
ஸ்ரீவாரி பிரசாதம் என்றும் லட்டு பிரசாதம் என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டைத் தயாரிப்பதற்குப் பிரத்யேகமான ஒரு மடப்பள்ளியே திருமலையில் இயங்கி வருகிறது. இந்த மடப்பள்ளியை ‘பொடு’ என்று அழைக்கிறார்கள். பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்று தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.
விற்பனைக்குச் செல்லும் லட்டுகள் தயாரான பின், அதன் எடை தேவஸ்தான ஊழியர்களால் பரிசோதிக்கப்படுகிறது. என்றாலும், காசு கொடுத்து தாங்கள் வாங்கும் லட்டின் எடை சரியாக இருக்கின்றதா என்பதை பக்தர்களே சோதித்து அறிவதற்கு, லட்டுகள் விற்பனை செய்யப்படும் மையத்துக்கு அருகில் மின்னணுத் தராசும் வைத்திருக்கிறார்கள். இதையும் மீறி லட்டின் தரம் குறித்தும், எடை குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு வருடத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு 103 கோடி ரூபாய்க்கும், 2009ஆம் ஆண்டு 125 கோடி ரூபாய்க்கும் லட்டு விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி தேவஸ்தானம் எத்தனை லட்டுகள் தயாரித்தாலும், சில நேரங்களில் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமலேயே போய்விடுகிறது. இதற்காக, தடை இல்லாமல் லட்டு கிடைப்பதற்கும், சுவையை மேம்படுத்துவதற்கும், கள்ள மார்க்கெட்டில் விற்பனையாவதைத் தடுப்பதற்கும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறார்கள்.
திருமலையில் லட்டு தயாரிப்பதற்குப் பயன்படும் கடலைப் பருப்பு, நெய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை டெண்டர் மூலமாக ஆரம்பத்தில் வாங்கி வந்தார்கள். அப்படி வாங்கப்படும் பொருட்களின் தரம், சில வேளைகளில் திருப்திகரமாக இல்லை என்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகுதான், லட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைத் தகுந்த அதிகாரிகளை வைத்து பரிசோதனை செய்த பின், நேரடியாகவே கொள்முதல் செய்வதென்று தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டது. அப்படித்தான் அனைத்துப் பொருட்களும் தற்போது வாங்கப்படுகின்றன. உதாரணமாக, மும்பையில் இருக்கிற ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்திடம் இருந்து ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பும், ஆந்திர மாநில அரசு நிறுவனமான விஜயா டைரியில் இருந்து நெய்யும் வாங்குகிறார்கள்.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி இருக்கும் திருப்பதி லட்டுக்கு இப்போது காப்புரிமையும் வழங்கப்பட்டுவிட்டது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள ‘உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவக’த்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், ‘எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்திருக்கிறது.
இனிமேல் திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே சைஸில் – சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது.

மேல் திருப்பதியில் – அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடைப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நிவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம்.
என்றாலும், ஆதிகாலத்தில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் பாப்புலராக இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் ரொம்ப ஃபேமஸ்.
மனோகரம் என்பது என்ன? கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும் வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் உலர்ந்த இந்தக் கலவையை, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால் அதுதான் மனோகரம். கரகரவென பல்லால் கடித்து உண்ணக்கூடிய ஒரு உணவு அயிட்டம் இது. இந்த மனோகரம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது.
நீண்ட நாட்களுக்கு மனோகரம் கெடாமல் இருக்கும். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
தினமும் 1.5 லட்சம்!

தீபாவளி காலங்களில் இனிப்புகள் தயார் செய்வதற்கு கடலை மாவு, ரவா, சர்க்கரை, நெய், முந்திரி என்று ஏகப்பட்ட பொருட்கள் தேவைப்படும். இவற்றை வாங்குவதற்கு, ஒரு நீண்ட பட்டியலை எழுதிக்கொண்டு மளிகைக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்போம்.
ஆனால், திருமலை மடைப்பள்ளியில் தினமும் ஒண்ணரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. அதற்கு, 5 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, டைமண்ட் கல்கண்டு 400 கிலோ, எண்ணெய் 20 கிலோ, வாதுமைப் பருப்பு 2 பெட்டி என்கிற அளவில் பொருட்கள் தேவைப்படுகின்றன.
பொங்கல்தான்… ஆனால்!

