” கிழவியும் குழவியும் …” அவ்வையார் ….பிள்ளையார் …!!!

 

pillaiyar-avvaiyaar

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Great messages on Vinayagar by Maha Periyava from Vol. 2 of Deivathin Kural. Let’s enjoy these messages during Vinayaka Chaturthi time.
Thanks to Shri S.A. Ramakrishnan and Shri Balaji Venugopal for the translation. Ram Ram
கிழ‌வியும் குழ‌வியும்
கிழப் பாட்டி ஒருத்தி. பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு இருந்த இடத்திலேயே கிடப்பவள். ஆனால் இந்தப் பாட்டி அப்படி இல்லை. இவள் நின்ற இடத்தில் நிற்காமல் இந்தத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக்கொண்டே இருந்தாள். ஒரு குக்கிராமம் பாக்கியில்லாமல் ஊர் ஊராக, தெருத் தெருவாக ஓடிக்கொண்டேயிருந்தாள். அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு உற்சாக சக்தி இருந்தது. பாட்டி விஷயம் இப்படி இருக்கட்டும்.
குழந்தை ஒன்று. ‘கஷுக் முஷுக்’ என்று நல்ல ஆரோக்கியமாக இருக்கிற குழந்தை அது. குழந்தை என்றால் பொதுவாக என்ன பண்ணும்? துள்ளி விளையாடும். ஒரு க்ஷணம்கூட இருந்த இடத்தில் இருக்காமல் ‘துரு துரு’ என்று ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் இந்தக் குழந்தை இதற்கு நேர்மாறுதல். உட்கார்ந்த இடத்தைவிட்டு அது அசைவதில்லை.
வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை! குழந்தை மாதிரி பாட்டி ஓடிக் கொண்டிருக்கிறாள். பாட்டி மாதிரி குழந்தை இருந்த இடத்தைவிட்டு நகராமல் உட்கார்ந்திருக்கிற‌து.
ஆனால் அந்த‌ப் பாட்டி த‌ள்ளாத‌ வய‌சிலும் அத்த‌னை உற்சாகத்தோடு ஓடி ஆடிக் கொண்டிருந்ததற்கு இந்தக் குழந்தைதான் கார‌ண‌ம். இந்த‌க் குழந்தை கொடுத்த‌ ச‌க்தியினால்தான் அவ‌ள் அவ்வ‌ள‌வு காரிய‌ம் செய்தாள்.
இந்த‌ப் பிள்ளை யார்?
“பிள்ளை” என்றாலே அவ‌ர்தான். ம‌ரியாதையாக‌ப் “பிள்ளையார்” என்கிறோமே, அவ‌ர்தான் அந்த‌க் குழ‌ந்தை. யாராவ‌து ஒருத்த‌ர் இட‌த்தைவிட்டு ந‌க‌ராம‌ல் இருந்தால் ‘க‌ல்லுப் பிள்ளையார் மாதிரி” என்று சொல்வ‌து வ‌ழ‌க்க‌ம்!
ச‌க‌ல‌ உல‌கங்க‌ளுக்கும் தாய் த‌ந்தையான‌ பார்வ‌தி ப‌ர‌மேச்வ‌ர‌ர்க‌ளின் மூத்த‌ பிள்ளை அவ‌ர். அத‌னால்தான் த‌மிழ் நாட்டில் அவ‌ரைப் “பிள்ளையார்” என்று சொல்கிறோம்.
ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் இவ‌ரை க‌ணேஷ் (க‌ணேச‌ர்), க‌ண‌ப‌தி என்பார்க‌ள். சிவ‌பெருமானின் ப‌டைக‌ளுக்கு, பூதகணங்களுக்கெல்லாம் பிள்ளையார்தான் தலைவர், ஈச‌ர், ப‌தி. அதனால் க‌ணேச‌ர், க‌ண‌ப‌தி என்று பெய‌ர். இவ‌ருக்கு மேலே த‌லைவ‌ர் யாரும் கிடையாது. எல்லாவ‌ற்றுக்கும் முந்திய‌வ‌ராக‌, முத‌ல்வ‌ராக‌, மேலாக‌ இருப்ப‌வ‌ர் அவர். அவ‌ருக்கு மேலே இன்னொரு த‌லைவ‌ர் (நாய‌கர்) இல்லை. அத‌னால் ‘விநாய‌க‌ர்’ என்றும் பெய‌ர். ‘வி’ என்ப‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒன்றை உய‌ர்த்திக் காட்டுவ‌த‌ற்கும் சில‌ சம‌ய‌ங்க‌ளில் ஒன்றுக்கு எதிர்ம‌றையான‌தைக் (opposite) குறிப்பிட‌வும் வார்த்தைக்கு முத‌லில் வ‌ரும். இங்கே “நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர்” என்று எதிர்ம‌றையாக‌ வ‌ருகிற‌து. த‌ம‌க்குமேல் ஒரு நாய‌க‌ன் இல்லாத‌வ‌ர் என்று அர்த்த‌ம்.
