண்டாடுகிற வேளையில் சமூக மாற்றத்துக்கான காரணகர்த்தாக்களாகவோ, ஏதோ ஒரு துறையில் களம்கண்ட காரிகைகளாகவோ இருந்த சென்னைப் பெண்களையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். அப்போதுதான் அந்தக் கொண்டாட்டம் முழுமை பெறும். அந்த வகையில் சமூகத்துக்குப் பங்காற்றிய பெண் ஆளுமைகள் பற்றிய தொகுப்பு:

டாக்டர் லக்ஷ்மி, குடும்ப நாவல்களின் முன்னோடி

திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் என்ற ஊரில் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி திரிபுரசுந்தரியாகப் பிறந்தவர். இவர் எழுதுவதற்காக வைத்துக் கொண்ட புனைப்பெயர் ‘லக்ஷ்மி’. சிறு வயதில் இருந்து மருத்துவராகும் கனவைச் சுமந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கிய இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அப்போதே கதைகளையும் எழுதத் தொடங்கினார்.

மருத்துவக் கல்விக்கு இனிமேலும் தன்னால் செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு வரச் சொல்லியும் இருந்த தந்தையின் கடிதம் திரிபுரசுந்தரிக்கு வேதனையையும் திகைப்பையும் அளித்தது. அந்தச் சமயத்தில்தான் ஒரு அமெரிக்கச் செய்தித்தாள் நறுக்கு அவர் கண்ணில் பட்டது. அமெரிக்க மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், தன் படிப்புக்காகக் காய்கறி லாரி ஒட்டிச் சம்பாதித்து அதில் வரும் வருவாயில் படித்து அறுவைசிகிச்சை நிபுணர் ஆனார் என்ற தகவல் அவரைப் பொறுத்தவரை திருப்புமுனையாக இருந்தது.

நாள்தோறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிராட்வே வழியாக டிராம் வண்டியில் பயணிக்கும்போது ஒரு நிறுத்தத்தில் ‘ஆனந்த விகடன்’ பெயர்ப் பலகை கொண்ட அலுவலகத்தைப் பார்த்திருந்த திரிபுரசுந்தரி, அதன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து உதவி கேட்க முடிவுசெய்தார். மறுநாளே ஒரு கதையை எழுதி வரச் சொன்னார் வாசன். இரவு முழுவதும் கண் விழித்து ‘தகுந்த தண்டனையா?’ என்ற சிறுகதையை எழுதி அளித்தார். அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் கல்கியைச் சந்தித்து ‘லக்ஷ்மி’ என்ற புனைப்பெயரையும் இட்டுக் கொடுத்தார்.

கதை பிரசுரமானது. ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அடுத்தடுத்து அவருக்கு உதவும் வகையில் ஒரு சிறுகதைக்கு 10 ரூபாய் வீதம் சன்மானம் அளிக்கப்பட்டது. அடுத்து ஒரு சிறு தொடர் எழுதவும் வாய்ப்பு வந்தது. அதற்குச் சன்மானம் ஐநூறு ரூபாய்.

மருத்துவராக ஆன பிறகு திரிபுரசுந்தரிக்கு அவரது எழுத்தே வாழ்க்கைத் துணையையும் அளித்தது. தாய்மை என்ற மருத்துவ நூலுக்காக விருது வாங்கச் சென்றபோது இலங்கையில் கண்ணபிரான் என்பவரைச் சந்தித்து அது திருமணமாகக் கனிந்தது.

சென்னையில் ஒரு டிராம் வண்டிப் பயணம் மூலம் தனது விதியையே மாற்றிக்கொண்ட குடும்பக் கதையாசிரியர் டாக்டர் லக்ஷ்மிக்கு ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசும் கிடைத்தது. இவர் 1987-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி காலமானார்.

சமைத்துப் பார் மீனாக்ஷி அம்மாள், சமையல் உலகின் ராணி

மெட்ராஸின் உணவு வரலாற்றில் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் எளிமையாகக் காணப்படும் 188-ம் எண் வீட்டுக்கு முக்கிய இடம் உண்டு. 70 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்ப் பெண்களின் கைவிளக்காக விளங்கிவரும் சமைத்துப் பார் புத்தகங்களின் நூலாசிரியர் மீனாக்ஷி அம்மாள் அங்கேதான் வாழ்ந்தார்.