கி.பி. 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் காலத்திய கல்வெட்டுக்களில், திருப்பதி ஆலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதங்கள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அதில் தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை இடம்பெறுகின்றன.
இதற்கடுத்த பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் பாசிப் பருப்பு, அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் இடம் பெற்றிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தால் வெண்பொங்கல்தானே! ஆனால், இதன் பெயர் பொங்கல் என்ற குறிப்பு இடம்பெறவில்லை. அப்போது வெண்பொங்கல் என்கிற வார்த்தை உபயோகத்தில் இல்லை போலிருக்கிறது.
நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்) and P.Swaminathan
Source….www.balhanuman.wordpress.com
Natarajan



பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு. இதைச் சொல்லிவிட்டு, பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்ததுதான் தெரியும். அடுத்த விநாடி நடந்த சம்பவத்தை, அங்கே எவரும் எதிர்பார்க்கவில்லை – வேங்கடவனைத் தவிர. ஐயோ… வயிறு வலிக்குதே… குத்துதே… என்னன்னு தெரியாம குடையுதே” என்று பெருங்குரல் எடுத்து, அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலற ஆரம்பித்தார் மன்றோ. திடீரென சுருண்டு விழுந்தார். உடன் வந்த அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்தவரை கைத்தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். வைத்தியம் செய்தனர். என்றாலும், வயிற்று வலிக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை. இதன்பின் வந்த மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. வலியும் குத்தலுமாக நகர்ந்தன நாட்கள். கிழிந்த துணி ஆகிப் போனார் மன்றோ. இதையடுத்து ஒருநாள்… திருப்பதியில் இருந்து, அலுவல் விஷயமாக மன்றோவைச் சந்திக்க வந்தார், ஓர் அர்ச்சகர். தனது நிலை குறித்து அவரிடம் புலம்பித் தீர்த்தார் மன்றோ. துரைமாரே… நான் ஒன்று சொன்னால் கோவிக்கக்கூடாது. சொல்லட்டுமா?” என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர். சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும். அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. ஏதாவது சொல்லுங்கள்” என்று, அவரது முகத்தை ஆர்வத்துடன் ஏறிட்டார் மன்றோ. தன்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அர்ச்சகர், பெருமாளோட பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய் பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு” என்று நிறுத்தினார். சொல்லுங்க.. அது என்ன பரிகாரம்? நான் செய்யத் தயாராய் இருக்கேன்” என்று மண்டியிட்டார் துரை.
பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும்” என்றார். பரிகாரத்தைக் கேட்டதும், மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினார். தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பதுதானே தெய்வத்தின் குணம்! ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிடச் சாப்பிட… அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலுமாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது. ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசிதான்” என்று நெகிழ்ந்து போனார். இதோடு நிற்கவில்லை; தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார். அத்துடன், ஒரு பக்தனாகப் திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார். கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.
இவர் மட்டுமல்ல; ஆங்கிலேயர்களில் கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோரும் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு, பல நேர்த்திக் கடன்களையும் செலுத்தி உள்ளனர் என்பது கூடுதல் தகவல். தாமஸ் மன்றோ, கி.பி.1761ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி ஸ்காட்லாந்தில், உள்ள கிளாஸ்கோ நகரத்தில் பிறந்தவர். படிக்கின்ற காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இருந்த மன்றோ, ஒரு பாக்ஸரும்கூட. ஆங்கிலேயர்களின் போர்ப் படையில் 1779-ல் ஒரு சாதாரண வீரராக சேர்ந்த மன்றோ. பிறகு, கமாண்டர், கலெக்டர் என்று பல பதவிகளை வகித்து, 1820-ல் சென்னை மாகாண ஆளுநரானார். சென்னை – அண்ணா சாலையில், தீவுத் திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலையை பலரும் பார்த்திருப்பீர்கள்! அவர்தான், சர் தாமஸ் மன்றோ!















