அவ‌ர் செய்யாத‌ அநுக்கிர‌ஹ‌ம் இல்லை. குறிப்பாக‌, ந‌மக்கு வ‌ருகிற‌ விக்கின‌ங்க‌ளை எல்லாம் அழிக்கிற‌வ‌ர் அவ‌ர்தான். ஆகையால் ‘விக்நேச்வ‌ர‌ர்’ என்றும் அவ‌ரை சொல்கிறோம். எந்த‌ காரிய‌த்துக்கும் த‌டை வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்காக‌வே முத‌லில் இவ‌ரை பிரார்த்திக்கிறோம். முத‌ல் பூஜை இவ‌ருக்குத்தான்.
க‌ஜ‌முக‌ன், க‌ஜ‌ராஜ‌ன் இப்ப‌டியெல்லாம் அவருக்குப் பெய‌ர் இருக்கிற‌து. யானை முக‌த்தோடு அவ‌ர் விள‌ங்குவ‌தால் இந்தப் பெய‌ர்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌.
யானைக்குத் தேக‌ப‌ல‌ம் மிக‌வும் அதிக‌ம். ஆனாலும் அது சிங்க‌ம், புலி போல் ம‌ற்ற‌ப் பிராணிக‌ளை ஹிம்சிப்ப‌தில்லை. ப‌ர்மா, ம‌லையாள‌ம் மாதிரி இட‌ங்க‌ளில் ஜ‌ன‌ங்க‌ளுக்காக‌ யானைக‌ள் தான் பெரிய‌ பெரிய‌ காரிய‌ங்க‌ளைச் செய்கின்ற‌ன‌. பிள்ளையாரும் இப்ப‌டித்தான் ரொம்ப‌ ச‌க்திவாய்ந்த‌வ‌ர்; ஆனாலும் அதைக் காட்டிக் கெடுத‌ல் செய்யாம‌ல் ந‌ம‌க்கெல்லாம் ந‌ன்மையே செய்துகொண்டிருப்பார். யானைக்கு புத்திகூர்மை, ஞாப‌க‌ச‌க்தி எல்லாம் மிக அதிக‌ம். பிள்ளையார் அறிவே வ‌டிவான‌வ‌ர்.
யானை என்ன‌ செய்தாலும் அழ‌காயிருக்கிற‌து. அது அசக்கி அச‌க்கி ந‌ட‌ப்ப‌து, சாப்பிடுவ‌து, காதை ஆட்டுவ‌து, தும்பிக்கையைத் தூக்குவ‌து – எல்லாமே பார்க்க‌ ஆன‌ந்த‌மாயிருக்கிற‌து. அத‌ன் முகத்தைப் பார்த்தாலே ப‌ர‌ம‌ சாந்தமாக இருக்கிற‌து. சின்ன‌ க‌ண்க‌ளான‌லும், அமைதியாக‌, அன்பாக‌ இருக்கின்ற‌ன‌. மிருக‌ வ‌ர்க்கத்தில் நாம் பார்த்துக்கொண்டேயிருப்ப‌து யானையைத்தான்.
ம‌னித‌வ‌ர்க்க‌த்தில் குழ‌ந்தை என்றால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து. கெட்ட‌ எண்ண‌மே இல்லாதது குழ‌ந்தை. ஆன‌ந்த‌மாக‌ விளையாடிக்கொண்டு இருப்ப‌து குழ‌ந்தை. அதைப் பார்த்தாலே நம‌க்கும் ஸந்தோஷ‌மாக‌ இருக்கிற‌து.
பிள்ளையார் யானைக்கு யானை; குழ‌ந்தைக்குக் குழ‌ந்தை. அதனால் அவ‌ரை எத்த‌னை பார்த்தாலும் போதும் என்ற‌ திருப்தி உண்டாவ‌தில்லை. க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் இல்லாத‌ குழ‌ந்தை ம‌னசு அவ‌ருக்கு. குழ‌ந்தை போல் ந‌ல்ல‌ உள்ள‌ம்; யானை மாதிரி தேக‌ பல‌ம், புத்தி கூர்மை; எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ தெவிட்டாத‌ அழ‌கு; ஆன‌ந்த‌ம் பொங்கிக் கொண்டிருக்கிற‌ ரூபம்.
சேராத‌தெல்லாம் அவ‌ரிட‌ம் ஸ்வபாவமாக‌ச் சேருகிற‌து. க‌ழுத்துக்கு கீழே குழ‌ந்தை; ம‌னித‌வ‌ர்க்க‌ம். மேலே முக‌ம் யானை; மிருக‌வ‌ர்க்க‌ம். ஆனால், அவ‌ர் வாஸ்த‌வ‌த்தில் தேவ‌வ‌ர்க்க‌ம். தேவ‌ர்க‌ளுக்குள் முத‌ல் பூஜை பெறும் தெய்வ‌மாக‌ இருக்கிறார்.