ஒரு இளம் பெண் அடுப்பு முன்பிருந்து பானையைக் கிளறுவது போன்ற கோட்டுச் சித்திரம்தான் சமைத்துப் பார் புத்தகத்தின் அட்டைப்படம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு புதிதாகத் திருமணமாகி வெளியூர் செல்லும் அனைத்துப் புதுப்பெண்களும் தங்கள் மாமியாரையும், நாத்தனார்களையும் மனம் குளிர்விக்கப் பிரியமான தாயாகத் தன் புத்தகம் வழி உதவியிருக்கிறார் மீனாக்ஷி அம்மாள்.

பதின்ம வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. மூத்த மகன் பிறந்த இரண்டு வருடங்களிலேயே மீனாக்ஷி அம்மாளின் கணவர் இறந்துவிட்டார். இரண்டு வயது மகன், ஏழு வயது மைத்துனர், மாமியார் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்புகளுக்கு இடையேதான் இந்தப் புத்தகத்தை எழுதினார் மீனாக்ஷி அம்மாள்.

1951-ல் முதல் பதிப்புக் கண்ட சமைத்துப் பார் இதுவரை எண்ணற்ற பதிப்புகளைக் கண்டுவிட்டது. இப்புத்தகம் 1968-ல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் இதுவரை எழுதப்பட்ட சமையல் நூல்களில் மீனாக்ஷி அம்மாவை அடித்துக்கொள்ள இன்னும் யாரும் வரவில்லை.

ஒரு காலகட்டம்வரை சமையல் புத்தகம் சமையலறைகளில் ரகசியமான ஒன்றாகவே பெண்களால் பராமரிக்கப்பட்டது. சமைப்பதற்காக ஒரு புத்தகத்தின் துணையை நாடுவதை, அப்போதுள்ள குடும்பங்கள் விரும்பவில்லை. திருமணமாகும் வயது வந்த பெண் சமையல் திறனையும் இயற்கையாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அனைத்துத் தமிழ்ப் பெண்களுக்கும் மீனாக்ஷி மாமி ஒரு கேடயமாக மாறியிருந்தார் என்றால் ஆச்சரியமில்லை.

இப்போதும் ஐ.டி துறை சார்ந்து மேல்நாடுகளில் பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும், மணப்பெண்களுக்கும் இந்தப் புத்தகம் வரப் பிரசாதமாகவே உள்ளது.

நெருங்கிய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு, பெரிதாக இடமாற்றம் இல்லாமல் கூட்டுக் குடும்பமாக இருந்த நிலை மாறிய காலத்தில் எழுதப்பட்ட நூல் சமைத்துப் பார். கூட்டுக் குடும்பங்கள் சிறு குடும்பங்களாக மாறிய நிலையில் ‘சமைத்துப் பார்’ மீனாக்ஷி அம்மாள், எழுதியே லட்சாதிபதி ஆனார்.

டி.பி. ராஜலட்சுமி, தமிழ் சினிமாவின் தலைமகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் டி.பி. ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேச அய்யர், தாயார் மீனாட்சி. அக்கால வழக்கப்படி அவருக்கு ஏழு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. வரதட்சிணைக் கொடுமையால் திருப்பி அனுப்பப்பட்டார். மகளின் நிலை கண்டு துயருற்ற அவரது தந்தை மனம் வாடி மரணமுற்றார்.

ராஜலட்சுமி சிறு வயதிலேயே வறுமை வாட்டாமல் தன் விதவைத் தாயுடன் திருச்சி வந்தார். தன் தந்தை கற்றுக்கொடுத்த பாடலை ஒரு கோயிலுக்குச் சென்று மனமுருகப் பாடிப் பார்க்கத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. அந்தக் குரல்தான் அவருக்கு பின்னர் வாழ்வு தந்தது.

திருச்சியில் சி.எஸ். சாம்பண்ணா நாடகக் குழுவில் தாயும் மகளுமாகப் பணியில் சேர்ந்தனர். முதலில் ஸ்த்ரீபார்ட் வேடங்களில் நடித்த ஆண்களுக்குப் பாடத் தொடங்கிய ராஜலட்சுமி, பவளக் கொடி நாடகத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக நடித்தார். நாடக உலகில் ஜொலித்த ராஜலட்சுமியை வெள்ளித்திரை அள்ளிக்கொண்டது. 1929-ம் ஆண்டு வெளிவந்த கோவலன் படத்தில் ராஜலட்சுமி அறிமுகமானார். 1931-ல் பேசும் படமாக வெளிவந்த காளிதாஸில் கதாநாயகியானார். அதில் அவர் பாடி, ஆடிய “மன்மத பாணமடா மாரில் பாயுதடா” பாடலைத் தமிழகமே கொண்டாடியது.