குழ‌ந்தையாக‌ இருந்துகொண்டே மஹா பெரிய‌ த‌த்வ‌ங்க‌ளுக்கு ரூப‌கமாக‌ (Personification) இருக்கிற‌ பிள்ளையாரிட‌ம் ப‌ல‌ தினுசான‌ மாறுபாடுக‌ள் (Contrasts). இதிலே ஓர் அழ‌கு. வித்தியாச‌மான‌தெல்லாம் அவ‌ரிட‌ம் சேர்ந்திருப்பதாலேயே அவ‌ரிட‌ம் எல்லாம் ஐக்கிய‌ம் என்றாகிற‌து. உதார‌ண‌மாக‌, ஒரு கையில் ஒடிந்த‌ த‌ந்த‌ம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்க‌ட்டை வைத்திருக்கிறார். அத‌ற்குள் தித்திப்பாக‌ இருக்கிற‌ வ‌ஸ்துவுக்குப் பெய‌ர் பூர்ண‌ம். பூர்ண‌ம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற‌ த‌ந்த‌ம் மூளி; இன்னொன்றிலோ முழுமை. எல்லாம் நிறைந்த‌ பூர‌ண‌ப் பொருள் பிள்ளையாரேதான். இதை அறிந்துகொள்வ‌துதான் பேரான‌ந்த‌ம். ஆன‌ந்த‌த்திற்கு இன்னொரு பேர் மோத‌ம், மோத‌க‌ம். கொழுக்க‌ட்டைக்கும் மோத‌க‌ம் என்றே பெய‌ர்.
இன்னொரு மாறுபாடு: பிள்ளையார் குழ‌ந்தை. அத‌னால் பிர‌ம்ம‌ச்சாரி. ஆனால் இவ‌ர் யானையாக‌ வ‌ந்து வ‌ள்ளியை விர‌ட்டிய‌தால்தான் அவ‌ள் ஸுப்ரம்ம‌ண்ய‌ ஸ்வாமியை க‌ல்யாண‌ம் செய்துகொண்டாள்! இன்றைக்கும் க‌ல்யாண‌ம் ஆக‌வேண்டுமானால் இந்த‌ க‌ட்டைப் பிர‌ம்ம‌ச்சாரியை வேண்டிக்கொள்கிறார்க‌ள். இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்? அவ‌ர் இருக்கிற‌ நிலையில் அவ‌ருக்கு வேண்டாத‌தையெல்லாம் கூட‌, அவ‌ர் நிலைக்கு மாறாக‌ இருக்கிற‌ ந‌ம‌க்குப் ப‌ர‌ம‌ க‌ருணையோடு கொடுத்துக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தூக்கிவிடுக்கிறார்.
‘க‌ல்லுப் பிள்ளையார்’ என்ப‌த‌ற்கேற்கத் தாம் உட்கார்ந்த‌ இட‌த்தைவிட்டு அசையாம‌லே இருந்தாலும் ப‌க்த‌ர்க‌ளை ஒரே தூக்காக‌ தூக்கி உச்ச‌த்தில் சேர்த்து விடுவார். அவ்வையாரை இப்ப‌டிததான் க‌டைசியில், தாம் இருக்கிற‌ இட‌த்திலிருந்தே தும்பிக்கையால் ஒரு தூக்குத் தூக்கி கைலாஸத்திலேயே கொண்டு சேர்த்து விட்டார்!
பிள்ளையாரைப் பார்க்க‌ப் பார்க்க‌ ந‌ம‌க்கு மேலே மேலே இப்ப‌டிப் ப‌ல‌ த‌த்துவ‌ம் தோன்றுகிற‌து. இதுவும் ந‌ம் அறிவின் அள‌வுக்கு எவ்வ‌ள‌வு எட்டுகிற‌தோ அவ்வ‌ள‌வுதான். வாஸ்த‌வ‌த்தில் ந‌ம‌க்குத் தெரிவ‌த‌ற்கும் அதிக‌மாக‌, அவ‌ரிட‌ம் பெருமைக‌ள் அள‌விட‌ முடியாம‌ல் இருக்கின்ற‌ன‌.
‘குழ‌ந்தையும் தெய்வ‌மும் கொண்டாடும் இட‌த்திலே’ என்பார்க‌ள். தெய்வ‌மே குழ‌ந்தையாக‌ வ‌ந்துவிட்ட‌து பிள்ளையாரில். அத‌னால் குழ‌ந்தை ஸ்வாமியாக‌க் கொண்டாடுகின்ற‌ த‌மிழ்நாட்டில், ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாம‌ல் எங்கு பார்த்தாலும் உட்கார்ந்து கொண்டு அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவ‌ர் செய்த‌ அநுக்கிர‌ஹ‌த்தினால்தான் அந்த‌ப் பாட்டி தமிழ் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாள்.
அந்த‌ப் பாட்டி யார் என்றால், அவ‌ள்தான் அவ்வையார்.     பிள்ளையார் – அவ்வையார்.!
Source….Input from a friend of mine
natarajan

பொங்கல் பிள்ளையார்…….

பொங்கல் என்றாலே உழவுக்கு வந்தனை செய்யும் விதமாக ஆதவனை வணங்குவது, தித்திக்கும் கரும்பைச் சுவைத்து மகிழ்வது இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு சிறப்பான சம்பிரதாயம் ஒன்று இருந்து வருகிறது. அதுதான் பொங்கல் அன்று பிறக்கும் தனிச் சிறப்பு மிக்க பிள்ளையார்.

தைப் பொங்கலிடத் தயாராகும் போது முதலில் வீட்டு வாசலில் கிழக்கு நோக்கி விளக்கு வைத்து, அதன் முன்பு ஒரு பெரிய வாழையிலையை விரித்து, அதில் அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகளை வைத்து, ஒரு டம்பளரில் பொங்கலிடப் போகும் அரிசியையும் வைத்து வணங்குவார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விளக்குடன் சேர்த்து மற்ற கடவுளரைக் காட்டிலும், முதன்மைக் கடவுளான பிள்ளையாரையும் அங்கு வைத்திருப்பார்கள். அதுவும் அந்த பிள்ளையார், ஒவ்வொரு இல்லத்தினரும் அவர்கள் கைகளினால், உருவாக்கிய சிறப்புப் பிள்ளையார்கள்.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உலகின் முழுமுதற் கடவுளான கணபதிக்கும் சேர்த்து வந்தனை செய்வதாக அர்த்தம். சூரிய பகவான் முன்பு பொங்கலிட்டு, முதலில் பிள்ளையாருக்கும் சேர்த்து படைக்கப்படுகிறது என்பது பொருள்.

பொதுவாக மூன்று வகைப் பிள்ளையார்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒன்று, சாணத்தால் ஆன பிள்ளையார். இரண்டாவது, மஞ்சளால் ஆன பிள்ளையார். மூன்றாவது, சந்தனத்தால் ஆன பிள்ளையார். இந்த மூன்று திவ்யத்துவம் பொருந்திய பொருட்களைப் பயன்படுத்தியே, பிள்ளையார் உருவாக்கப்படுகிறார்.