நடிகையாக வெற்றிபெற்ற ராஜலட்சுமி மதுரை வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. டி. பி. ராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1964-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, காற்றினிலே வரும் கீதம்

மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் தன் 17 வயதில் முதல் முறையாக எம்.எஸ் பாடிய அனுபவம் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ள பெண் தன் தாய் பக்கவாட்டில் தம்புரா வாசிக்கப் பாடிய போது, அனுபவம் கொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள்கூட அந்தப் புதிய குரலை அற்புத உணர்வுடன் ரசித்துப் பாராட்டியதாக குறிப்பு உள்ளது. காரைக்குடி சாம்பசிவ ஐயர், எம்.எஸ்ஐப் பார்த்து, “குழந்தே, உனது குரலில் வீணை இருக்கிறது” என்றாராம்.

1916-ல் செப்டம்பர் 16-ம் தேதி சுப்ரமணிய அய்யருக்கும், சண்முகவடிவுக்கும் பிறந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி. அவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர், அம்மா வீணைக் கலைஞர்.

1936-ல் திரைப்படத்தில் நடிப்பதற்காகச் சென்னை வந்தபோது, ஏற்கனவே நாடறிந்த பாடகியாகப் புகழ்பெற்றுவிட்டார். சேவா சதனம், மீரா உள்ளிட்ட படங்களில் பாடி நடித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளர் கல்கியின் நண்பருமான டி.சதாசிவத்தை 1940-ல் மணந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இசை சாதனைக்காக பாரத ரத்னா விருது பெற்றார். மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு எனப் பெரிய தலைவர்களை எல்லாம் வசீகரித்த குரல் அவருடையது.

சதாசிவத்தின் மரணத்துக்குப் பிறகு மேடைகளில் பாடாமலேயே இருந்த எம்.எஸ். 2004-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவச் சேவையுடன் மானுட சேவை

பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது இப்போதும் அரிதாக உள்ள சூழ்நிலையில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உண்மையான புரட்சிப் பெண்ணாக, சமூக மனுஷியாகப் பெரிய சாதனைகளையும் பங்களிப்புகளையும் செய்தவர் முத்துலட்சுமி ரெட்டி.

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் 1886-ல் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, நன்றாகப் படித்ததால் உயர்நிலைப் பள்ளிவரை செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது.

மாணவர்கள் தேறுவதே அரிதாக இருந்த மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வெற்றிபெற்ற ஒரே மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். அதற்குப் பிறகு அவர் படிப்பதற்குத் தடைகள் உடைந்தன. 20 வயதில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெயரைப் பெற்றார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் சமூகப் பணியிலேயே அவரது ஈடுபாடு இருந்தாலும் சகோதரிகளின் வாழ்வை உத்தேசித்துத் தன் மனமொத்த கணவராக டி.சுந்தர ரெட்டியைத் தேர்ந்தெடுத்தார்.

சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் ஆனார். பின்னர் சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவராகவும் மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் இருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் துயரத்தை நேரில் கண்ட முத்துலட்சுமி ரெட்டி, உடனடியாக சென்னையில் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். தனது நெருங்கிய உறவினர் புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்ததைக் கண்டு அரசின் உதவிகூட இல்லாமல் நண்பர்களின் ஆதரவைப் பெற்றுச் சென்னை புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர் முத்துலட்சுமி ரெட்டி.

ஆங்கிலேய இந்தியாவில் அப்போது வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையையும், பால்ய மணத்தையும் ஒழிக்க பெரியார் ஈ.வே.ரா. மூவலூர் ராமாமிருதம் அம்மையாருடன் இணைந்து போராடினார். 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதளித்து இந்திய அரசு கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.