சாணப் பிள்ளையார்

சாணம் ஒரு கிருமி நாசினி என்பது அனைவரும் அறிந்ததே. தூய்மைப்படுத்துவதே இதன் சிறப்பு. பொங்கல் அன்று, அனைவரும் மனதில் அசுத்த எண்ணங்களைத் துறந்து, தூய உள்ளத்தோடு ஒன்று சேர்த்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக சாணத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சள் இல்லாத ஒரு மங்கள நிகழ்வு என்பதே கிடையாது. பல்வேறு மருத்துவ குணங்கள் முதல் பலவிதமான மங்காத புகழ்களைத் தன்னுள்ளே கொண்டது மஞ்சள். இந்த மங்கள நாளில், அனைவரும் சகல ஆரோக்கியத்தையும் பெற்று, புகழோடு வாழ்வதற்காகவே, மஞ்சளால் ஆன பிள்ளையார் செய்து வணங்கப்படுகிறது.

சந்தனப் பிள்ளையார்

எந்த நிலையிலும் மாறாத தன்மையுடன், நல்ல மணம் பரப்பும் குணமுடையது சந்தனம். அதுபோல, மனிதன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தன்னிலை மாறாது, நன்னெறிகளை செய்து வாழ வேண்டும் என்பதற்காகவே சந்தனத்தால் ஆன பிள்ளையார் செய்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு மூன்று வகைப் பிள்ளையார்களை உருவாக்கி, அதற்குக் குங்குமப் பொட்டு வைத்து, பிள்ளையாருக்கே உரித்தான அருகம்புல்லை அணிவித்து வணங்க வேண்டும், இதன் மூலம் சகல செல்வங்களும் வந்துசேரும் என்பதே ஐதீகம். இயற்கையை போற்றும் இந்த நன்னாளில், சிறப்புமிக்க இந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு கடவுளைப் படைத்து வணங்கி, அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்கள் வைத்த இந்த சம்பிரதாயத்தை நாமும் போற்றிப் பின்பற்றுவோம்.

source…..கா. ராஜசேகர் in http://www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day…”Nothing Untoward can happen Wherever Ganapathi is Present…”

Sathya Sai Baba

Easwara blessed Ganapathi saying, “I have many attributes, but not Your intelligence. Hence, before offering worship to Me, let all people worship You. This is the boon I confer on You.” Easwara is a parent who conferred such an honour of a higher status than His own on His son. Hence Ganapathi represents no commonplace principle. He is the embodiment of all potencies. He is the abode of every kind of intelligence. Nothing untoward can happen wherever He is present. Ganapathi occupies the position of one who is the source of all prosperity. Moreover, when He is invoked before any undertaking, there will be no impediments to its completion. People look upon the Vighneswara festival as some routine affair. But Vighneswara embodies all the forms and all the powers of all the deities. It is not enough to worship Him once a year. We must worship Him always.

” தப்பாமல் வந்து விடு பிள்ளையார் அப்பனே …”

 

pillayaru

தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்

அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்

உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு

நான் தருவேன் அப்பா …..

தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ

தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி

சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா…

இப்போ  என் பேரப்பிள் ளையும்  உனக்காக

சாப்பிடாமல் என்னுடன் காத்திருக்கிறான் உன்னைப்பார்க்க

அப்பனே… தப்பாமல்  நீ வர வேணும் இன்று …

அப்பம், அமுது எல்லாம் என் பேரனுக்கும்  இன்று நீ ஊட்டி , நீயும்

சாப்பிட்டால்  வேறு என்ன பேறு வேண்டும்  எனக்கு ?…அப்பனே

தப்பாமல் வந்து விடு பிள்ளையார் அப்பனே …!!!

 

நடராஜன்

16 செப் 2015

Camp…Brisbane , Australia

 

 

 

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!….

வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும்  விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு  தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.

இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.

இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய  வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும்  கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.

முழுமுதற் கடவுள்  விநாயகர். இவர் இல்லாத  ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப்  பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.

முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும் தேவகோட்டச் சிற்பம் – விநாயகர்.

பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை,  பாசமும் அங்குசமும் ஆகும்.  இந்த அடையாளங்கள்,  தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி  ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.

பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது  ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.