ருக்மிணி அருண்டேல், பல்துறைப் பேரொளி

ருக்மிணி தேவி 1904-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பொதுப் பணித்துறை பொறியாளராக இருந்த அவருடைய தந்தை, அன்னிபெசண்ட் அம்மையார் உருவாக்கிய தியசாபிகல் சொசைட்டியின் தீவிர உறுப்பினராகச் செயலாற்றியவர். தந்தையின் அறிமுகத்தால் ருக்மிணி தேவியிடம் சிறு வயதிலேயே அன்னிபெசண்ட் அம்மையாரின் தாக்கம் இருந்தது.

தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய வெள்ளையரான ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார்.

தியசாபிகல் சொசைட்டியின் இளைய மெய்ஞானிகள் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அருண்டேல் தம்பதியினர் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து மெய்ஞானசபையின் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

லண்டனில் 1924-ம் ஆண்டு பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவிடம் ருக்மினி நடனம் கற்றுத் தேர்ந்தார். அப்போதுதான் இந்தியப் பாரம்பரிய நடனமான பரதக் கலையை நோக்கி ருக்மிணி அருண்டேலின் கவனத்தை அன்னா பாவ்லோ திருப்பினார்.

பரதம் என்பது கவுரவத்துக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படாத காலம் அது. அதனால், அதைச் சொல்லித்தரவும் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பரதக் கலை ஆசிரியர்களைத் தேடிப்பிடித்து பரதம் பயின்றார் ருக்மிணி.

கலாக்ஷேத்ரா உதயம்

மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் தனது முதல் அரங்கேற்றத்தை 1935-ல் நடத்தினார்.

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அடையாறில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது கணவருடன் இணைந்து தொடங்கினார்.

தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்துள்ளார். சென்னைக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமிருந்து மாணவர்கள் தங்கிப் பயிலும் கலைப் புகலிடமாக திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா திகழ்கிறது.

1956-ல் ருக்மிணி தேவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பதவி தேடிவந்தபோது, அது தன் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று இவர் மறுத்தார்.

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் !!!

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி’ என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது’ என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

– நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

Source::::The Hindu….Tamil
Natarajan

மதறாஸப்பட்டணத்துக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம் !!!

ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.

 

தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D’Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.

சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.

டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.

ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.

பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.

சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.

ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்’டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.

இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!

– ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

Keywords: சென்னை, சென்னை 375, சென்னை விமான நிலையம், மதறாஸப்பட்டணம், மதறாஸ்

Source::::The Hindu…Tamil

Natarajan

“பசுமையின் மறு பெயர் சென்னை …” !!!

  • திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
    திருவல்லிக்கேணிக்கு பெயர் தந்த அல்லி மலர்
  • புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
    புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம்
  • புளியந்தோப்பு
    புளியந்தோப்பு

இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.

வரலாறு, பண்பாடு

“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.

ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.

காரணப் பெயர்கள்

அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).

ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.

செழிப்பின் அடையாளம்

“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.

இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.

இன்றைய நிலை

“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.

ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.

இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.

பெயர்

காரணம்

திருவல்லிக்கேணி

திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்)

தேனாம்பேட்டை

தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை

புரசைவாக்கம்

புரச மரங்கள் நிறைந்த பகுதி

வேப்பேரி

வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி

புளியந்தோப்பு

புளிய மரங்கள் நிறைந்த தோப்பு

பனையூர்

பனை மரங்கள் நிறைந்த ஊர்

அத்திப்பேட்டை

அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை

பூந்தமல்லி

பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை

பெரம்பூர்

மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர்

ஆலந்தூர்

ஆலமரங்கள் கொண்ட ஊர்

திருவாலங்காடு

திரு+ஆலம்+காடு

இரும்புலியூர்

இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே)

திருவேற்காடு

வேல மரங்களால் நிறைந்த காடு

மாங்காடு

மாமரங்களால் நிறைந்த காடு

திருமுல்லைவாயல்

முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி

‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

Madras to Me ….

Can you truly know a city? Possibly — if your job entails a lot of travel or if your home is in the southern part and your school somewhere up north, and you have friends in the east and family in the west. But this is rare, and to most of us, celebrating a city really comes down to cherishing the parts of the city we know. But of this, there can be no question. If you’ve spent your growing-up years in a city, even if only in these parts, then that city is your home — all of it. And Madras Day is as good a time as any to think about what Madras means to us — well, at least to me.

Madras, to me, is the beaches of my childhood, the mornings filled with huffing walkers and the distant tang of fish being hauled in and, above it all, a sun that rises as it does nowhere else, over water that mirrors its every mood — a sight that quite adequately compensates for the desecration of the nearby sands by the clutch of ugly, deserted stalls that, in the evenings, will tempt visitors with roasted corn and balloons waiting to be shot.

Madras is the stainless steel davara-tumbler of freshly decocted coffee, the ritual of pouring the frothing liquid from one container to another as imperative as the taste.

Madras is the irritation when any visitor to the city thinks only of filter coffee when asked what they like most about Madras, along with jasmine flowers and Kanjivaram saris and idlis, which are almost always described as humble, as if anyone ever ran into a vainglorious idli.

Madras is the suppressed snicker from watching non-Tamils come here to cover the Music Season and struggle to say ‘Margazhi’, as if gargling through a mouthful of marbles.

Madras is the sight of Kalakshetra dancers cycling to class or back home in hoicked-up cotton saris worn over salwars. It is also the sight of a Carnatic musician singing his heart out to 12 people in the audience, at least two of whom have buried their noses in The Hindu crossword.

Madras is The Hindu crossword.

Madras is the twinge whenever you come down Gemini Flyover and glance to the left and see the rubble that was once Safire Theatre, with that proudly cursive ‘S’ on the outside, and, inside, the names of every single film that played in these premises, beginning with Cleopatra.

Madras is the look of horror whenever you have to meet a friend or keep an appointment in T. Nagar, especially when it’s around the stretch that sells clothes and jewels, and more clothes and more jewels, and you finally know what it’s like to be a lone fish in a shoal that’s being swept along in a surging current.

Madras is the tennis ball that lands at your feet when you are walking past a playground where boys are playing cricket. Madras is the cry, “Uncle… ball!”

Madras is the realisation that to this city whose streets you scoured as a footloose kid you are now an “uncle”.

Madras is the Tamil that only people from Madras can tolerate, even love, even they’ve only heard this Tamil in Kamal Haasan’s comedies.

Madras is the eternal question: “Are you a Rajini fan or a Kamal fan?”

Madras is the guilt at having gotten used to calling it ‘Chennai’.

Madras is the anger that, somehow, the rapes and robberies that happen here are less visible to the national media than the ones that happen in Delhi and Mumbai. It is the sad awareness that the spectacular heart-run that saved one life, minutes after another one left this world, a logistical marvel that involved everyone from traffic cops to ambulance drivers to alert medical professionals, would have been 24×7 headline news had it happened elsewhere.

Madras is the mild impatience whenever an elder in the family goes into raptures about the Peach Melba at Jaffar’s Ice Cream Parlour, at New Elphinstone theatre, which now exists only in those memories.

Madras is the annoyance whenever someone from Delhi or Bangalore or Mumbai comes down and sighs that there are no good bars or hangout joints. Madras is the belief that one has to earn the right to mock a city by living in it, not just by dropping in for a weekend.

Madras is the radio station that wakes up with ‘Gaana’ Bala and goes to sleep with Ilayaraja. It is the TV set with a hundred Tamil channels and not a single movie worth watching on the rare afternoon you’re at home. It is the feeling when you return after a trip abroad and walk into a small restaurant, one of those nondescript ‘Bhavans’, and tuck into a nei roast, listening to the people around you chattering in Tamil, smiling softly at the occasional English, and keeping an eye on the clock because you have an auto waiting, along with a driver who’s sure to complain about how long you took, and expect an extra Rs.10 or 20.

Keywords: Madras Week celebrationsMadras DayMadras historyMadras 375

Source::::The Hindu

Natarajan

 

” தயங்காதே…தளராதே…ஒரு தன்னம்பிக்கை தமிழனின் வெற்றி கதை …”

நன்றாக படிக்கக் கூடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன்; ஆனால், குடும்பத்திலோ வறுமை. தினம், 10 கி.மீ., நடந்து போய் தான், படிக்க வேண்டும்.
சில சமயம் சைக்கிளிலும், எப்போதாவது பஸ்சிலும் செல்வான். அப்போது, பஸ் கட்டணம் கால் ரூபாய் தான் என்றாலும், அதையும் கணக்கு பார்க்க வேண்டிய குடும்ப சூழல்.
பிராமணர் என்பதால், ஊக்கத்தொகைக்கும், உதவி தொகைக்கும் வழியில்லை; விடுதியில் தங்குவதற்கோ விதி இடம் தரவில்லை. இதனால், பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்ற அவன், ‘சார்… தினமும் 10 கி.மீ., நடந்து, பள்ளிக்கு வந்து போவது சிரமமாயிருக்கிறது; பஸ்சை எதிர்பார்த்தா, அம்மா பட்டினி கிடக்க வேண்டி வரும். இலவசமாய் விடுதியில் இடம் கிடைக்குமானால், எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர்…’ என்று, கெஞ்சினான்.
அவனது நிலையை அறிந்த ஆசிரியர், ‘உனக்கு உதவணும்ன்னு எனக்கும் விருப்பம்தாம்பா…ஆனா, நான் சிபாரிசு செய்யணும்ன்னா, நீ வகுப்புல முதல் மாணவனாக வரணும்; நல்லா படிச்சு, மார்க் எடு பாக்கலாம்…’ என்றார்.
அவனும் சந்தோஷத்துடன், ‘எல்லா பாடத்திலயும் நிச்சயமாய் முதலாவதாக வருவேன்…’ என்று கூறிச் சென்றான்.
அதே போன்று உற்சாகமாய் படித்து, தேர்வு எழுதினான்.
அன்று கடைசி தேர்வு…
முதுகில் புத்தக மூட்டையுடனும், நெஞ்சில் கனவுகளுடனும் பஸ்சிற்காக காத்திருந்தான். 10:00 மணிக்கு தேர்வு; 9:00 மணிக்கு வர வேண்டிய பஸ், 9:30 மணி வரை வரவில்லை.
‘கடவுளே… இது என்ன சோதனை. நேரத்திற்கு போகவில்லையென்றால் தேர்வு எழுத விடமாட்டார்களே… இனியும் பஸ்சை நம்பி பிரயோஜனமில்ல…’ என்று நினைத்து வீட்டிற்கு ஓடியவன், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓட்டை சைக்கிளை எடுத்து, மிதிக்க ஆரம்பித்தான்.
சுமார், 2 கி.மீ., போயிருப்பான்; டயர் பஞ்சர். இன்னும், 8 கி.மீ., போக வேண்டும். நேரமோ, 10:00 மணியாகி விட்டது.
சைக்கிளை அப்படியே கடை ஒன்றில் போட்டுவிட்டு, முதுகில் இருந்த புத்தக மூட்டையுடன் ஓட ஆரம்பித்தான், ஓடுகிறான்… ஓடுகிறான்… அப்படி ஒரு பேயோட்டம்.
அவன் ஓடிக்கொண்டே இருக்கட்டும்; அவன் இலக்கை அடைந்தானா என்பதை, பிறகு பார்ப்போம்.
உலக நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த, அதிலும் தமிழகத்தை சேர்ந்த சாதனையாளர்கள் பலர், நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்தாலும், அரபு நாடுகளில் மட்டும் இந்தியர்கள் தொழில், அறிவியல், மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் முதன்மை பதவியில் அமர்த்தப்படுவது அபூர்வம். எல்லாமே நாம் செய்து கொடுத்தாலும், பதவி மட்டும் உள்ளூர்வாசிகளுக்குத் தான்!
இதற்கு விதிவிலக்காக இருப்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.சீதாராமன். தோஹா வங்கியின் தலைவராக, உலக அளவில் அவ்வங்கியை வளர்த்து, எல்லாராலும் வியந்து பார்க்கப்படும் மனிதர்.
அவரது மிடுக்கும், கம்பீரமும் பிறரை அசர வைத்தாலும், இந்தியர்கள் என்றால், அதிலும் தமிழர் என்றால் அப்படியே உருகி விடுவார்.
கத்தார் நாட்டில் எந்த இந்திய நிகழ்ச்சி என்றாலும், உடனே கை கொடுப்பார். எளிமையும், இளகிய மனமும் கொண்ட இவர், எளிதில் பிடிக்க முடியாத அளவிற்கு, எப்போதும் பிசினஸ் விஷயமாய் உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்.
குவைத்தில், ‘பிரன்ட் லைனர்ஸ்’ விழாவிற்கு தலைமை விருந்தினராக அழைத்தவுடன், தன் மற்ற பயணங்களை மாற்றி வைத்து, உடனே ஒப்புதல் தந்தார்.
சீதாராமன் வருகிறார் என்றதும், பல அமைப்பினரும், இந்தியப் பள்ளிகளும் அவரை உரையாற்ற அழைத்தனர். ஆனால், குவைத்தில் அவர் தங்கப் போவது ஒரு நாள் தான் என்றதும், பலருக்கும் ஏமாற்றம்.
இந்த விவரத்தை அவருக்கு தெரிவித்ததும், நிகழ்ச்சிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, சீதாராமனிடமிருந்து அழைப்பு. ‘குவைத்திற்காக நான் மூன்று நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன்; எங்கள் வங்கி நிகழ்ச்சியை முதல்நாள் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன். மீதம் இரண்டு நாள், உங்களுக்காக… என்னுடன் என் தாயார், மனைவி மற்றும் மகளும் வருகின்றனர்…’ என்றார்.
அன்று வங்கி சார்பாக, பலரின் அப்பாயின்மென்ட்கள் இருக்க, சீதாராமன் அவர் களுக்கு, ‘கடுக்காய்’ கொடுத்து, இந்திய பள்ளி மற்றும் இந்திய தூதுவர் சந்திப்பு என, நேரம் ஒதுக்கித் தந்தார்.
‘பிரன்ட் லைனர்ஸ்’ புத்தகத்தின், 17ம் தொகுதியை நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் வெளியிட, சீதாராமன் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு; இருவருக்கும் பல ஆண்டு நட்பு இருந்ததால், இருவருமே ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தனர்.