கணபதி வரலாறு

விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான்,  கணபதியைப் பற்றி பாடும்பொழுது  வாதாபி கணபதியே எனப் பாடினர்.

அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி  விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே  தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

திருச்சி மலைக்கோட்டையின்  கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில்  செதுக்கப்பட்டுள்ள  விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு  முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.

ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.

உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும்,  விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே  காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால் பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய பிள்ளையார்.

‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.

இலக்கியங்களில் கணபதி

சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு  வாய்ந்த பாடல் –

‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’

என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.

விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.

நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி  அருள வேண்டுகிறேன்.  இவன் திருவடிகளை நாமும்  இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.

Source…..ச.செல்வராஜ், தொல்லியல் துறை…www.dinamani.com

Natarajan

ஆனைமுகனும் அருகம்புல்லும்!….

புண்ணியம் செய்வாருக்கு பூவுண்டு; நீருண்டு. அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும் என்பார் திருமூலர். இறைவனுக்கு நாம் மலர்களையும், அருகம்புல், வில்வம், துளசி, வன்னி மற்றும் மந்தார இலைகளை சாற்றுகிறோம். இவ்வாறு இறைவனுக்கு சாற்றப்படும் இலைகளில், அருகம்புல்லின் மகிமையை கூறும் கதை இது:
கணபதி வழிபாட்டை முடித்து எழுந்தார் கவுன்டின்ய முனிவர். அவர் மனைவியான ஆசிரியை (இது பதவியல்ல; அப்பெண்மணியின் பெயர்.) கணவரின் திருவடிகளில் விழுந்து வணங்கியவள், ‘சுவாமி… நறுமணமும், அழகும் மிகுந்த மலர்கள் பல இருக்க, தாங்கள் அருகம்புல்லை கொண்டு, ஆனைமுகனை அர்ச்சிக்கிறீர்களே… இதற்கு காரணம் என்ன?’ என்று கேட்டாள்.


அதற்கு கவுன்டின்யர், ‘பெண்ணே… கர்ப்பக்கிருகத்தில் கனல் மூண்டு எழும்; அதனால், அங்கிருக்கும் ஆனைமுகனுக்கு அதிக குளிர்ச்சி வேண்டும். குளிர்ச்சியை தருவது அருகம்புல்; அருக வேர் தைலத்தால் தீராத வெம்மையும் தீரும். புராணங்களில் கூறப்பட்டுள்ள இந்த அடிப்படை உண்மையை உணராவிட்டால், அவை வெறுங்கதைகளாக தான் தோன்றும்…’ என்றவர், அக்கதையை கூறத் துவங்கினார்…
‘யமனுடைய மகன் அனலன்; பெயருக்கு ஏற்றபடி இவன் அடுத்தவர் உடம்பில் அவருக்கு தெரியாமல் புகுந்து, அவர்களை உருக்கி, சத்தை உண்பது தான் இவன் வேலை. மண்ணுலகில் இருப்பவர்களையெல்லாம் இவ்வாறு உருக்குலைத்த அனலன், அதன்பின், தேவலோகத்தில் புகுந்தான். அவனின் குணம் அறிந்த தேவர்கள் பயந்து, ‘ஆனைமுக வள்ளலே… அனலனிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்…’ என வேண்டினர்.
‘விக்னம் நீக்கும் விநாயகர் அங்கே தோன்றி, துதிக்கையால் அனலனை சுருட்டி விழுங்கினார். ஆனால், அடுத்த வினாடி அனைவரின் வயிரும் எரிந்தது; தாங்க முடியாமல் தடுமாறினர். விநாயகரின் திருமேனி குளிர்ந்தால் தான், அனைவரின் துயரமும் தீரும் என உணர்ந்த தேவர்கள், சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகள் மற்றும் குளிர்ச்சி மிகுந்த அரவங்களை விநாயகரின் திருமேனியில் சாற்றினர்; பலனேதும் இல்லை. ‘அப்போது, முனிவர்கள் ஒவ்வொருவரும், 21 அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றினர். விநாயகரின் வயிறு குளிர்ந்த அதே வினாடியில், அனைவரின் வயிறும் குளிர்ந்தது. அன்று முதல், ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றும் நியதி உண்டானது….’ என்றார்.
உடலில் சூடு அதிகமாகும் போது, எதிர்விளைவுகள் உண்டாகி, உடல்நிலை பாதிக்கும். அப்போது பக்கவிளைவுகள் இல்லாதவாறு உடல் கொதிப்பை ஆற்றுவதோடு, ஆரோக்கியத்தையும் அளிப்பது அருகம்புல். அதனாலே, நம் முன்னோர் அருகம்புல் சாறு அருந்தச் சொன்னார்கள்.
ஆகவே, ஞானநூல்களின் அடிப்படை உண்மையை உணர்வோம்; ஐங்கரன் அருளால் அல்லல்கள் நீங்கும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
ஓட வல்லார் தமரோடு நடாவுவன்
பாட வல்லார் ஒலி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே!
விளக்கம்: தல யாத்திரை செல்பவர்களோடு செல்வேன்; சிவபெருமானின் புகழை பாடுவோரின் பாடல் ஒலியை கேட்டு, இன்புறுவேன். உள்ளத்தில் இறைவனை தேடி, இறையருளை அடைய வல்லவர்களுடன் சேர்வேன்.
கருத்து: புனித  தலங்களுக்கு செல்வதும், இறைவனின் புகழைப் பாடுவதும், இறையடியார்களுடன் இணைந்து இருப்பதும், இறை அருளை அடையும் வழி.