காலையில் கலந்துரையாடல்; மாலையில் புத்தக வெளியீடு மற்றும் கலை நிகழ்ச்சிகள். இரண்டுக்குமே சீதாராமனின் தாய், மனைவி மற்றும் மகள் வந்திருந்து ரசித்தனர்.
மலர்ந்த முகத்துடன் காட்சியளித்த அவரது தாயை மேடைக்கு அழைத்து நாங்கள் கவுரவிக்க, கைதட்டல் ஓயவில்லை. அதற்கு காரணம், வறுமையிலும் கூட, சீதாராமனை வளர்த்து, வளப்படுத்தி, உலக அளவில் உயர்த்தியுள்ள அந்த தாயின் சாமர்த்தியமும், கஷ்டத்தை பொருட்படுத்தாமல் படிக்க வைத்து, ஆளாக்கின அவரது வைராக்கிய மாண்பும் தான்!
ஆம்… இன்று தன் உழைப்பாலும், திறமை மற்றும் தன்னம்பிக்கையாலும் சிகரத்திலுள்ள சீதாராமன் தான், அன்று எட்டாம் வகுப்பு தேர்வுக்காக, ஓட்டமாக ஓடியவர். திரும்ப அந்த கதைக்கு வருவோம்…
அன்று —
கை, கால்கள் மற்றும் உடல் தளர்ந்தாலும், அவனது உள்ளம் தளரவில்லை.
வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டிருந்தவன், பள்ளியை அடைந்த போது, மணி, 10:30; தேர்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அப்போதும் அவன் தளர்ந்து விடவில்லை; நம்பிக்கையை இழக்காமல் தலைமையாசிரியர் அறையை நோக்கி ஓடினான். அழுகையும், பதட்டமுமாக ஓடி, வந்தவனைப் பார்த்த தலைமையாசிரியர், அவனை அமைதிப்படுத்தி அரவணைத்து அழைத்துப்போய் தேர்வு எழுதச் சொன்னார்.
ஓடிவந்த களைப்பில் கை நடுங்க அவன் எழுத ஆரம்பித்தான். தேர்வு நேரம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் போதே முழுதாய் எழுதி கொடுத்துவிட்டு, தலைமையாசிரியரிடம் நன்றி கூறி, அழ ஆரம்பித்தான்.
அந்தத் தேர்வில் அவன் நினைத்தபடியே முதலிடம் பெற்றான்; தகுதி அடிப்படையில் விடுதியிலும் இடம் கிடைத்தது.
அவன் எந்த தருணத்திலும், தன் சூழலையோ, வறுமையையோ நொந்து கொண்டதில்லை. இல்லாததை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கவில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவனது தந்தை, அவனுக்கு கற்றுத் தந்திருந்தார்.
சீதாராமனுடைய தந்தை ஒரு சமஸ்கிருத பண்டிட்!
அந்நாட்களில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்து, வெறுப்புடன் இந்தியை விரட்டியடிக்க, இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு வேலையில்லாமல் போனதால், அவரது சம்பாத்யம் பறிபோயிற்று. அதன்பின், அவர் பிழைப்பு தேடி பம்பாய் சென்றுவிட, சீதாராமனுடைய அம்மாவும், பாட்டியும் குடும்பத்தை சுமக்க வேண்டியதாயிற்று.
பாட்டியும், இளம் வயதிலேயே முதுமை அடையும் அளவிற்கு உழைத்து, ஓடாய்ப் போனவர். அம்மாவும், பிள்ளைகளுக்கு கஷ்டம் வரக்கூடாது என, அக்கம் பக்கம் வீடுகளில் வேலைபார்த்து, வயிற்றை கழுவும் நிலைமை. அந்த சூழலிலும் கூட சீதாராமனின் விருப்பத்திற்கும், லட்சியத்திற்கும் அவர்கள் குறுக்கே நின்றதில்லை.
எப்போதும் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி படிக்க வைத்தனர். சீதாராமனும் வீட்டினரை கஷ்டப்படுத்தாமல், தன்னை விட ஓர் ஆண்டு மூத்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டியூஷன் சொல்லித் தருவார். இதனால், காசுக்கு காசும், அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்களும் இலவசமாய் கிடைத்தன. பின்னால் சீதாராமன், பி.காம்., முதலாமாண்டு படிக்கும் போதும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார்.
அத்துடன், அதிகாலையில் எழுந்து, வீடுவீடாய் பேப்பர் போடுவது, ஓட்டல்களில் வேலை, சினிமா போஸ்டர் ஒட்டுவது என, பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கிடையே படித்த சீதாராமன், பி.காம்.,மில் கோல் மெடலிஸ்ட். அதன்பின், சி.ஏ., படிப்பை, தன் சொந்த முயற்சியாலே படித்து முடித்தவருக்கு, ஓமனில் வேலை கிடைத்தது.
அதன்பின், கத்தாரில் நலிவடைந்திருந்த, தோஹா வங்கியின் பொறுப்பை ஏற்று, அதன் உயரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
இயல், இசை, நாடகம் என, அவருக்கு சின்ன வயதிலிருந்தே ஈடுபாடு; படிக்கும் போதே, பெண் வேடம் போட்டிருப்பதுடன், பல குரல் வித்தகர். பொதுவாய் ஒருவர் பெரிய பதவியை வகித்து விட்டாலே, கற்ற கலைகளை விட்டு விடுவர்; ஆனால், சீதாராமன் இதற்கு விதிவிலக்கு. குவைத்திலும் மேடையில், சிவாஜி வசனம் பேசி, அசத்தினார்.
வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்தாமல் வீணாய்ப் போனவர்களுக்கு மத்தியில், ‘வறுமையும் கஷ்டமும், படிப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடையல்ல…’ என்று நிரூபித்திருக்கும் சீதாராமன், ஒரு முன்னுதாரண தமிழர்; உலக அளவில், இந்தியர்களின் பெருமையை உயர்த்தி பிடித்திருப்பவர்.

என்.சி.மோகன்தாஸ்  ….in Dinamalar…Vaara malar

Natarajan

” மறக்காம சொல்லுங்க…. உங்க தாய் மொழி தமிழ் என்று …”

 

தடுக்கி  விழுந்தால் மட்டும்  ..அ    ஆ

சிரிக்கும்  போது  மட்டும்  …இ …ஈ …

சூடு  பட்டால்    உ….ஊஊ

அதட்டும்   போது  மட்டும்   …எ   …ஏ ஏ…

மகிழ்ச்சி   மிதப்பில்  ஒலிப்பது….ஐ…ஐ !!!

ஆச்சரியத் தின்  போது   …..ஒ…ஓ…

 வக்கனை  பேசும்போது  மட்டும்  …ஓள ….

 விக்கல்  எடுக்கும் சமயம்  மட்டும் … அக்  அக்…!!!

  என்று  நம் மொழி தமிழ்  பேசி …மற்ற

  பிற  நேரம் எல்லாம்  வேற்று  மொழி

   பேசும்  தமிழ்  நண்பர்களுக்கு  மறக்காமல்

    சொல்லுங்க …. உங்க  தாய்  மொழி

    தமிழ்  தமிழ்  என்று !!!!

..

Source:::thangarajkavidhaigal.blospot.in….

Natarajan