Source….www.dinamalar.com

Natarajan

 

” ஆணவமும் பொறாமையும் அறிவுக்கு சத்துரு …”

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.


கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.
அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.
இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.
‘நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை
வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்…’ என, சபதமிட்டார் கணேச பட்டர்.
மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, ‘ஸ்வாமி… உள்ளே வரலாமா?’ எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். ‘ஸ்வாமி… நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்…’ என்றார் துகாராம்.
அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, ‘பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத
எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்…’ என்றார்.
துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், ‘சரி… இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்…’ என்றார்.
இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, ‘அப்படியா… இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்…’ என்றார்.
தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்… என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.
அப்போது துகாராம், ‘ஸ்வாமி… விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். ‘கணேசா காப்பாற்று…’ என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை…’ என்று கண்களை மூடியபடியே சொன்னார்.
ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.
‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்…’ என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.
ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.
பி.என்.பரசுராமன் in Dinamalar.com

திருமந்திரம்!
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!
கருத்து:
எலும்புகளால் பின்னி, நரம்புகளால் இழுத்துக் கட்டி, ரத்தம், சதையால் அமைக்கப்பட்ட, உடம்பு எனும் வீட்டில், உயிர் என்பது இன்பமாக நிலை பெற்று இருக்கிறது. அவ்வாறு உடம்பையும், உயிரையும் சேர்த்துத் திருவருள் புரிந்த இறைவனை, துாய்மையான அன்பினால் நான் நாடுகிறேன்.

Source……….www.dinamalar.com

Natarajan

” ” அச்சு இற்று முறிந்த இடம் … அச்சரப்பாக்கம்…” !!!

“இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்பெரியவா”

(கைலாஸ சங்கரனின் மறு அவதாரமோ!)

734324_514749501889171_935875765_n.jpg

ராமேச்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த

ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்

விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே ‘ஆக்ஸில்’

உடைந்து நின்று விட்டது. இளையாத்தங்குடியிலிருந்த

பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“எந்த இடத்தில் நின்று விட்டது” என்று வினவுகிறார்.

“அச்சரப்பாக்கத்தில்” என்று பதில் வருகிறது.

பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.

இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.

இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே

தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்

முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.

ராமேச்ர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே

விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.

மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்

நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்

தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே

ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்

தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்

சொல்லுகிறார்.

“பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே

திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். ‘எந்தக் காரியம்

ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்

என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே

செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்

செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது

அவர் புறப்பட்ட ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்

அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு

தான் அது புறப்பட்டது.

அச்சு இற்று முறிந்த போன இடம்தான் ‘அச்சரப்பாக்கம்’ என்று

இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்

நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!”

எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு

ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.

“கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு

முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்

போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்

அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!”

என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்

Read more: http://periva.proboards.com/thread/8611/#ixzz3RUElITvx

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan